
‘’ராஜீவ்காந்தி மகன் பப்பு ராகுல் வின்சி இத்தாலியில் வாங்கி வைத்திருக்கும் அடுக்கு மாடி கட்டிடங்கள்,’’ என்ற தலைப்பில் வைரல் வீடியோ ஒன்றை ஃபேஸ்புக்கில் காண நேரிட்டது. இது உண்மையா, என ஆய்வு செய்ய தீர்மானித்தோம்.
தகவலின் விவரம்:
இந்தியாவில் கொள்ளையடித்து ராஜீவ்காந்தி மகன் பப்பு ராகுல் வின்சி இத்தாலியில் வாங்கி வைத்திருக்கும் அடுக்கு மாடி கட்டிடங்களை பாருங்கள் பிரமித்து போய்விடுவீர்கள் இவர்கள் உண்மையான கொள்ளைக்கூட்டங்கள் மக்களே உணர்ந்து கொள்ள வேண்டும்
ஏப்ரல் 29ம் தேதி இந்த பதிவு வெளியிடப்பட்டுள்ளது. ஒரு ஒரு வழுக்கைத் தலை நடுத்தர வயது ஆசாமி, குஜராத் மொழியில், உணர்ச்சிவசமாக, சில கட்டிடங்களை சுட்டிக்காட்டி கத்துகிறார். அதாவது, ‘’ராஜிவ் காந்தியின் மகன் பப்பு இருக்கானே, அவனோட சொந்த கட்டிடம் அது. இந்தியாவை கொள்ளையடித்த காசில் இந்த கட்டிடத்தை வாங்கிருக்கான். நான் இப்ப இத்தாலியில் இருக்கேன். இதோ, இந்த கட்டிடங்கள் சோனியாவுக்கும், ராஜிவ் காந்திக்கும் சொந்தமானவை. இந்தியாவில் இருந்தபடியே, இந்த 3 கட்டிடங்களையும் வாடகைக்கு விட்டு, பப்பு காசு சம்பாதிக்கறான். இந்தியாவை அவன் ஏற்கனவே கொள்ளையடிச்சிட்டான். அவன் கதைய முடிச்சி, உடனே இந்தியாவைவிட்டு அடிச்சி துரத்துங்க. ஜெய் ஸ்ரீ கிருஷ்ணா. நான் இப்ப இத்தாலியில்தான் இருக்கேன்,’’ என, அவர் சொல்கிறார். இதன்போது, இத்தாலியில் உள்ள தொன்மையான கட்டிடங்களையும் வீடியோவில் காட்டுகிறார்கள். இந்த வீடியோவை உண்மை என நம்பி, ஆயிரக்கணக்கானோர் ஷேர் செய்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
குறிப்பிட்ட வீடியோ உண்மைதானா என அறிவதற்காக, கூகுளில் ரிவர்ஸ் இமேஜ் தேடல் செய்தோம். அப்போது, அது இத்தாலியின் துரின் பகுதியில் உள்ள செயின்ட் கர்லோ சதுக்கம் என தெரியவந்தது. வீடியோவில் உள்ள நபர் சுட்டிக்காட்டும் கட்டிடத்தின் பெயர் பியாஸா கஸ்டிலோ. இதில், தியேட்டர், மியூசியம் உள்ளிட்டவை உள்ளன. இதன் அருகே பலோஸா மடாமா என்ற இத்தாலி அரண்மனையும் அமைந்துள்ளது. இது இத்தாலி அரசின் முதல் செனட்டாக இருந்த பகுதியாகும். இத்தாலி அரசுக்குச் சொந்தமான இப்பகுதி, அந்நாட்டில் உள்ள முக்கிய சுற்றுலா தலங்களில் ஒன்று எனவும் தகவல்கள் கிடைத்தன. ஆதாரங்கள் கீழே தரப்பட்டுள்ளன.

எடுத்த எடுப்பிலேயே இந்த வீடியோவில் குறிப்பிடப்படும் கட்டிடம், இத்தாலி அரசுக்குச் சொந்தமானது என தெரியவந்ததால், ராகுல் பற்றியும், நாம் ஆய்வு செய்யும் வீடியோ பற்றியும் ஏதேனும் செய்தி வெளியாகியுள்ளதா, என கூகுளில் மீண்டும் தேடிப் பார்த்தோம்.
அப்போது, மேற்கண்ட வீடியோ ஒரு தவறான பிரசாரம் என்றும், இதை வெளியிட்டவரின் விவரம் பற்றியும் தகவல்கள் கிடைத்தன.

இதன்படி, ஏற்கனவே இந்தி, ஆங்கிலம், குஜராத்தி மொழிகளில் பரவிவரும் இந்த வீடியோ, தற்போது தமிழிலும் பரவ தொடங்கியுள்ளது என்று தகவல் கிடைத்தது.
உண்மையில், இந்த வீடியோவை Mera Bharat Mahan என்ற நபர் முதன்முதலில், ஃபேஸ்புக்கில் வெளியிட்டிருக்கிறார். அதன் ஆதாரம் கீழே தரப்பட்டுள்ளது.
இது பல்வேறு மொழிகளிலும் வைரலாகப் பரவிவருவதை தொடர்ந்து, இதன்பேரில் உண்மை கண்டறியும் சோதனை நடத்தி, முன்னணி ஊடக நிறுவனங்களும், நமது சக போட்டியாளர்களும் முடிவுகளை வெளியிட்டுள்ளனர். இதுபற்றி முதன்முதலில் AltNews ஆய்வு செய்து, அதன் முடிவுகளை வெளியிட்டுள்ளது. அதன் இணைப்பு இங்கே தரப்பட்டுள்ளது.
எனவே, இது தவறான வீடியோ என்று உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
உரிய ஆதாரங்களின் அடிப்படையில், நாம் ஆய்வுக்கு எடுத்துக் கொண்ட வீடியோ தவறான ஒன்று என நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, நமது வாசகர்கள் யாரும் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோ எதையும் மற்றவர்களுக்கு பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். அவ்வாறு நீங்கள் பகிர்ந்தது பற்றி யாரேனும் புகார் அளித்தால் உரிய சட்ட நடவடிக்கையை நீங்கள் சந்திக்க நேரிடும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

Title:ராகுல் காந்தி இத்தாலியில் வாங்கிய அடுக்கு மாடி கட்டிடம்: செய்தி உண்மையா?
Fact Check By: Parthiban SResult: False
