இந்திய பாதுகாப்பு மற்றும் நிதித்துறையின் முதல் பெண் அமைச்சர் நிர்மலா சீதாராமனா?

அரசியல் சமூக ஊடகம்

‘’இந்திய பாதுகாப்பு மற்றும் நிதித் துறையின் முதல் பெண் அமைச்சர் நிர்மலா சீதாராமன்,’’ என்ற தலைப்பில் ஒரு ஃபேஸ்புக் செய்தியை காண நேரிட்டது. இதன்பேரில், உண்மை கண்டறியும் சோதனை செய்ய தீர்மானித்தோம்.

தகவலின் விவரம்:

Facebook Link I Archived Link

Agri Vel Murugan என்பவர் மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவை கடந்த மே 31, 2019 அன்று வெளியிட்டுள்ளார். இதில், நிர்மலா சீதாராமன் புகைப்படத்தை பகிர்ந்து, ‘’ வாழ்த்துக்கள். இந்தியாவின் முதல் பெண் பாதுகாப்பு துறை அமைச்சர். இந்தியாவின் முதல் பெண் நிதி அமைச்சர்,’’ என்று எழுதியுள்ளார். இதனை பலரும் உண்மை என நம்பி வைரலாக ஷேர் செய்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:
மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவில் கூறியுள்ளது போல உண்மையிலேயே நிர்மலா சீதாராமன்தான் இந்தியாவின் முதல் பெண் பாதுகாப்பு மற்றும் நிதித்துறை அமைச்சரா என சந்தேகம் எழுந்தது. இதன்பேரில் தகவல் தேட தொடங்கினோம். முதலில், இந்தியாவின் முதல் பெண் நிதியமைச்சர் யார் என தேடிப் பார்த்தோம். அப்போது, மறைந்த முன்னாள் பிரதமர் இந்திரா காந்திதான் இந்த பெருமைக்குச் சொந்தக்காரர் என்ற விவரம் கிடைத்தது. இதுபற்றி Business Standard வெளியிட்டுள்ள செய்தியை படிக்க இங்கே கிளிக் செய்யவும்.

இந்த உண்மை தெரியாமல் பலரும் நிர்மலா சீதாராமன்தான் இந்தியாவின் முதல் பெண் நிதியமைச்சராக இருந்தார் என தகவல் பரப்பி வருகிறார்கள். 1970 முதல் 1971 வரை நிதியமைச்சர் பதவி வகித்த இந்திரா காந்தி பட்ஜெட்டையும் தாக்கல் செய்திருக்கிறார். இதுபற்றிய செய்தியை படிக்க இங்கே கிளிக் செய்யவும்.

இதேபோல, நாட்டின் முதல் பெண் பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் கிடையாது. ஏற்கனவே, இந்திரா காந்தி அந்த பதவியை வகித்துள்ளார். இதன்படி, 1975 மற்றும் 1980, 1982 காலக்கட்டத்தில் இந்தியாவின் பாதுகாப்புத் துறை அமைச்சர் பதவியை இந்திரா காந்தி வகித்துள்ளார். இதுபற்றி படிக்க இங்கே கிளிக் செய்யவும்.

இந்த வித்தியாசம் தெரியாமல் மோடி கூட தவறாகப் பேசிவிட அதற்கு காங்கிரஸ் கட்சி பதிலடி கொடுத்ததும் கடந்த கால வரலாறு. இதுபற்றிய செய்தியை படிக்க இங்கே கிளிக் செய்யவும். 

இதுவரை கிடைத்த ஆதாரங்களின் அடிப்படையில், இந்தியாவின் முதல் பெண் பாதுகாப்பு மற்றும் நிதியமைச்சர் என்ற பெருமைக்குரியவர் இந்திரா காந்தி என தெரியவருகிறது. ஆனால், இந்திரா காந்தி பிரதமர் பதவியை வகித்துக் கொண்டே, இந்த பொறுப்புகளை கூடுதல் பொறுப்பாக செய்திருக்கிறார். அதேசமயம், நிர்மலா சீதாராமன் தனி பொறுப்பாக, பாதுகாப்புத் துறை மற்றும் நிதித்துறை முழுநேர அமைச்சராக பதவி வகித்துள்ளார். இதுதான் இருவருக்கும் இடையிலான வித்தியாசம். வேண்டுமானால், நிதித்துறை மற்றும் பாதுகாப்புத் துறையில் முதன் முதலாக முழுநேர அமைச்சராக இருந்த பெண் என நிர்மலா சீதாராமனைச் சொல்லலாம். நிதி, பாதுகாப்புத் துறையின் முதல் பெண் அமைச்சர் என்று சொல்ல முடியாது.

எனவே, மேற்கண்ட ஃபேஸ்புக் செய்தியில் கூறப்பட்டுள்ள தகவல் முழு உண்மை இல்லை என உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:
உரிய ஆதாரங்களின் அடிப்படையில் மேற்கண்ட ஃபேஸ்புக் செய்தியில் முழு உண்மை இல்லை என நிரூபிக்கப்பட்டுள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய குழப்பமான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை மற்றவர்களுக்கு பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.

Avatar

Title:இந்திய பாதுகாப்பு மற்றும் நிதித்துறையின் முதல் பெண் அமைச்சர் நிர்மலா சீதாராமனா?

Fact Check By: Pankaj Iyer 

Result: Mixture