கையிருப்பு தங்கத்தை விற்கும் ரிவர்வ் வங்கி?- தீயாகப் பரவும் வதந்தி!

அரசியல் பொருளாதாரம் I Economy

பொருளாதார நெருக்கடி காரணமாக கையிருப்பு தங்கத்தை விற்கும் நிலைக்கு இந்திய ரிவர்வ் வங்கி தள்ளப்பட்டுள்ளது என்று ஒரு பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பரவி வருகிறது. இது உண்மையா என்று ஆய்வு மேற்கொண்டோம்.

தகவலின் விவரம்:

RBI 2.png
Facebook LinkArchived Link

நியூஸ் யு என்ற ஊடகத்தின் பெயரில் நியூஸ் கார்டு வெளியிடப்பட்டுள்ளது. அதில், “இந்திய கஜானா காலி – பொருளாதார நெருக்கடியால் தங்கத்தை விற்கும் நிலைக்குத் தள்ளப்பட்ட ரிசர்வ் வங்கி” என்று குறிப்பிட்டுள்ளனர்.

இந்த பதிவை Prem Singh என்பவர் 2019 அக்டோபர் 28ம் தேதி வெளியிட்டுள்ளார். பலரும் இதை ஷேர் செய்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

உலகமே பொருளாதார மந்த நிலையில் சிக்கித் தவிப்பதாக பொருளாதார நிபுணர்கள் கூறுகின்றனர். இந்தியாவும் இந்த பொருளாதார மந்த நிலையால் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. ரிசர்வ் வங்கி தன்னுடைய கையிருப்பில் உபரியாக உள்ள 1.76 லட்சம் கோடி ரூபாயை மத்திய அரசுக்கு வழங்குவதாகக் கடந்த ஆகஸ்ட் மாதம் அறிவித்தது. இது பல்வேறு கேள்விகளை எழுப்பியது. 

tamil.news18.comArchived Link

இந்த நிலையில், ரிசர்வ் வங்கி தன்னிடம் உள்ள தங்கத்தை விற்பனை செய்துள்ளதாகப் பல முன்னணி நிதி – பொருளாதாரம் தொடர்பான ஊடகங்கள் செய்தி வெளியிட்டன. எக்கனாமிக்ஸ் டைம்ஸ் நாளிதழ் இந்த செய்தியை வெளியிட்டது. இதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீதாராம் எச்சூரி தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் அந்த செய்தியின் படத்தை வெளியிட்டு இருந்தார்.

Archived Link

அந்த செய்தியில், கடந்த ஜூலை மாதம் வரையிலான காலகட்டத்தில் ரிசர்வ் வங்கி 5.1 பில்லியன் டாலர் மதிப்பிலான தங்கத்தை வாங்கியதாகவும் தற்போது அதிலிருந்து 1.15 பில்லியன் டாலர் அளவுக்கு விற்பனை செய்துள்ளதாகவும் குறிப்பிட்டிருந்தனர். மேலும், ஆகஸ்ட் மாத கணக்கின்படி, ரிசர்வ் வங்கியிடம் 1.987 மில்லியன் அவுன்ஸ் தங்கம் இருப்பதாகவும் குறிப்பிட்டிருந்தனர். இந்த செய்தியை அடிப்படையாகக் கொண்டு எல்லா ஊடகங்களும் பரபரப்பு செய்தி வெளியிட்டிருந்தன. காங்கிரஸ் கட்சி சார்புடைய நேஷனல் ஹெரால்டு உள்ளிட்ட ஊடகங்கள் இதைப் பெரிய அளவில் செய்தியாக்கின. தமிழில், டைம்ஸ் ஆஃப் இந்தியாவின் சமயம் தமிழ் இணையதளம், “28 ஆண்டுகளுக்குப் பின் தங்கத்தை விற்கிறது ரிசர்வ் வங்கி” என்று செய்தி வெளியிட்டது.

