
‘சென்னை நகரில் ஆட்டோ, டாக்ஸியில் பயணம் மேற்கொள்ளும் பெண்கள் குறிப்பிட்ட எண்ணுக்கு, வண்டியின் நம்பரை எஸ்.எம்.எஸ் செய்தால், வாகனம் பயணிக்கும் பாதையை சென்னை மாநகர காவல் கண்காணிக்கும்,’ என ஒரு தகவல் சமூக வலைத்தளங்களில் பரப்பப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:
தமிழ்நாடு காவல் துறை வெளியிட்ட அறிவிப்பு போல இருக்கும் இந்த பதிவில், “பெண்களின் பாதுகாப்புக்காக சென்னை மாநகர காவல் ஆணையரகம் புதிய ஹெல்ப் லைனை உருவாக்கி உள்ளது. ஆட்டோ, டாக்ஸியில் பயணிக்கும் பெண்கள், வாகனத்தில் ஏறுவதற்கு முன்பு வண்டியின் நம்பரை +919969777888 என்ற எண்ணுக்கு எஸ்.எம்.எஸ் செய்தால், அவர்களுக்கு ஒரு எஸ்.எம்.எஸ் வரும். அதைத் தொடர்ந்து ஜி.பி.ஆர்.எஸ் உதவியுடன் அந்த வாகனம் பயணிக்கும் பாதையை காவல் துறை கண்காணிக்கும். உங்களால் முடிந்தவரை இந்த தகவலை மற்றவர்களுக்கு பகிருங்கள். உங்கள் தாய், சகோதரி, உங்கள் மனைவி, தோழிக்கு உதவி செய்யுங்கள்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
100% சிரிப்பு இலவசம் என்ற ஃபேஸ்புக் குழு பக்கத்தில் இந்த தகவல் பதிவிடப்பட்டுள்ளது. பெண்களின் பாதுகாப்புக்காக உங்களால் முடிந்தவரை அதிக அளவில் இந்த தகவலை பகிருங்கள் என்று கூறப்பட்டுள்ளதால் இதை பலரும் ஷேர் செய்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
தமிழ்நாடு காவல் துறை இந்த செய்தியை வெளியிட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. அதிலும், சென்னை மாநகரத்தில் மட்டும் இந்த திட்டம் நடைமுறைபடுத்தப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. சென்னையில் இதுபோன்ற ஹெல்ப் லைன் உள்ளதா என்று தமிழ்நாடு காவல்துறை இணைய பக்கத்தில் முதலில் ஆய்வு செய்தோம்.
பெண்கள் பாதுகாப்புக்கு 1091 என்ற ஹெல்ப் லைன் மட்டுமே இருந்தது. மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவில் குறிப்பிட்ட தொலைபேசி எண் இல்லை.
சென்னை போலீசில் குறிப்பிட்ட ஹெல்ப்லைன் சேவை தொடங்கப்பட்டுள்ளதா என்று கூகுளில் தேடினோம். அப்போது இந்த தகவல் முழுக்க முழுக்க தவறானது என்று தெரிந்தது. இந்த தேடலில், சென்னையில் பரவும் வதந்தி என்ற செய்தியும், பெங்களுருவில் இதேபோன்று செய்தி பரவியதாக டைம்ஸ் ஆஃப் இந்தியாவில் வெளியான செய்தியும், தமிழகத்தில் பெண்களின் பாதுகாப்புக்கு புதிய ஹெல்ப்லைன் தொடங்கப்பட்டது என்ற செய்தியும் கிடைத்தது.
வேகமாகப் பரவும் வதந்தி என்று deccanchronicle வெளியிட்ட செய்தியை படித்தோம். 2016 பிப்ரவரியில் அந்த செய்தி வெளியாகி உள்ளது. அதில், மும்பை மாநகர காவலில் இது போன்ற சேவை 2015ம் ஆண்டு தொடங்கப்பட்டது. அதைத் தொடர்ந்து மற்ற நகரங்களிலும் இந்த சேவை அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாகத் தொடர்ந்து வதந்தி பரப்பப்பட்டு வருவதாகக் கூறப்பட்டு இருந்தது. சென்னை போலீசும் இந்த தகவல் பொய்யானது என்று கூறியதாகவும் அதில் குறிப்பிட்டு இருந்தனர். இது தொடர்பான செய்தியைப் படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்.
