
‘’அஞ்சல் துறை தேர்வுகளை ரத்து செய்து தமிழ் உள்ளிட்ட பிராந்திய மொழிகளில் நடத்த மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் உத்தரவிட்டதற்கு திமுக கூட்டணியின் 38 எம்பிகள் மட்டுமே காரணம்,’’ என்று கூறி வைரலாக ஷேர் செய்யப்பட்டு வரும் ஒரு ஃபேஸ்புக் பதிவை காண நேரிட்டது. இதன்பேரில் உண்மை கண்டறியும் சோதனை செய்ய தீர்மானித்தோம்.
தகவலின் விவரம்:

Sadhu Sadhath என்ற நபர் கடந்த ஜூலை 16, 2019 அன்று இந்த பதிவை வெளியிட்டுள்ளார். இதில், ரவிசங்கர் பிரசாத் பற்றி புதிய தலைமுறை வெளியிட்ட நியூஸ் கார்டு ஒன்றை பகிர்ந்து, அதன் மேலே, ‘’அப்புறம்டா சங்கிகளா 38 ஜெயிச்சும் வேஷ்டுனு சொன்னீங்களே…. இத பாத்துட்டாவது தொங்கிடுங்கடா…,’’ என்று கூறியுள்ளார். இதனை பலரும் உண்மை என நம்பி வைரலாக ஷேர் செய்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
மேற்கண்ட ஃபேஸ்புக் செய்தி உண்மையா இல்லை பொய்யா இல்லை உண்மையும், பொய்யும் கலந்த தகவலா என்பதற்கு அதிலேயே விடை உள்ளது. ஆம். திமுக கூட்டணி சார்பாக, 38 உறுப்பினர்கள் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இருந்து தேர்வு செய்யப்பட்டு, மக்களவைதான் சென்றுள்ளனர். ஆனால், ரவிசங்கர் பிரசாத் இந்த அறிவிப்பை வெளியிட்டது மாநிலங்களவையில் என்று தெளிவாக அந்த செய்தியிலேயே குறிப்பிடப்பட்டுள்ளது. இதுகூட புரியாமல் சம்பந்தப்பட்ட நபர் இந்த அறிவிப்பு வெளியிட்டதற்கு திமுக உறுப்பினர்கள் மட்டுமே முழு காரணம் என்பது போல சவால் விட்டுள்ளார்.

இதன்படி, கடந்த ஜூலை 14, 2019 அன்று நடைபெற்ற அஞ்சல் துறை தேர்வுகள் இந்தி, ஆங்கிலத்தில் மட்டுமே நடத்தப்பட்டதாகவும், தமிழ் உள்ளிட்ட பிராந்திய மொழிகளில் கேள்வித்தாள் இல்லை எனவும் புகார் எழுந்தது. இதன்பேரில், மக்களவையில் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சி எம்பி.,க்கள் கண்டனம் தெரிவித்து பேசினார்கள் என்பதை யாரும் மறுப்பதற்கில்லை.
ஆனால், தகவல் தொடர்பு அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் உறுப்பினராக இருப்பது மாநிலங்களவையில். இந்த விவகாரம் மாநிலங்களவையில்தான் மிகக்கடுமையாக எதிரொலித்தது. அங்கே அதிமுக சார்பாக, 10 உறுப்பினர்களும், திமுக சார்பாக, 5 உறுப்பினர்களும் உள்ளனர். தற்போது புதியதாக வில்சன், வைகோ உள்ளிட்டோர் எம்பி பதவி ஏற்றுள்ளனர்.

அஞ்சல் துறை தேர்வுகளை தமிழ் உள்ளிட்ட பிராந்திய மொழிகளில் நடத்த வலியுறுத்தி, அதிமுக.,வைச் சேர்ந்த நவநீதகிருஷ்ணன், மைத்ரேயன் உள்ளிட்டோரும், திமுக.,வைச் சேர்ந்த திருச்சி சிவா போன்றோரும் மாநிலங்களவையில் கடும் எதிர்ப்பு தெரிவித்ததால், அவை ஒத்திவைக்கும் சூழல் ஏற்பட்டது. இதுபற்றிய செய்தியை படிக்க இங்கே கிளிக் செய்யவும்.
சம்பந்தப்பட்ட நாளன்று அதாவது, ஜூலை 16ம் தேதி மாநிலங்களவையில் நடைபெற்ற சம்பவத்தின் விவரம் கீழே தொகுக்கப்பட்டுள்ளது.

இதுபற்றி தி இந்து வெளியிட்ட செய்தி கீழே இணைக்கப்பட்டுள்ளது.
அதாவது, இந்த விவகாரம் மக்களவையில் எழுப்பப்பட்டது என்பதை யாரும் மறுப்பதற்கில்லை. ஆனால், இது அதிகளவில் விவாதமாக மாறியதும், பின்னர் இந்த தேர்வு ரத்து செய்யப்படுவதற்கும் மாநிலங்களவையில் நடந்த விவாதம்தான் முக்கிய காரணமாகும். இதற்கு, திமுக கூட்டணி கட்சிகள் மட்டுமல்ல, அதிமுக உறுப்பினர்கள், காங்கிரஸ், திரிணாமூல் காங்கிரஸ், இடதுசாரிகள் என பல்வேறு கட்சியினரும் முக்கிய பங்கு வகித்துள்ளனர். இதுதவிர, இந்த அறிவிப்பை ரவிசங்கர் பிரசாத் வெளியிட்டது மாநிலங்களவையில்தான். மக்களவையில் அல்ல.
உண்மை இப்படியிருக்க, எல்லாமே திமுக.,வால் மட்டுமே நடந்தது என்பதுபோல, மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவர் பகிர்ந்துள்ளார். இதுபற்றிய செய்தியை படிக்க இங்கே கிளிக் செய்யவும்.

எனவே, இதுவரை கிடைத்த ஆதாரங்களின் அடிப்படையில் மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவில் முழு உண்மை இல்லை, பாதி விவரம் மட்டுமே இடம்பெற்றுள்ளதாக உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
உரிய ஆதாரங்களின்படி, நாம் ஆய்வு செய்த ஃபேஸ்புக் பதிவில் முழு உண்மை இல்லை என முடிவு செய்யப்படுகிறது. நமது வாசகர்கள் யாரும் இத்தகைய நம்பகத்தன்மை இல்லாத செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை உறுதிப்படுத்தாமல் மற்றவர்களுக்கு பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.

Title:அஞ்சல் துறை தேர்வு ரத்து செய்யப்பட்டதற்கு திமுக கூட்டணியின் 38 எம்பிகள் மட்டுமே காரணமா?
Fact Check By: Pankaj IyerResult: Mixture

பாதி உண்மை அதாவது மக்களவையில் பிரச்சனை எழுப்பப்பட்டது அங்கு பதில் சொன்னால் அது திமுகவிற்கு புகழ் சேர்க்கும் என்பதால் தனது நட்பு கட்சி அதிமுக அதிகம் உள்ள மாநிலங்களவையில் எழுப்ப வைத்து அங்கே பதில் அளிக்கிறார் இதுதான் உண்மை.திமுக எதிர்ப்பு இல்லை என்றால் அதிமுக அடிமை சாசனம் வாசித்திருக்கும் அய்யரே