உலக கோப்பை கிரிக்கெட் அரையிறுதி போட்டியில், இந்திய அணி நியூசிலாந்திடம் தோல்வியடைந்தது தொடர்பாக எச்.ராஜா ட்வீட் செய்ததாக ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

H RAJA 2.png

Facebook Link I Archived Link

எச்.ராஜா தன்னுடைய அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டது போன்ற ஒரு பதிவின் புகைப்படத்தைப் பகிர்ந்துள்ளனர். அதில், "போயும் போயும் கிறிஸ்தவ பாவாடைகள் கிட்ட தோத்திருக்கானுக,,, ச்சேய் கேவலம்

நான் சாவ போறேன்" என்று உள்ளது. நிலைத்தகவலில் "செத்துருங்க ஜீ" என்று குறிப்பிட்டுள்ளனர். இந்த பதிவை நக்கல் மன்னன்-2.0 என்ற ஃபேஸ்புக் பக்கம் 2019 ஜூலை 10ம் தேதி வெளியிட்டுள்ளது. இதேபோன்ற பதிவைப் பலரும் பகிர்ந்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

சர்ச்சைக்குரிய கருத்துக்களை அடிக்கடி தெரிவிப்பவர் பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயலாளர் எச்.ராஜா. அவர் தெரிவிக்கும் கருத்துக்கள் சர்ச்சையாவது போல், அவரைப் பற்றிய பல சர்ச்சைக்குரிய போட்டோஷாப் செய்யப்பட்ட ட்வீட், ஃபேஸ்புக் போஸ்ட் சமூக ஊடகங்களில் பரப்பப்படுவது உண்டு.

நாடாளுமன்ற தேர்தலில் சிவகங்கை மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு எச்.ராஜா தோல்வி அடைந்தார். அப்போது அவர் மரணம் அடைந்துவிட்டார் என்று எல்லாம் கூட சமூக ஊடகங்களில் வதந்தி பரப்பப்பட்டது. அதேபோல், “இரண்டு பொண்டாட்டி கட்டுவது திராவிட கலாச்சாரம்” என்று சர்ச்சையான வகையில் ட்வீட் செய்ததாக ஒருமுறை வதந்தி பரவியது.

அதே நேரத்தில், பெரியார் சிலை பற்றி அவர் ட்வீட் ஒன்றை வெளியிட, அது பெரிய பிரச்னையாக மாற கடைசியில் அது என் அட்மின் போட்டது என்று பின்வாங்கினார். உயர் நீதிமன்றம் தொடர்பாக அவர் அவதூறாக பேசிய வீடியோ சமூக ஊடகங்களில் வெளியானது. ஆனால், அது நான் இல்லை, நான் பேசியதை எடிட் செய்துவிட்டார்கள் என்று கூறினார். கடைசியில் உயர் நீதிமன்றத்தில் ஆஜராகி நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்டு அதிர்ச்சி அளித்தார்.

இதனால், எச்.ராஜா ட்வீட் செய்ததாக வெளியான பதிவை அவரது அரசியல் எதிரிகள் போட்டிருப்பார்கள் என்று என்று ஒதுக்கித் தள்ள முடியவில்லை. மேலும், கமெண்ட் பகுதியில் பலரும் இந்த ட்வீட்டை எச்.ராஜா வெளியிட்டிருப்பார் என்று நம்பி பலரும் கமெண்ட் செய்திருந்தனர். அதனால் அந்த ட்வீட்டின் உண்மைத் தன்மை பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.

H RAJA 3.png

இந்தியா – நியூசிலாந்து அரையிறுதி போட்டி 2019 ஜூலை 10ம் தேதி நடந்தது. இதில் இந்தியா போராடி தோல்வி அடைந்தது. இந்திய அணிக்கு பிரதமர் மோடி, காங்கிரஸ் கட்சி முன்னாள் தலைவர் ராகுல் காந்தி ஆறுதல் சொல்லும் வகையில் ட்வீட் வெளியிட்டிருந்தனர்.

Archived Link

Archived Link

அதேபோல், எச்.ராஜா ஏதாவது வெளியிட்டுள்ளாரா என்று அவருடைய ட்விட்டர் பக்கத்தில் தேடினோம். ஜூலை 10, 11ம் தேதிகளில் எச்.ராஜா வெளியிட்ட ட்வீட்களை ஆய்வு செய்தோம்.

ஜூலை 10ம் தேதி வைகோ, திருமுருகன் காந்தி பற்றிப் பதிவிட்டிருந்தார். ஜூலை 11ம் தேதி காவிரி விவகாரம் மற்றும் உள்நாட்டிலேயே சோலார் பேனல் தயாரிப்பு பற்றி பிரதமர் மோடி வெளியிட்ட ட்வீட்டை ரீட்வீட் செய்திருந்தார். ஆக மொத்தம் நான்கு ட்வீட்களை மட்டுமே அவர் வெளியிட்டிருந்தார்.

H RAJA 4.png

கிரிக்கெட் போட்டி தொடர்பாக அவர் எந்த பதிவையும் வெளியிடவில்லை. ஒருவேளை பதிவை வெளியிட்டுவிட்டு அழித்துவிட்டாரா... அது தொடர்பாக செய்தி ஏதேனும் வெளியாகி உள்ளதா என்று ஆய்வு மேற்கொண்டோம். ஆனால் அப்படி எந்த ஒரு செய்தியும் கிடைக்கவில்லை.

இதன் அடிப்படையில், மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு மார்ஃபிங் மூலம் எடிட் செய்யப்பட்டு எச்.ராஜா பெயரில் வெளியிடப்பட்ட போலியான பதிவு என்று உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில், மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு தவறானது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.

Avatar

Title:கிரிக்கெட் தோல்வி குறித்து எச்.ராஜா கருத்து கூறியதாகப் பரவும் ட்வீட்!

Fact Check By: Chendur Pandian

Result: False