நண்பனின் மகளை பாலியல் பலாத்காரம் செய்த ஆர்.எஸ்.எஸ் ஊழியர்: ஃபேஸ்புகில் பரவும் பகீர் செய்தி

அரசியல் | Politics சமூக ஊடகம் | Social

நண்பனின் 13 வயது மகளை பாலியல் பலாத்காரம் செய்த பா.ஜ.க, ஆர்.எஸ்.எஸ் காமவெறி பிடித்தவன் என்று ஒரு தகவல் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

Kerala RSS 2.png

Facebook Link I Archived Link 1 I Archived Link 2

2.06 நிமிடம் ஓடக்கூடிய வீடியோ ஒன்றை பாசிச பாஜக ஆட்சி ஒழிக என்ற ஃபேஸ்புக் பக்கம் 2019 செப்டம்பர் 6ம் தேதி வெளியிட்டுள்ளது. 

அதில், காவி துண்டால் வாயை மூடியபடி ஒருவரை போலீசார் காவல் நிலையத்துக்கு அழைத்து வருகின்றனர். பின்னர், போலீஸ் இன்ஸ்பெக்டர் பேசுகிறார்.

நிலைத் தகவலில் “தன் நண்பனின் 13 வயது மகளை கற்பழித்த பா.ஜ.க ஆர்.எஸ்.எஸ் காம வெறி பிடித்த நாய். மனுசனாடா நீங்க” என்று குறிப்பிட்டுள்ளனர்.

உண்மை அறிவோம்:

வீடியோவில் மலையாளத்தில் பேசப்படுவதால் என்ன சொல்கிறார்கள் என்பதைத் தெரிந்துகொள்ள முடியவில்லை. வீடியோவில் 2017ம் ஆண்டு எடுக்கப்பட்டது போல குறிப்பிட்டுள்ளனர். வடகரா போலீஸ் இவரை கைது செய்துள்ளது என்று தெரிந்தது. கேரள மாநிலம் வடகராவில் 13 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டது தொடர்பாக செய்தி ஏதும் வெளியாகி உள்ளதா என்று தேடினோம்.

Kerala RSS 3.png

அப்போது ஏஷியா நெட் மலையாளம் வெளியிட்ட செய்தி கிடைத்தது. அதை மொழிபெயர்ப்பு செய்து பார்த்தபோது, அதில் ஆர்.எஸ்.எஸ் நிர்வாகி என்று எதுவும் குறிப்பிடவில்லை. ஆனால் திலகன், வடகரா, 13 வயது சிறுமி, செய்தி வெளியான தேதி எல்லாம் குறிப்பிட்ட சம்பவத்தோடு ஒத்துப்போனது. அந்த செய்தியைக் காண இங்கே கிளிக் செய்யுங்கள்.

இந்த தகவல் உண்மையா என்று நம்முடைய மலையாளம் ஃபேக்ட் கிரஸண்டோ (https://www.malayalam.factcrescendo.com/) குழுவினரை செக் செய்து தரும்படி கேட்டோம். வீடியோவில் கைது செய்யப்பட்ட நபர் பா.ஜ.க அல்லது ஆர்.எஸ்.எஸ் உறுப்பினர் என்று எங்கும் குறிப்பிடவில்லை. எனவே, வடகரா போலீசில் பேசி விவரம் பெற்றுத் தருவதாகக் குறிப்பிட்டனர்.

அதன் படி வடகரா போலீஸ் அதிகாரி ஷைனு என்பவரிடம் பேசியுள்ளனர். அவர் அளித்துள்ள தகவல் வருமாறு: “வீடியோவில் உள்ள நபரின் பெயர் திலகன். 2017ம் ஆண்டு ஜூலை 10ம் தேதி வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.  வழக்கு எண் 1013/2017.

தன்னுடைய நண்பனின் 13 வயது பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்துள்ளதாக இந்த நபர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இது கிரிமினல் குற்ற நடவடிக்கை என்பதால் அவருடைய அரசியல் பின்னணியை ஆய்வு செய்யவில்லை” என்றார்.

வடகரா பஞ்சாயத்து பா.ஜ.க நிர்வாகி ஷியாமிடம் பேசியபோது, “திலகன் 1998ம் ஆண்டு ஆர்.எஸ்.எஸ்-ல் இணைந்தார். ஆனால், 1999ம் ஆண்டே ஆர்.எஸ்.எஸ்-ல் இருந்து நீக்கப்பட்டுவிட்டார். சம்பவம் நடந்த போது திலகனுக்கும் ஆர்.எஸ்.எஸ்-க்கும் எந்த தொடர்பும் இல்லை. இந்த சம்பவம் நடந்தபோது இது தொடர்பாக ஆர்.எஸ்.எஸ் சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டிருந்தது” என்றார். விளக்கம் தொடர்பான நோட்டீஸ், அறிக்கை ஏதும் உள்ளதா என்று கேட்டோம். ஆனால், அப்படி எதுவும் தங்களிடம் இல்லை என்று தெரிவித்தார்.

தொடர்ந்து தேடியபோது மலையாள மனோரமா தொலைக்காட்சி வெளியிட்ட செய்தி கிடைத்தது. அதில் கூட பாலியல் பலாத்கார வழக்கில் முதியவர் கைது என்றுதான் குறிப்பிட்டு இருந்தனர். ஆர்.எஸ்.எஸ் பிரமுகராக இருந்திருந்தால் கட்டாயம் ஏதாவது ஒரு பத்திரிகையாவது அது பற்றி செய்தி வௌயிட்டிருக்கும். 19 ஆண்டுகளுக்கு முன்பு அவர் ஆர்.எஸ்.எஸ்-ல் இருந்ததால் அதைப் பற்றி யாரும் குறிப்பிடவில்லை என்பது தெரிந்தது.

Archived Link

நம்முடைய ஆய்வில்,

இந்த சம்பவம் 2017ம் ஆண்டு நடந்தது உறுதியாகி உள்ளது.

வடகரா போலீசில் பேசியதில் இந்த நபருக்கும் ஆர்.எஸ்.எஸ்-க்கும் தொடர்பு இல்லை என்பது தெரியவந்துள்ளது.

வடகரா பா.ஜ.க நிர்வாகியிடம் பேசியபோது, கிட்டத்தட்ட 18-19 ஆண்டுகளுக்கு முன்பு இவர் ஆர்.எஸ்.எஸ் அமைப்பில் இணைந்ததாகவும் பின்னர் நீக்கப்பட்டதாகவும் தெரியவந்துள்ளது.

அதன் பிறகு கிட்டத்தட்ட 19 ஆண்டுகளாக அவருக்கும் ஆர்.எஸ்.எஸ்-க்கும் தொடர்பு இல்லை என்று உறுதி செய்துள்ளனர்.

இந்த ஆதாரங்கள் அடிப்படையில் கேரள மாநிலம் வடகராவில் நண்பனின் மகளை பாலியல் வன்கொடுமை செய்த நபர் ஆர்.எஸ்.எஸ் உறுப்பினர் என்று கூறுவது தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில், மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு தவறானது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.

Avatar

Title:நண்பனின் மகளை பாலியல் பலாத்காரம் செய்த ஆர்.எஸ்.எஸ் ஊழியர்: ஃபேஸ்புகில் பரவும் பகீர் செய்தி

Fact Check By: Chendur Pandian 

Result: False