இஸ்லாமியர்களை வெளியேற்றிய நார்வே? – ஃபேஸ்புக் விஷமப் பதிவு!

சமூக ஊடகம் சர்வ தேசம்

நர்வே நாடு, இஸ்லாமியர்களை நாட்டைவிட்டு வெளியேற்றியதாகவும் இதனால் அந்நாட்டின் குற்றச் சம்பவங்கள் 31 சதவிகிதம் குறைந்துவிட்டதாகவும் ஒரு செய்தி சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

Norway 2.png

Facebook Link I Archived Link

ஐரோப்பா என்ற பெண், பன்றி உருவம் உள்ள ஒரு நபரை எட்டி உதைப்பது போன்ற கார்ட்டூன் வரையப்பட்டுள்ளது. அதன் மேல் பகுதியில், “இஸ்லாமியர்களை வெளியேற்றிய நார்வே. குற்ற சம்பவம் 31 சதவிகிதம் குறைந்தது… உலகத்திற்கான பாடம்!” என்று ஆங்கிலத்தில் உள்ளது.

இந்த செய்தியை conservativepapers.com என்ற இணையதளம் வெளியிட்டதாகக் குறிப்பிட்டுள்ளனர்.

நிலைத் தகவலில், “உண்மையை உரக்கச் சொல்லுவோம்… நார்வே நாடு உண்மையைக் கண்டுபிடித்தது…” என்று குறிப்பிட்டுள்ளனர். இந்த பதிவை Sudhakar Kannan என்பவர் 2019 ஜூலை 24ம் தேதி வெளியிட்டுள்ளார். பலரும் இதைப் பகிர்ந்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

conservativepapers.com என்ற இணைய தளத்தில் மேற்கண்ட செய்தி வெளியானது உண்மையா என்று ஆய்வு செய்தோம். அந்த இணையதளத்தில் 2015ம் ஆண்டு இந்த செய்தி வெளியாகி உள்ளது. அதில், அந்த ஆண்டு 7000-க்கும் மேற்பட்ட குற்றவாளிகள் நாட்டைவிட்டு வெளியேற்றப்பட்டதாகவும், அதில் பெரும்பாலானவர்கள் இஸ்லாமியர்கள் என்றும் குறிப்பிட்டிருந்தனர். இந்த செய்தியைப் படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்.

நார்வே நாடு இஸ்லாமியர்களை வெளியேற்றியது உண்மையா, நார்வேயில் இஸ்லாமியர்கள் மக்கள் தொகை எவ்வளவு, இது தொடர்பாக செய்தி ஏதேனும் வந்துள்ளதா என்று கூகுளில் தேடினோம். மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவில் உள்ள ஆங்கில தலைப்பை அப்படியே டைப் செய்து தேடியபோது, இந்த தகவல் பொய்யானது என்று வெளியான பல ஆய்வுக் கட்டுரைகள் நமக்குக் கிடைத்தன.

நார்வே நாட்டின் மக்கள் தொகையில் 3.15 சதவிகிதம் பேர் இஸ்லாமியர்கள் என்று தெரியவந்தது. குற்றச்செயலில் ஈடுபட்டு சிறை தண்டனை பெறும் வெளிநாட்டினரை நாடு கடத்துவது நார்வேயில் உள்ள பழக்கம்தான். ஆனால், இஸ்லாமியர்கள் என்ற காரணத்துக்காக யாரையும் நார்வே நாடு கடத்தவில்லை என்ற தகவல் கிடைத்தது. மேலும், இந்த வதந்தி முதன் முதலில் 2014ம் ஆண்டு வெளியாகி உள்ளது. தொடர்ந்து பல முறை இந்த வதந்தி புதிய செய்தி போல தேதி மாற்றி இணையதளம் மற்றும் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருவதாக குறிப்பிட்டிருந்தனர். அந்த செய்தியைப் படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்.

மேலும், ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட ஃபேஸ்புக் பதிவில் குறிப்பிட்ட செய்தியை trump-feed.com என்ற இணையதளம் வெளியிட்டுள்ளதாக குறிப்பிட்டிருந்தனர். அந்த இணைய தளம் உலகின் பல பகுதிகளில் வெளியாகும் செய்திகளை எடுத்து, அப்படியே பயன்படுத்தும் பழக்கம் கொண்டது என்றும், பெரும்பாலும் அதில் பொய்யான, விஷமத்தனமான செய்திகளே வெளியிடப்பட்டு வருகிறது என்றும் குறிப்பிட்டிருந்தனர். trump-feed.com வெளியிட்ட அந்த செய்தியைப் படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்.

நார்வேயின் குற்றச் சம்பவ விகிதம் எப்படி என்று ஆய்வு மேற்கொண்டோம். அப்போது, அமெரிக்காவைக் காட்டிலும் நார்வே நாட்டின் குற்றச் சம்பவ விகிதம் குறைவுதான் என்ற தகவல் கிடைத்தது. மேலும் நம்முடைய தேடலில், கடந்த ஆண்டு நார்வே நாட்டைவிட்டு வெளியேற்றப்பட்டவர்கள் பற்றிய செய்தி ஒன்று கிடைத்தது. அதில், கடந்த ஆண்டு நவம்பர் வரையிலான 11 மாத காலத்தில் 4722 பேர் வெளியேற்றப்பட்டதாக கூறப்பட்டுள்ளது. மொத்தம் 138 நாடுகளைச் சேர்ந்தவர்கள் 128 நாடுகளுக்கு வெளியேற்றப்பட்டுள்ளனர். அதில் முதலிடத்தை வகிப்பது ஸ்வீடன்.  512 பேர் ஸ்வீடனுக்கு அனுப்பப்பட்டுள்ளனர். 394 இத்தாலியர்களும், 333 போலந்து நாட்டைச் சேர்ந்தவர்களும் இரண்டாவது, மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளனர். இது தொடர்பான செய்தியைப் படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்.  

நம்முடைய ஆய்வில், இந்த தகவல் 2014ம் ஆண்டு முதல் சமூக ஊடகங்கள், இணையதளங்களில் பரவி வருவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

குற்ற சம்பவங்களில் ஈடுபடுபவர்களை நாடு கடத்தும் பழக்கம் நார்வேயில் உள்ளது தெரியவந்துள்ளது.

இஸ்லாமியர்களை மட்டும் குறிவைத்து நாடு கடத்தும் வழக்கம் நார்வேயில் இல்லை.

கடந்த ஆண்டு ஸ்வீடன், இத்தாலி, போலந்து நாட்டைச் சேர்ந்தவர்கள் அதிக அளவில் நாடு கடத்தப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.

இந்த ஆதாரங்கள் அடிப்படையில், இஸ்லாமியர்களை நார்வே நாட்டைவிட்டு வெளியேற்றுவதாக வெளியான தகவல் முற்றிலும் பொய்யானது என்று உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில், மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு தவறானது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.

Avatar

Title:இஸ்லாமியர்களை வெளியேற்றிய நார்வே? – ஃபேஸ்புக் விஷமப் பதிவு!

Fact Check By: Chendur Pandian 

Result: False

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •