மட்டன் சாப்பிட்டதால் கொரோனா வைரஸ் பரவியதா?

Coronavirus சமூக ஊடகம் | Social தமிழகம் மருத்துவம் I Medical

மட்டன் சாப்பிட்டால் கொரோனா வைரஸ் பரவியதாக ஒரு பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

Facebook LinkArchived Link

நியூஸ் 7 தமிழ் பழைய நியூஸ் கார்டு பகிரப்பட்டுள்ளது. அதில், “கேரளாவையொட்டி தமிழகத்திலும் ஆட்டுக்கறி உண்டதால் மூன்று பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த பதிவை, தமிழன் சிவா என்பவர் 2020 மார்ச் 16ம் தேதி பதிவிட்டுள்ளார். நிலைத் தகவலில் “900ஓவாயாடா? விக்குறீங்க! ஊஊஊ…ஊஊஊ..ஊஊஊ.” என்று குறிப்பிட்டுள்ளார். இதை பலரும் ஷேர் செய்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

கோழிக்கறி சாப்பிட்டால் கொரோனா வைரஸ் பரவுகிறது என்று சமூக ஊடகங்களில் வதந்தி பரப்பப்பட்டது. இதைத் தொடர்ந்து கோழிக்கறி விலை சரிந்தது. கோழி முட்டை, கறிக்கோழிகளை அழிக்கும் நிலைக்குக் கோழிப் பண்ணை உரிமையாளர்கள் சென்றுவிட்டனர். இதனால், கோழிக் கறி சாப்பிட்டால் கொரோனா வைரஸ் பரவும் என்பதை நிரூபித்தால் ரூ.1 கோடி தருவதாகக் கூட அறிவிப்பு வெளியிட்டனர். மகாராஷ்டிராவில் ஐந்து கோடி ரூபாய் தருவதாக தெரிவித்துள்ளனர். சிக்கன், மட்டன் மார்க்கெட்டை காலி செய்ய நினைப்பவர்கள் கொரோனாவை வைத்து அதை செய்து வருவதாக செய்திகள் வெளியாகி வருகின்றன.

இந்த நிலையில், மட்டன் விலை உயர்ந்துகொண்டே சென்றதால் சமூக ஊடகங்களில் கோழிக்கறியைப் பற்றி வதந்தி பரப்பியவர்கள், மட்டனை மறந்தது ஏனோ என்று கிண்டல் ரக பதிவுகளை வெளியிட்டு வந்தனர். ஆனால், இந்த பதிவாளர் வெளியிட்ட பதிவிலோ நியூஸ் 7 தமிழ் நியூஸ் கார்டு வெளியிட்டது போன்று பகிரப்பட்டுள்ளது. இது உண்மையா என்று ஆய்வு செய்தோம்.

மட்டன் சாப்பிட்டு கொரோனா வைரஸ் பரவியதாக செய்தி ஏதும் உள்ளதா என்று கூகுளில் தேடியபோது அது போன்று எந்த ஒரு செய்தியும் நமக்கு கிடைக்கவில்லை. அதே நேரத்தில் கோழிக்கறி, மட்டன், மீன் சாப்பிடுவதன் மூலம் கொரோனா வைரஸ் பரவும் தகவல் தவறானது என்று அமைச்சர்கள், எஃப்.எஸ்.எஸ்.ஏ.ஐ எனப்படும் இந்திய உணவு கட்டுப்பாட்டு அமைப்பின் தலைவர் கூறிய செய்திகள்தான் நமக்கு கிடைத்தன. 

economictimes.indiatimes.comArchived Link

தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் வெளியிட்ட ட்வீட்டில் மார்ச் 18ம் தேதி தமிழகத்தின் இரண்டாவது கொரோனா நோயாளி உறுதி செய்யப்பட்டதாக தெரிவித்திருந்தார். அதுவும் அந்த நபர் டெல்லியில் இருந்து வந்தார் என்றும் குறிப்பிட்டுள்ளார். ஆனால் அமைச்சர் அறிவிப்பு வெளியிடுவதற்கு இரண்டு நாட்களுக்கு முன்னரே, மூன்று பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது என்று பதிவிட்டுள்ளனர். இதன் மூலம் இந்த பதிவு தவறானது என்று உறுதியானது.

Archived Link

இந்த நியூஸ் கார்டு குறித்து நியூஸ் 7 தமிழ் ஆன்லைன் பிரிவு நிர்வாகியைத் தொடர்புகொண்டு பேசினோம். அப்போது அவர், இது போலியான நியூஸ் கார்டு, பல ஆண்டுகளுக்கு முன்பு பயன்படுத்திய இந்த டிசைனை இன்னும் எத்தனை காலத்துக்குத்தான் பயன்படுத்தி வதந்திகளை பரப்புவார்களோ” என்றார்.

இந்த ஆதாரங்கள் அடிப்படையில், மட்டன் சாப்பிட்ட மூன்று பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது என்று பகிரப்படும் நியூஸ் கார்டு போலியானது என்று உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில், மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு தவறானது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.

Avatar

Title:மட்டன் சாப்பிட்டதால் கொரோனா வைரஸ் பரவியதா?

Fact Check By: Chendur Pandian 

Result: False