
‘’ராணுவத் தேர்வு கேள்வித்தாள் திருடிய 18 ஆர்எஸ்எஸ் உறுப்பினர்கள் கைது‘’ என்ற தலைப்பில் ஃபேஸ்புக்கில் ஒரு செய்திப் பதிவை காண நேரிட்டது. இதன்பேரில், உண்மை கண்டறிய முடிவு செய்தோம்.
தகவலின் விவரம்:
இந்த பதிவு ஏப்ரல் 16ம் தேதி வெளியிடப்பட்டுள்ளது. இதில், ‘’இந்திய இராணுவத் தேர்விலும் ஊழல்! இந்திய இராணுவத் தேர்வுக்கான கேள்வித்தாளை திருடி 10 கோடிக்கு விற்றதாக மராட்டியம் மற்றும் கோவாவைச் சேர்ந்த 18 ஆர்எஸ்எஸ் உறுப்பினர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். தானே மாநகர காவல்துறையின் தலைவர் நித்தீன் தாக்கரே இதைத் தெரிவித்தார். மேலும், தேர்வு எழுதிய 350 நபர்களும் பிடிபட்டுள்ளனர். கேள்வித்தாள்களை தலா 2 லட்சத்திற்கு விற்றதாக கைதானவர்கள் தெரிவித்துள்ளனர். பாஜக ஆட்சியில் ஊழலே இல்லை என்று நம்புபவனே உலகின் தலைசிறந்த மூடன்,’’ என்று கூறியுள்ளனர். ழ மீம்ஸ் என்ற ஃபேஸ்புக் பக்கம் வெளியிட்டுள்ள இந்த பதிவை, பலரும் உண்மை என நம்பி அதிகளவில் ஷேர் செய்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
இப்படி ஏதேனும் சம்பவம் நடைபெற்றதா மற்றும் ஆர்எஸ்எஸ் உறுப்பினர்கள் கைது செய்யப்பட்டார்களா என செய்தி ஆதாரம் தேடி கூகுள் உதவியை நாடினோம். அதில், இவர்கள் குறிப்பிடும் சம்பவம் பற்றி, கடந்த பிப்ரவரி 26, 2017 அன்று ஊடகங்களில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது.

இதில், எந்த இடத்திலும் கைது செய்யப்பட்ட நபர்கள் ஆர்எஸ்எஸ் உறுப்பினர் எனக் கூறவே இல்லை. நாசிக், புனே, நாக்பூர், மகாராஷ்டிரா மற்றும் கோவா ஆகிய பகுதிகளில், ஆர்மி ரெக்ரூமெண்ட் போர்டு நடத்திய தேர்வில் கேள்வித்தாளை ரூ.2 லட்சத்திற்கு விற்ற 18 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், அவர்களில் 2 பேர் முன்னாள் ராணுவ அதிகாரிகள் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. அதில், மேலும் ஒருவர் ஹோம் கார்டாகப் பணிபுரிந்தவர் ஆவார். எனவே, கைது செய்யப்பட்ட 18 பேரும் ஆர்எஸ்எஸ் திருடர்கள் என்று கூற்றில் உண்மையில்லை.
மேலும் இவர்கள் குறிப்பிடுவது போல, நித்தின் தாக்கரே என்பவர் தானே மாநகர காவல்துறையின் தலைவர் இல்லை. அவர் கிரைம் பிராஞ்ச் சீனியர் போலீஸ் அதிகாரி ஆவார். இதுதவிர, இவர்கள் குறிப்பிடுவது போல, இந்த சம்பவம் எதோ சமீபத்தில் நடந்தது இல்லை. இது நடந்து 2 ஆண்டுகள் கடந்துவிட்டன.

இதுபற்றி ஏசியன் ஏஜ் ஊடகம் வெளியிட்ட செய்தியை விரிவாகப் படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள். ஆதார படம் கீழே தரப்பட்டுள்ளது.

இதுவரை கிடைத்த ஆதாரங்களின்படி பார்க்கும்போது,
1) ராணுவத் தேர்வில் முறைகேடு நடைபெற்றதாகக் கூறப்படும் தகவல் உண்மைதான்.
2) ஆனால், இதில் ஆர்எஸ்எஸ் உறுப்பினர்கள் யாருக்கும் எந்த தொடர்பும் இல்லை. கைதானவர்களில், 2 பேர் முன்னாள் ராணுவ அதிகாரிகள்.
3) நித்தின் தாக்கரே என்பவர் தானே மாநகர போலீஸ் அதிகாரி இல்லை. அவர் கிரைம் பிராஞ்ச் சீனியர் போலீஸ் இன்ஸ்பெக்டர்.
4) இந்த சம்பவம் எதோ சமீபத்தில் நிகழ்ந்தது இல்லை. இது நடந்து 2 ஆண்டுகள் முடிந்துவிட்டது.
5) செய்தியை முழுதாகப் படிக்காமல், எடுத்த எடுப்பில் ஆர்எஸ்எஸ் மீதான தனிப்பட்ட அரசியல் காரணத்தை மனதில் வைத்து, இந்த பதிவை வெளியிட்டுள்ளனர்.
முடிவு:
உரிய ஆதாரங்களின்படி, மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு தவறான ஒன்று என உறுதி செய்யப்படுகிறது. நமது வாசகர்கள் யாரும் இத்தகைய தவறான உறுதி செய்யப்படாத செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோ போன்றவற்றை சமூக ஊடகங்களில் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். அவ்வாறு நீங்கள் பகிர்ந்தது பற்றி யாரேனும் புகார் அளித்தால் உரிய சட்ட நடவடிக்கையை நீங்கள் சந்திக்க நேரிடும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

Title:ராணுவ தேர்வு கேள்வித்தாளை திருடி விற்ற 18 ஆர்எஸ்எஸ் உறுப்பினர்கள் கைது?
Fact Check By: Parthiban SResult: False
