திமுக.,வின் ‘ஒன்றிணைவோம் வா’ சிறந்த திட்டம் என்று கூறினாரா மோடி?
‘’தி.மு.க-வின் ‘ஒன்றிணைவோம் வா’ திட்டம் சிறந்த முன் உதாரணமாக உள்ளது,’’ என்று பிரதமர் மோடி கூறியதாக ஒரு தகவல் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:
வாசகர் ஒருவர் மேலே உள்ள பதிவின் படத்தை நம்முடைய ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் பிரிவின் வாட்ஸ் ஆப் எண்ணுக்கு (+91 9049044263) அனுப்பி, ‘இது உண்மையா?’, என்று கேட்டிருந்தார். அதன் அடிப்படையில் இந்த உண்மை கண்டறியும் ஆய்வை மேற்கொண்டோம்.
பிரதமர் மோடி பேசியது தொடர்பாக நியூஸ் 7 தமிழ் ஒளிபரப்பு செய்த காட்சிகளை ஸ்கிரீன்ஷாட் எடுத்து பகிர்ந்துள்ளனர். அதில், "தி.மு.க-வின் ஒன்றிணைவோம் வா சிறந்த முன் உதாரணமாக இருந்தது. தமிழ்நாட்டில் தி.மு.க சிறப்பாக மக்கள் பணி செய்தது, மகிழ்ச்சியளிக்கிறது" என்று கூறியதாக குறிப்பிட்டிருந்தனர்.
இந்த பதிவை, அரவக்குறிச்சி தொகுதி தி.மு.க தகவல் தொழில்நுட்ப அணி என்ற ஃபேஸ்புக் பக்கத்தில் Guna Sekar என்பவர் 2020 மே 14ம் தேதி பகிர்ந்துள்ளார். கட்டுரை தயாரான நிலையில் பதிவு நீக்கப்பட்டு இருந்தது. இருப்பினம் பலரும் இதை ஷேர் செய்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
பிரதமர் மோடி மே 13ம் தேதி இரவு 8 மணிக்கு நாட்டு மக்களிடம் தொலைக்காட்சி மூலமாக உரையாற்றினார். அவர் இந்தியில் பேசியதால், மொழிமாற்றம் செய்து செய்தி நிறுவனங்கள் செய்தி வெளியிட்டன. நியூஸ் 7 தமிழ் வெளியிட்ட செய்தியில் பிரதமர் மோடி தி.மு.க-வை புகழ்ந்து பேசியது போல புகைப்படத்தை பகிர்ந்துள்ளனர்.
பிரதமர் மோடி தன்னுடைய உரையில் தி.மு.க பற்றி எதையுமே குறிப்பிடவில்லை. அப்படி எந்த ஒரு செய்தியும் இல்லாத நிலையில், வேண்டுமேன்றே விஷமத்தனமாக இந்த படத்தை உருவாக்கியிருக்கலாம் என்பது புரிந்தது. இதை உறுதி செய்ய ஆய்வு மேற்கொண்டோம்.
முதலில், பகிரப்பட்டுள்ள தகவலில் உள்ள ஃபாண்டும், நியூஸ் 7 தமிழ் பயன்படுத்தும் ஃபாண்டுக்கும் வித்தியாசம் இருப்பதைக் காண முடிந்தது. எனவே, பிரதமர் மோடி பேச்சு தொடர்பாக நியூஸ் 7 தமிழ் வெளியிட்ட வீடியோ பதிவை தேடி எடுத்தோம். அதில் தி.மு.க-வைப் பற்றி மோடி கூறியதாக பதிவு இல்லை.
இது தொடர்பாக நியூஸ் 7 தமிழ் ஆன்லைன், சமூக ஊடகப் பிரிவைத் தொடர்புகொண்டு கேட்டபோது இது போலியானது என்று உறுதி செய்தனர். இந்த ஆதாரங்கள் அடிப்படையில், தி.மு.க-வின் ஒன்றிணைவோம் வா சிறந்த முன் உதாரணமாக உள்ளது என்று மோடி கூறியதாக பகிரப்படும் பதிவு தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில், மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு தவறானது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049044263) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுவோம்.
Title:திமுக.,வின் ‘ஒன்றிணைவோம் வா’ சிறந்த திட்டம் என்று கூறினாரா மோடி?
Fact Check By: Chendur PandianResult: False