
‘’நகைகள் திருடியதால் மோடி வீட்டை விட்டு துரத்தப்பட்டார்,’’ என்று அவரது சகோதரர் பேட்டி அளித்ததாகக்கூறி, ஒரு தகவல் சமூக ஊடகங்களில் பகிரப்படுகிறது. இதன்மீது உண்மை கண்டறியும் சோதனை செய்ய தீர்மானித்தோம்.
தகவலின் விவரம்:

Jas Far ஆகஸ்ட் 24, 2019 அன்று இந்த பதிவை வெளியிட்டுள்ளார். இதில், மோடி மற்றும் அவரது சகோதரர் பிரஹலாத் மோடியின் புகைப்படங்களை பகிர்ந்து, அதன் மேலே, ‘’மோடி சந்நியாசம் பெற்று வீட்டை விட்டு வெளியேறவில்லை… நகையை திருடியதால் வீட்டை விட்டு துரத்தியடித்தோம்… பிரஹலாத் மோடி… (நரேந்திர மோடியின் சகோதரர்)’’, என்று எழுதியுள்ளனர். இந்த பதிவை பலரும் உண்மை என நம்பி வைரலாக பகிர்ந்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
சம்பந்தப்பட்ட ஃபேஸ்புக் செய்தியின் கமெண்ட் பகுதியில், பலரும் இது தவறான தகவல் என பதிவிட்டுள்ளனர். அதை பார்த்த பின், நமது சந்தேகம் மேலும் அதிகரித்தது.

இவர்கள் சொல்வது போல, பிரஹலாத் தாமோதர்தாஸ் அவ்வப்போது மோடியை விமர்சித்து பேசுவதும், சர்ச்சையில் சிக்குவதும் வாடிக்கையாக உள்ளது. சமீபத்தில் கூட தனக்குப் போதிய போலீஸ் பாதுகாப்பு வழங்கவில்லை என்று கூறி அவர் போராட்டம் நடத்திய விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது. இதுபற்றி படிக்க இங்கே கிளிக் செய்யவும்.
இதுதவிர, ஏற்கனவே, இவர், தனது மோடி அவரது மனைவி பற்றிய விவரத்தை ரகசியமாக வைத்திருந்தது பற்றி விமர்சித்திருந்தார். இதன் வீடியோ விவரம் கீழே இணைக்கப்பட்டுள்ளது.
இதேபோல, பல விவகாரங்களில் மோடியை அவர் விமர்சித்திருக்கிறார். இதற்கான வீடியோ இணைப்பு ஒன்றும் கீழே தரப்பட்டுள்ளது.
இந்நிலையில்தான் நாம் ஆய்வு செய்யும் ஃபேஸ்புக் செய்தியும் வெளியிடப்பட்டுள்ளது. இதில் கூறியுள்ளதுபோல, மோடியின் சகோதரர் பிரஹலாத் தாமோதர் என்றேனும் சொல்லியிருக்காரா என தகவல் தேடினோம். நீண்ட நேரம் தேடியும் எந்த இடத்திலும் இதுதொடர்பான செய்தி ஆதாரம் கிடைக்கவில்லை.
ஆனால், சிறு வயதிலேயே புதுமையை தேடி வீட்டை விட்டு மோடி வெளியேறி விட்டார். இதுபற்றிய செய்தியை படிக்க இங்கே கிளிக் செய்யவும்.

மேலும், தனது சிறு வயது வாழ்க்கை பற்றியும், வீட்டை விட்டு ஏன் வெளியேற நேரிட்டது என்பது பற்றியும் மோடி விரிவாக, பேட்டி அளித்துள்ளார். அதன் வீடியோ ஆதாரத்தை கீழே இணைத்துள்ளோம்.
ஆர்எஸ்எஸ் மீது கொண்ட அதீத ஆர்வம் காரணமாக, சிறு வயதிலேயே வீட்டில் இருந்து வெளியேறிய மோடி ஒருகட்டத்தில் கட்டாயத்தின் பேரில் திருமணம் செய்துகொண்டார். ஆனாலும், யசோதாபென்னை பிரிந்து, மீண்டும் தீவிர அரசியலில் ஈடுபட தொடங்கிவிட்டார். இதுபற்றிய செய்தித்தொகுப்பை விரிவாகப் படிக்க இங்கே கிளிக் செய்யவும்.
தனிப்பட்ட காரணங்களாலேயே மோடி வீட்டை விட்டு வெளியேற நேரிட்டது. அவர் நகை திருடிவிட்டு வீட்டில் இருந்து ஓடவில்லை என தெரியவருகிறது. அப்படி நடந்திருந்தால், மோடி எங்கேனும் பேட்டியில் கூறியிருப்பார் அல்லது அவரது குடும்பத்தினர் கூறியிருப்பார்கள். ஆனால், யாரும் கூறவில்லை. இவர்கள் சொல்வது போல, பிரஹலாத் மோடியும் இப்படி எந்த புகாரும் மோடி மீது கூறவில்லை. எனவே, சுய அரசியல் நோக்கத்திற்காக, மோடி மீது தவறான புகாரை சுமத்தும் வகையில், இந்த ஃபேஸ்புக் பதிவு வெளியிடப்பட்டதாக, உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
உரிய ஆதாரங்களின்படி நாம் ஆய்வு செய்த ஃபேஸ்புக் செய்தியில் உண்மையில்லை என நிரூபிக்கப்பட்டுள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை மற்றவர்களுக்கு பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.

Title:நகைகள் திருடியதால் வீட்டை விட்டு மோடி துரத்தப்பட்டாரா?
Fact Check By: Pankaj IyerResult: False
