
கொரோனா பயம் காரணமாக போப் பிரான்சிஸ் பயந்து ஓடியதாக ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:

Facebook Link | Archived Link 1 | Archived Link 2 |
எட்டு நொடிகள் மட்டுமே ஓடக்கூடிய வீடியோவை வெளியிட்டுள்ளனர். அதில், போப் பிரான்சிஸ் நடந்து செல்கையில் பெண்மணி ஒருவர் அவரது கையைப் பிடித்து இழுத்து கை குலுக்குகிறார்… கோபம் கொண்ட போப் பிரான்சிஸ் அவரது கையில் அடித்துவிட்டு, கையை உதறிவிட்டு கோபமாகச் செல்கிறார்.
நிலைத் தகவலில், “கொரானா பயத்தில்… ஏசுவின்ட மோன் #போப் #பேண்டவர் பயந்து ஓடியபோது” என்று குறிப்பிட்டுள்ளனர். இந்த பதிவை, Shanmugaraj V என்பவர் 2020 மார்ச் 17ம் தேதி வெளியிட்டுள்ளார். பலரும் இதை ஷேர் செய்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
கடந்த ஜனவரி 1ம் தேதி புத்தாண்டு பிரார்த்தனை முடித்து வந்த போப் பிரான்சிஸ் மக்களுக்கு கை கொடுத் வாழ்த்துக்கள் கூறினார். அப்போது, பெண் மணி ஒருவர் கையைப் பிடித்து இழுக்கவே, கோபம் கொண்டு அவரது கையில் அடித்துவிட்டு சென்றார். அதன் பிறகு தன்னுடைய செயலுக்கு மன்னிப்பும் கேட்டார் போப் பிரான்சிஸ்.

bbc.com | Archived Link 1 |
theguardian.com | Archived Link 2 |
போப் பிரான்சிஸ் கொரோனா பாதிப்பு காரணமாக தப்பி ஓடியதாக நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட ஃபேஸ்புக் பதிவில் குறிப்பிட்டுள்ளனர். ஆனால், அதற்கு எந்த ஒரு ஆதாரத்தையும் அளிக்கவில்லை. ஜனவரி 1, 2020 அன்று நடந்தது என்பதை உறுதி செய்வதற்கான ஆதாரங்கள் கிடைக்கிறதா என்று தேடினோம். பெண்ணின் கையில் அடித்த போப் பிரான்சிஸ் என்று கூகுளில் டைப் செய்து தேடியபோது அது தொடர்பான செய்திகள் மற்றும் வீடியோ நமக்கு கிடைத்தது.
பிபிசி, தி கார்டியன் என உலகின் முன்னணி ஊடகங்களில் அந்த செய்தி வெளியாகி இருந்தது. தமிழில் நியூஸ்18 உள்ளிட்ட எல்லா ஊடகங்களும் அந்த செய்தியை வெளியிட்டிருந்தன. நியூஸ் 18ன் தமிழில் சிஎன்என் செய்தி நிறுவனம் வெளியிட்டிருந்த ட்வீட் வீடியோவோடு செய்தி வெளியாகி இருந்தது. அதில், முழு வீடியோவும் இருந்தது.
வாட்டிகனில் உள்ள புனித ராயப்பர் சதுக்கத்தில் நடந்த நிகழ்ச்சியில் அவர் மக்களுக்கு கைகொடுத்து வாழ்த்துக் கூறி வருகிறார். அப்போது எதிர் பக்கத்தில் உள்ளவர்களுக்கு வாழ்த்துக் கூற அங்கிருந்து நகர்ந்து செல்கிறார். அப்போது பெண் ஒருவர் போப் பிரான்சிஸ் கையை பிடித்து இழுக்கிறார். இதில், தடுமாறிய போப் பிரான்சிஸ் கோபத்தில் அந்த பெண்ணின் கையில் அடித்துவிட்டு, தன்னுடைய கையை உதறிச் செல்வது தெளிவாகத் தெரிகிறது.
tamil.news18.com | Archived Link 1 |
tamil.indianexpress.com | Archived Link 2 |
“தனது கையைப் பிடித்து வேகமாக இழுத்ததால் பொறுமை இழந்து பெண்ணை அடித்த போப் பிரான்சிஸ் தனது செயலுக்காக மன்னிப்பு கோரியுள்ளார்” என்று அந்த செய்தியில் குறிப்பிட்டிருந்தனர்.
கொரோனா எப்போது வெளிப்பட்டது என்று தேடினோம். கொரோனா பாதிப்பு பற்றி முதன் முதலில் சீனா டிசம்பர் 31, 2019 அன்று உலக சுகாதார நிறுவனத்துக்கு அறிவித்ததாக சி.என்.என் தெரிவிக்கிறது. டிசம்பர் 12 முதல் டிசம்பர் 29க்குள்ளாக கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டிருக்கலாம் என்று வுகான் நகர சுகாதார துறை கூறுகிறது.
ஜனவரி 5ம் தேதிதான் சந்தேகத்துக்குரிய கிருமித் தொற்று சார்ஸ், மெர்ஸ் வைரஸ் இல்லை. இது வகையானது என்று வுகான் சுகாதாரத் துறை அறிவிப்பு வெளியிட்டது. இதன் மூலம் பழைய வீடியோவை வெளியிட்டு விஷமத்தனமான வதந்தி பரப்பியிருப்பது உறுதியாகிறது.

edition.cnn.com | Archived Link |
நம்முடைய ஆய்வில்,
போப் பிரான்சிஸ் பெண்ணின் கையை அடித்துவிட்டு செல்லும் வீடியோ டிசம்பர் 31 நள்ளிரவு, (ஜனவரி 1 அதிகாலை) எடுக்கப்பட்டது என்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
திடீரென்று தன்னை இழுத்ததால் தடுமாறி கோபத்தில் அடித்துவிட்டதாக பிரான்சிஸ் மன்னிப்பு கேட்ட செய்தி கிடைத்துள்ளது.
கொரோனா பாதிப்பு பற்றிய அறிவிப்பு அதன் பிறகுதான் வெளியானது என்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்த ஆதாரங்கள் அடிப்படையில், கொரோனா பீதி காரணமாக கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் தலைவர் போப் பிரான்சிஸ் தப்பி ஓடுகிறார் என்று பகிரப்படும் தகவல் தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில், மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு தவறானது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.
