
இந்தியா முழுக்க ஆர்.எஸ்.எஸ்-க்கு 40 ஆயிரம் பள்ளிக்கூடங்கள் உள்ளதாக ஒரு தகவல் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:

ஆர்.எஸ்.எஸ் பிரம்மாண்ட பயிற்சி புகைப்படம் ஒன்றைப் பகிர்ந்துள்ளனர். அதில், “நாடு முழுவதும் 40 ஆயிரம் பள்ளிக்கூடங்களை அமைத்து கல்வி சேவை செய்து வரும் உலகின் மிகப்பெரிய தொண்டு நிறுவனமான ஆர்.எஸ்.எஸ் தற்போது முதலாவது ராணுவ பள்ளியை அமைக்கிறது” என்று குறிப்பிட்டுள்ளனர்.
இந்த பதிவை, முத்து கிருஷ்ணன் என்பவர் 2019 ஆகஸ்ட் 2ம் தேதி வெளியிட்டுள்ளார். இதைப் பலரும் பகிர்ந்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் கல்விப் பிரிவான வித்யா பாரதி நாடு முழுவதும் ஆயிரக் கணக்கான பள்ளிகளை நடத்தி வருகிறது. இது உத்தரப்பிரதேச மாநிலத்தில் ராணுவத்தில் அதிக அளவில் மாணவர்கள் சேர, அவர்களைத் தயார் செய்யும் வகையில் பிரத்தியேக ராணுவ பயிற்சி பள்ளிக்கூடத்தைத் தொடங்க உள்ளதாக செய்திகள் வெளியாகின.
இதைத் தொடர்ந்து, மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவை வெளியிட்டுள்ளனர். அதில், ஆர்.எஸ்.எஸ்-க்கு நாடு முழுவதும் 40 ஆயிரம் பள்ளிகள் உள்ளது என்று குறிப்பிட்டுள்ளனர். இது உண்மையா என்று ஆய்வு மேற்கொண்டோம்.
ஆர்.எஸ்.எஸ் ராணுவ பள்ளி ஆரம்பிக்க உள்ளது என்று வெளியான செய்திகளில் எல்லாம், தற்போது நாடு முழுக்க ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் வித்யா பாரதி பிரிவானது 20 ஆயிரத்துக்கும் அதிகமான பள்ளிகளை நடத்துகிறது என்று குறிப்பிட்டிருந்தன. இது தொடர்பான செய்தியைக் காண இங்கே கிளிக் செய்யுங்கள்.
உண்மை நிலை என்ன என்று அறிய, வித்யா பாரதியின் அதிகாரப்பூர்வ இணைய தளத்துக்குச் சென்று, அதன் மொத்த பள்ளிகள் விவரத்தைத் தேடினோம். அப்போது, அதன் ஹோம் பேஜிலேயே மொத்த பள்ளிகள் எவ்வளவு என்று அது வெளியிட்டிருந்தது.

ஃபார்மல் எனப்படும் முறைசார் பள்ளிக் கூடங்கள் 13,067 என்று குறிப்பிட்டிருந்தது. தமிழ்நாட்டில் மட்டும் மொத்த 277 பள்ளிகளை இந்த அமைப்பு நடத்துகிறது. நாடு முழுக்க மொத்தம் 3,475,757 மாணவர்கள் படிப்பதாக வித்யா பாரதி தெரிவித்துள்ளது.

இது தவிர, இன்ஃபார்மல் எனப்படும் முறைசாரா பள்ளிகளையும் வித்யா பாரதி நடத்துகிறது. வித்யா பாரதி நடத்தும் பள்ளிகளில் பணி புரியும் ஆசிரியர், குடிசைப் பகுதிகள், மிகவும் பின்தங்கிய பகுதிகளுக்குச் சென்று மாணவர்களுக்கு பாடம் நடத்துவார். இதையே முறைசாரா பள்ளி என்று குறிப்பிட்டுள்ளனர். அதிலும் ஏகல் வித்யாலயா, சன்ஸ்கார் வித்யாலயா என்று இரண்டு வகைகள் உள்ளன. 4525 ஏகால் வித்யாலயாவில் 1,30,366 மாணவர்கள் படித்து வருகின்றனர்.

5111 சன்ஸ்கார் கேந்ரா பள்ளிகளில் 1,17,392 மாணவர்கள் படித்து வருகிறார்கள் என்றும் அதில் குறிப்பிட்டு இருந்தது. முறைசாரா பள்ளிகள் என்பது முழுமையான, முழுநேர பள்ளிகளைப் போன்றது இல்லை. இருப்பினும் அதையும் கணக்கில் எடுத்துக்கொண்டாலும் கூட கூட்டுத்தொகை 22,703 பள்ளிகள்தான் வருகிறது.
ராணுவ அதிகாரிகள், வீரர்களை உருவாக்கும் வகையில் ராணுவ பள்ளி ஒன்றை ஆர்.எஸ்.எஸ்-ன் கல்விப் பிரிவான வித்யா பாரதி தொடங்க உள்ளது உண்மையான செய்தி. அதே நேரத்தில், ஆர்.எஸ்.எஸ் 40 ஆயிரத்துக்கும் அதிகமான பள்ளிகளை நடத்துகிறது என்ற தகவல் தவறானது என்று உறுதியாகி உள்ளது. இதன் அடிப்படையில், உண்மையும் தவறான தகவலும் சேர்த்து இந்த பதிவு வெளியிடப்பட்டுள்ளது என்று உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில், மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு உண்மையும் பொய்யான தகவலும் சேர்த்து வெளியிடப்பட்டது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.

Title:இந்தியா முழுக்க ஆர்எஸ்எஸ்க்கு 40 ஆயிரம் பள்ளிக்கூடங்கள் உள்ளதா?
Fact Check By: Chendur PandianResult: Mixture
