
கீழடி எல்லாம் ஏமாற்று வேலை, தமிழர்களுக்கு என்று தனி அடையாளம் இருந்தது கிடையது என்று முன்னாள் மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறியதாக ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:
தந்தி தொலைக்காட்சி நியூஸ் கார்டு பகிரப்பட்டுள்ளது. அதில், பொன். ராதாகிருஷ்ணன் புகைப்படம் உள்ளது. அதன் அருகில், கீழடி எல்லாம் ஏமாற்று வேலை. தமிழர்களுக்கு என்று தனித்த அடையாளம் இருந்தது கிடையாது. ஹிந்து கலாச்சாரம்தான் தமிழ் கலாச்சாரம் – பொன்.ராதாகிருஷ்ணன்” என்று உள்ளது. இந்த நியூஸ் கார்டு 2019 செப்டம்பர் 20ம் தேதி வெளியானதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
நிலைத்தகவலில், “சிலர் ஆசைக்கும் தேவைக்கும் வாழ்வுக்கும் வசதிக்கும் ஊரார் கால் பிடிப்பார்.. ஒரு மானமில்லை அதில் ஈனமில்லை அவர் எப்போதும் வால் பிடிப்பார்..!” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த பதிவை, Tamilan Kusumpukaran என்ற ஐ.டி நபர் 2019 செப்டம்பர் 20ம் தேதி வெளியிட்டுள்ளார்.
உண்மை அறிவோம்:
திராவிடம் பற்றி சர்ச்சைக்குரிய வகையில் அவ்வப்போது கருத்துக்களைத் தெரிவித்து வருபவர் மத்திய இணை அமைச்சராக இருந்த பொன்.ராதாகிருஷ்ணன். கடந்த ஆண்டு திராவிடம் தொடர்பாக அவர் பேசியது பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது. அதைத் தொடர்ந்து நானும் பச்சை திராவிடன்தான் என்று பேசி பரபரப்பை ஏற்படுத்தினார்.
சில தினங்களுக்கு முன்பு தமிழர்கள் நன்றி மறந்தவர்கள் என்று பொன். ராதாகிருஷ்ணன் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது. பிறகு, தமிழ் மொழி வளர்ச்சிக்கு உதவும் நபர்களை அரவணைக்கத் தயாராக இல்லாதவர்களை அவ்வாறு சொன்னேன் என்று சமாளித்தார்.
இந்த நிலையில், கீழடி எல்லாம் ஏமாற்று வேலை என்று அவர் கூறியதாக தந்தி தொலைக்காட்சி நியூஸ் கார்டு வைரல் ஆகி வருகிறது. சில தினங்களுக்கு முன்புதான் நன்றி மறந்தவர்கள் தமிழர்கள் என்று பொன் ராதாகிருஷ்ணன் கூறியிருந்தார் என்பதால், இதுவும் உண்மையாக இருக்கும் என்று நம்பி பலரும் இதை ஷேர் செய்து வருகின்றனர்.
மேலோட்டமாக பார்த்தால் தந்தி தொலைக்காட்சி வெளியிட்ட நியூஸ் கார்டு போலவே தெரிகிறது. ஆனால், பாண்ட், பின்னணி டிசைன் போன்றவற்றில் வித்தியாசம் இருப்பது தெரிகிறது. எனவே, கீழடி ஆய்வு பற்றி சர்ச்சைக்குரிய வகையில் பொன்.ராதாகிருஷ்ணன் ஏதும் பேசியுள்ளாரா என்று கூகுளில் தேடினோம். ஆனால் அப்படி எந்த ஒரு செய்தியும் நமக்கு கிடைக்கவில்லை.
தந்தி தொலைக்காட்சி ஃபேஸ்புக் பக்கத்தில் இந்த நியூஸ் கார்டு வெளியாகி உள்ளதா என்று தேடினோம். 20ம் தேதி பொன் ராதாகிருஷ்ணன் பேசியது தொடர்பாக இரண்டு பதிவுகளை தந்தி தொலைக்காட்சி வெளியிட்டு இருந்தது. அதில் ஒன்று நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட நியூஸ் கார்டைப் போல இருந்தது.
அந்த நியூஸ் கார்டை எடுத்துப் பார்த்தோம். அதில், “நடிகர் விஜய் பேசியதை பெரிதாக எடுத்துக்கொள்ளத் தேவையில்லை – பொன்.ராதாகிருஷ்ணன்” என்று இருந்தது. இந்த நியூஸ் கார்டை எடுத்து விஷமத்தனமான கருத்தை வைத்து பதிவிட்டது உறுதியானது.
நம்முடைய ஆய்வில், தந்தி டி.வி பெயரில் வெளியான நியூஸ் கார்டு உண்மையில் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் கீழடி தொடர்பாக பொன்.ராதாகிருஷ்ணன் கூறியதாக பரவும் ஃபேஸ்புக் பதிவு போலியானது என்று உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில், மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு தவறானது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.

Title:கீழடி எல்லாம் ஏமாற்று வேலை என்று பொன்.ராதாகிருஷ்ணன் கூறியதாகப் பரவும் தகவல்!
Fact Check By: Chendur PandianResult: False