பெண்கள் பாதுகாப்புக்காக கடந்த டிசம்பர் மாதம் மற்றொரு புதிய ஹெல்ப் லைன் சேவை தொடங்கப்பட்ட செய்தியைப் படித்தோம். புதிதாக 181 என்ற ஹெல்ப்லைன் சேவையை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடங்கிவைத்ததாக இருந்தது. குடும்பத்தில், வேலை செய்யும் இடத்தில் பெண்களுக்கு பாதிப்பு என்றால் காவல் துறை, சட்ட ரீதியான உதவி, ஆம்புலன்ஸ் உள்ளிட்ட மருத்துவ உதவிகளைப் பெற இந்த எண்ணை அழைக்கலாம். இது தொடர்பான செய்தியைப் படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்.
ஃபேஸ்புக் பதிவு தொடர்பாக சென்னை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தைத் தொடர்புகொண்டு பேசினோம். நம்மிடம் பேசிய அதிகாரி ஒருவர், “சென்னையில் இதுபோன்ற ஹெல்ப்லைன் ஏதும் இல்லை. இந்த தகவல் வதந்திதான். இந்த தகவலை பரப்பியவர்கள் தொடர்பாக எங்களுக்கு புகார் அளித்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.
நாம் மேற்கொண்ட ஆய்வில், மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவில் குறிப்பிட்டது போன்ற ஹெல்ப்லைன் செயல்பாட்டில் இல்லை. சென்னை உள்ளிட்ட மாநகர காவல் ஆணையர் எல்லைக்குட்பட்ட பெண்கள் பாதுகாப்புக்கு 1091 என்ற எண் மட்டுமே உள்ளது. எனவே, மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு தவறானது. இதை சென்னை மாநகர காவல் துறையும் உறுதி செய்துள்ளது. தமிழக காவல் துறை பெயரால் வதந்தி பரப்பப்பட்டால் சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
UPDATE:
பெண்கள் தனியாகப் பயணிக்கும் ஆட்டோ அல்லது கால் டாக்சியை ஜிபிஆர்எஸ் மூலம் கண்காணிக்கும் திட்டத்தை தமிழ்நாடு காவல் துறை தொடங்கியது போன்று டிஜிபி சைலேந்திர பாபு புகைப்படத்துடன் இதே வதந்தி 2021 அக்டோபர் – நவம்பரில் மீண்டும் சமூக ஊடகங்களில் பரவியது. தமிழ்நாடு அரசு அப்படி ஒரு திட்டத்தை தொடங்கினால், அதை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்திருப்பார். ஆனால், அப்படி எந்த ஒரு செய்தியும் இல்லை.
மேலும், பல ஆண்டுகளாக சமூக ஊடகங்களில் பரவும் அதே எண்ணை (99697 77888) தமிழ்நாடு காவல் துறை பயன்படுத்தும் வாய்ப்பு இல்லை. எனவே, இது பற்றி தமிழ்நாடு காவல் துறையை தொடர்புகொண்டு விசாரித்தோம். இது வதந்திதான் என்று அவர்கள் உறுதி செய்தனர். அதே போன்று சேலம் மாவட்ட காவல் துறை தன்னுடைய ஃபேஸ்புக் பக்கத்தில் இந்த படத்தை போலி (FAKE) முத்திரை குத்தி பதிவிட்டிருந்தது.

அசல் பதிவைக் காண: Facebook
முடிவு
தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில், பெண்கள் பாதுகாப்புக்கு புது ஹெல்ப்லைன் என்ற மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு தவறானது என நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்கு பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். அப்படி, நீங்கள் பகிர்ந்தது பற்றி யாரேனும் புகார் கொடுத்தால், நீங்கள் சட்டப்படியான நடவடிக்கைக்கு ஆளாக நேரிடும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
Updated on 06, November, 2021.

Title:ஆட்டோ, டாக்ஸியில் பயணிக்கும் பெண்கள் பாதுகாப்புக்கு தனி நம்பர்? – பரவும் வதந்தி
Fact Check By: Praveen KumarResult: False

Thank you very much FB team