RBI 3.png
tamil.samayam.comArchived Link 1
nationalheraldindia.comArchived Link 2

இந்த செய்தி பெரிய அளவில் விவாதிக்கப்படவே, “கையிருப்பு தங்கம் விற்பனை செய்யப்படுகிறது” என்ற தகவலை ரிவர்வ் வங்கி மறுத்துள்ளது. இது தொடர்பாக ரிசர்வ் வங்கி தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் விளக்கம் ஒன்றைப் பதிவிட்டிருந்தது. அதில், “சில குறிப்பிட்ட ஊடகங்களில் இந்திய ரிசர்வ் வங்கி தங்கத்தை விற்பனை செய்துள்ளதாகவும் தங்க வணிகத்தில் ஈடுபட்டுள்ளதாகவும் செய்திகள் வருகின்றன. எந்த ஒரு தங்கம் விற்பனை அல்லது பரிவர்த்தனையிலும் ரிசர்வ் வங்கி ஈடுபடவில்லை என்பதைத் தெளிவுபடுத்துகின்றோம்.

கையிருப்பு மறுமதிப்பீடு செய்வது மாதந்தோறும் செய்யப்பட்டு வந்தது. அது தற்போது வாரந்தோறும் செய்யப்படுகிறது. இதனால், சர்வதேச தங்க விலை மற்றும் பரிமாற்ற விலையில் ஏற்படும் மாற்றம் காரணமாக வாராந்திர புள்ளிவிவர துணை அறிக்கையில் தங்கத்தின் மதிப்பில் ஏற்ற இறக்கம் காணப்படுகிறது” என்று குறிப்பிட்டிருந்தது.

RBI 4.png
Link 1Archived Link 1Link 2Archived Link 2

ரிசர்வ் வங்கியின் விளக்கத்தை ஏற்று முன்னணி ஊடகங்கள் தாங்கள் வெளியிட்டிருந்த செய்தியை அகற்றிவிட்டன. சிலர் அதில் மாற்றம் செய்து மறுபதிப்பு செய்துள்ளனர். ஆனால், பழைய செய்தியை, ரிசர்வ் வங்கி மறுப்பு தெரிவித்த பிறகும் சிலர் தங்கள் சமூக ஊடக பக்கங்களில் வெளியிட்டு வருகின்றனர். நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட ஃபேஸ்புக் பதிவும் கூட, ரிசர்வ் வங்கி விளக்கத்தை மறைத்து தவறான செய்தியைப் பரப்பும் வகையில் பகிரப்பட்டுள்ளது.

RBI 5.png
RBI 6.png

நம்முடைய ஆய்வில், 

எக்கனாமிக்ஸ் டைம்ஸ் இதழ் ரிசர்வ் வங்கி தன்னிடம் உள்ள கையிருப்பு தங்கத்தை விற்பனை செய்யத் தொடங்கியுள்ளது என்று செய்தி வெளியிட்டுள்ளது உறுதி செய்யப்படுகிறது.

இந்த செய்தியின் அடிப்படையில் பல ஊடகங்களும் இந்த செய்தியை வெளியிட்டுள்ளன என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

கையிருப்பு தங்கம் விற்பனை செய்யப்படுகிறது என்று வெளியான தகவல் தவறானது என்று ரிசர்வ் வங்கி தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

ரிசர்வ் வங்கி அக்டோபர் 26ம் தேதி விளக்கம் வெளியிட்டுள்ளது. நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட ஃபேஸ்புக் பதிவோ அக்டோபர் 28ம் தேதி வெளியிடப்பட்டுள்ளது. 

ஊடகங்கள் உறுதி செய்யாமல் செய்தி வெளியிட்டதன் விளைவாக, தவறான செய்தியை பலரும் ஷேர் செய்து வருவது உறுதி செய்யப்படுகிறது. இதன் அடிப்படையில் ரிசர்வ் வங்கி தன்னிடம் உள்ள தங்கத்தை விற்பனை செய்யத் தொடங்கியுள்ளது என்று வெளியிடப்பட்டுள்ள ஃபேஸ்புக் பதிவு தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில், மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு தவறானது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.

Avatar

Title:கையிருப்பு தங்கத்தை விற்கும் ரிவர்வ் வங்கி?- தீயாகப் பரவும் வதந்தி!

Fact Check By: Chendur Pandian 

Result: False

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •