டென்மார்க் சென்ற பிரான்ஸ் அதிபருக்கு தரப்பட்ட எளிமையான வரவேற்பு என்று பரவும் வீடியோ உண்மையா?

அரசியல் சமூக ஊடகம் சர்வதேசம்

பாதுகாப்பு என்று பல கோடிகளை செலவு செய்யாமல் மிகவும் எளிமையான முறையில் டென்மார்க் சென்ற பிரான்ஸ் அதிபர் மேக்ரோன் டென்மார்க் பிரதமருடன் சைக்கிளிங் செய்தார் என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive

பிரான்ஸ் அதிபர் மேக்ரோன் சைக்கிளிங் செய்யும் வீடியோ பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “பிரான்ஸ் அதிபர் மக்ரோன் டென்மார்க்கிற்கு விஜயம் மேற்கொண்டபோது,அவரை டென்மார்க் பிரதமர் வரவேற்கும் காட்சி. இதுதான் உண்மையான ஜனநாயகம்!!!!! 

நமக்கும் வந்து வாச்சிருகுக்கே! மக்கள் வரிப்பணத்தில் பல கோடி செலவில் புல்லட் ப்ரூஃப் கார்களில் “Z” பிரிவு பாதுகாப்பில் பவனி வருவதை பார்க்கும் எவரும் வியந்துதான் போவார்கள்! . இதாவது பரவால்ல ஆட்டு புளுக்கைகெல்லாம் எதுக்கு Z பிளஸ் பாதுகாப்பு.” என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்த வீடியோவை Arun Kumar என்ற ஃபேஸ்புக் பக்கம் 2023 ஜனவரி 14ம் தேதி பதிவிட்டுள்ளது. இதே வீடியோவை பலரும் பகிர்ந்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

தமிழ்நாடு பா.ஜ.க தலைவர் அண்ணாமலைக்கு இசெட் பிளஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ள சூழலில், பிரான்ஸ் அதிபர் மேக்ரோன் சமீபத்தில் டென்மார்க் நாட்டுக்கு சென்ற போது அதிக பாதுகாப்பு, ஆடம்பரமின்றி சென்றது போன்று வீடியோவை பகிர்ந்து வருகின்றனர். கடந்த ஆண்டு இந்திய பிரதமர் நரேந்திர மோடி டென்மார்க் நாட்டுக்கு சென்றார். அப்போது மெட்டே ஃப்ரடெரிக்சென் அவரை வரவேற்றார் என்று செய்திகள், புகைப்படங்கள் வெளியாகி இருந்தன. அதற்குள்ளாக பிரதமர் மாறிவிட்டாரா என்ற சந்தேகத்தின் அடிப்படையில் இந்த பதிவை ஆய்வுக்கு எடுத்துக்கொண்டோம்.

உண்மைப் பதிவைக் காண: financialexpress.com I Archive 1 I rfi.fr I Archive 2

வீடியோவை புகைப்படமாக மாற்றி ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றித் தேடினோம். அப்போது, இந்த வீடியோ 2018ம் ஆண்டு எடுக்கப்பட்டது என்று தெரிந்தது. 2018ம் ஆண்டு மேக்ரோன் டென்மார்க் நாட்டுக்கு மூன்று நாள் அரசு முறை பயணம் மேற்கொண்டார். பயணத்தின் இரண்டாம் நாளின் போது மேக்ரோனை டென்மார்க் பிரதமராக இருந்த ராஸ்முசென் சைக்கிளில் அழைத்துச் சென்று சுற்றிக் காட்டினார். இதற்காக, கடுமையான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டதாகச் செய்திகள் நமக்கு கிடைத்தன.

டென்மார்க் நாட்டிற்கு அவர் சென்ற போது அளிக்கப்பட்ட வரவேற்பு வீடியோ கிடைக்கிறதா என்று தேடிப் பார்த்தோம். 2018ல் மேக்ரோனுக்கு டென்மார்க் அரசு முழு மரியாதையுடன் வரவேற்பு அளித்த வீடியோக்கள் பல கிடைத்தன. இதன் மூலம் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட வீடியோ டென்மார்க் நாட்டிற்கு மேக்ரோன் வந்த போது அளித்த வரவேற்பு இல்லை என்பது உறுதியானது. 

சமீபத்தில் பிரான்ஸ் அதிபர் மேக்ரோன் டென்மார்க் நாட்டுக்கு சென்றாரா என்று பார்த்தோம். அவர் சமீபத்தில் அங்கு பயணம் மேற்கொள்ளவில்லை. 2023 தொடக்கத்தில் அவர் ஸ்பெயின் நாட்டுக்கு சென்றுள்ளார். ஜனவரி இறுதியில் நெதர்லாந்து செல்கிறார் என்று தகவல் கிடைத்தது. 

பிரான்ஸ் அதிபர் பாதுகாப்பு இல்லாமலே எல்லா இடத்துக்கும் பயணம் செய்கிறாரா என்றால் இல்லை. அவருக்கு பாதுகாப்பு அளிப்பதற்காகவே ஜிஎஸ்பிஆர் என்ற பாதுகாப்பு படை உருவாக்கப்பட்டுள்ளது. அவர் மிகுந்த பாதுகாப்புடன் எல்லா இடங்களுக்கு சென்று வருவதை பல வீடியோக்கள் மூலம் காண முடிந்தது.

பிரான்ஸ் அதிபர் டென்மார்க் சென்ற போது மிகவும் எளிமையாக சைக்கிளில் சென்றது உண்மைதான். ஆனால் இந்த நிகழ்வு நடந்து ஐந்து ஆண்டுகள் ஆகிறது. அவருக்கு என்று தனியான பாதுகாப்பு படை இருப்பதும். அந்த பாதுகாப்பிலேயே அவர் எல்லா இடங்களுக்கு சென்று வருவதும் கண்டறியப்பட்டுள்ளது. அதனால் மற்ற தலைவர்களுக்கு பாதுகாப்பு அளிப்பது தேவையில்லை என்பது போன்று பகிரப்படும் பதிவுகள் சரியானதாக இருக்காது. மேலும், 2018ல் பிரான்ஸ் அதிபர் டென்மார்க் சென்ற போது என்று குறிப்பிட்டிருந்தால் குழப்பம் ஏற்படுவதைத் தவிர்த்திருக்கலாம்.

முடிவு:

பிரான்ஸ் அதிபருக்கு டென்மார்க் நாட்டில் மிக எளிமையான முறையில் வரவேற்பு அளிக்கப்பட்டது என்று பரவும் வீடியோ தவறான புரிதலை ஏற்படுத்தும் வகையில் பகிரப்பட்டுள்ளது என்பதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…

Facebook I Twitter I Google News Channel

Avatar

Title:டென்மார்க் சென்ற பிரான்ஸ் அதிபருக்கு தரப்பட்ட எளிமையான வரவேற்பு என்று பரவும் வீடியோ உண்மையா?

Fact Check By: Chendur Pandian 

Result: Missing Context