
மதுரை ரயில் நலைய முகப்பில் உள்ள கோபுர வடிவத்தை அகற்ற வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியைச் சேர்ந்த மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் வெங்கடேசன் கோரிக்கை விடுத்ததாக, ஒரு தகவல் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:
மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் புகைப்படத்தைப் பகிர்ந்துள்ளனர். நிலைத் தகவலில், “மதுரை ரயில்நிலைய முகப்பில் உள்ள கோபுர வடிவம் குறிப்பிட்ட மதத்தின் அடையாளமாக இருப்பதாகவும் அதை அகற்ற வேண்டும் என்றும் மதுரை எம்.பி சு.வெங்கடேசன் மதுரை ரயில்வே கோட்ட மேலாளரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
அதே நேரத்தில் நாகப்பட்டினம் நாடாளுமன்றத் தொகுதி உறுப்பினராக இருப்பவரும் கம்யூனிஸ்ட் கட்சியைச் சார்ந்தவர்தான். அந்த தொகுதிக்குட்பட்ட நாகப்பட்டினம் ரயில் நிலையத்தின் முகப்புத் தோற்றம் நாகூர் தர்கா வடிவத்திலும், வேளாங்கண்ணி ரயில் நிலையத்தின் முகப்பு வேளாங்கண்ணி சர்ச் வடிவத்திலும் இருக்கிறதே, அவை இரண்டும் குறிப்பிட்ட மதத்தின் அடையாளங்கள்தானே, அவற்றை அகற்ற வேண்டுமென ஏன் கம்யூனிஸ்ட் எம்.பி-கோரிக்க விடுக்கவில்லை” என்று குறிப்பிட்டுள்ளனர்.
இதைத் தொடர்ந்து மேலும் பல விஷயங்களை குறிப்பிட்டு நீண்ட கட்டுரையாக அதை எழுதியுள்ளனர். ஆனால், சு.வெங்கடேசன் கோரிக்கை தொடர்பாக எந்த ஒரு ஆதாரத்தையும் அளிக்கவில்லை.
இந்த பதிவை, Guru Krishna என்பவர் 2019 செப்டம்பர் 6ம் தேதி வெளியிட்டுள்ளார். பலரும் இதை ஷேர் செய்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
மதுரை எம்.பி சு.வெங்கடேசன் பற்றி சமூக ஊடகங்களில் தொடர்ந்து தவறான கருத்துக்கள் பதிவிடப்பட்டு வருகின்றன. மதுரையில் அழகர் வைகை ஆற்றல் இறக்கும் திருவிழா தினத்தன்று நாடாளுமன்ற தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. இதனால், தேர்தல் தேதியைத் தள்ளி வைக்க வேண்டும் என்று பல தரப்பில் இருந்து கோரிக்கை எழுந்தது. ஆனால், அழகர் ஆற்றில் இறங்கும் சித்திரைத் திருவிழாவைத் தள்ளி வைக்க வேண்டும் என்று சு.வெங்கடேசன் கூறியதாக வதந்தியைப் பரப்பினர். இதுதொடர்பாக நம்முடைய ஃபேக்ட் கிரஸண்டோ மேற்கொண்ட உண்மை கண்டறியும் ஆய்வு கட்டுரையைக் காண இங்கே கிளிக் செய்யுங்கள்.
தற்போது, மதுரை ரயில் நிலையத்தின் முகப்புப் பகுதியில் உள்ள கோபுர சின்னத்தை அகற்ற வேண்டும் என்று கோரிக்கை விடுத்ததாக சமூக ஊடகங்களில் குறிப்பிட்ட குழுக்களால் தகவல் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம்.
மதுரை ரயில் நிலைய முகப்பில் உள்ள கோபுர வடிவத்தை அகற்ற வேண்டும் என்று ரயில்வேக்கு சு.வெங்கடேசன் கோரிக்கை விடுத்தாரா? அது தொடர்பாக செய்தி ஏதும் வந்துள்ளதா என்று தேடினோம். ஆனால் அப்படி எந்த ஒரு செய்தியும் நமக்குக் கிடைக்கவில்லை. அதே நேரத்தில், மதுரைக்கு இயக்கப்படும் தேஜஸ் ரயில் பெயரை மதுரை தமிழ்ச்சங்க ரயில் என்று மாற்ற வேண்டும் என்று சு.வெங்கடேசன் கோரிக்கை விடுத்ததாக செய்திகள் கிடைத்தன.
இது தொடர்பாக சு.வெங்கடேசன் ஃபேஸ்புக் பக்கத்தில் தகவல் ஏதும் உள்ளதா என்று தேடினோம். அப்போது நமக்கு இரண்டு தகவல் கிடைத்தன.
முதலாவது பதிவில், திருச்சி தென்னக ரயில்வே மண்டல பொது மேலாளருடன் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில், மதுரை ரயில் நிலையத்தின் நுழைவு வாயிலில் மீன் லட்சினை அமைக்க வேண்டும் என்று அவர் கூறியதாகக் குறிப்பிட்டிருந்தார்.
மற்றொரு பதிவில், “தென்னக இரயில்வே மண்டலத்தின் பொது மேலாளரிடம் தேஜஸ் ரயில் வண்டியின் பெயரை மதுரை தமிழ்ச்சங்க ரயில் என்று மாற்றுவதற்கான கோரிக்கையை 15 எம்.பி க்கள் கையெழுத்திட்டு வழங்கினோம்” என்று குறிப்பிட்டு இருந்தார்.
மதுரை ரயில் நிலையத்தின் முகப்பு பகுதியில் உள்ள கோபுர சின்னத்தை அகற்ற வேண்டும் என்று சு.வெங்கடேசன் கூறியதாக சமூக ஊடகங்களில் பரப்பப்படும் தகவல் குறித்து சு.வெங்கடேசனிடம் கேட்டோம். “தேஜஸ் ரயில் பெயரை மாற்ற வேண்டும், புதிய ரயில்களை இயக்க வேண்டும், தமிழ் தெரியாத வட மாநில ஊழியர்கள் ரயில்வே வணிகப் பணியில் இருப்பதால் ஏற்படும் பிரச்னைகளைப் பற்றியும், மதுரை ரயில் நிலைய நுழைவாயிலில் மீன் சின்னத்தை அமைப்பது தொடர்பாகவும் வலியுறுத்தினேன்.
படம்: மதுரை எம்.பி சு.வெங்கடேசன்
தமிழ்ச் சங்கம் ரயில் என பெயர் வைக்க வேண்டும் என்ற என்னுடைய கோரிக்கைதான் மதுரைப் பகுதியில் பரவலாக பேசப்பட்டது. தமிழுக்காக தொடர்ந்து குரல் கொடுத்து வரும் சூழலில், எதை எதிர்கொள்ள முடியாமல் இந்து விரோதியாக சித்தரிக்க சிலர் தொடர்ந்து முயற்சித்து வருகின்றனர். ரயில்வே பொது மேலாளரிடம் நான் கொடுத்த கடிதத்தை என்னுடைய ஃபேஸ்புக், ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளேன். பத்திரிகையாளர்களுக்கும் அளித்துள்ளேன். இவர்களின் தமிழ் விரோத செயலை எடுத்துச் சொல்ம்போது, அதை எதிர்கொள்ள முடியாமல் இந்து விரோதியாக சித்தரிக்க முயற்சிக்கின்றனர். நாங்கள் எந்த மதத்துக்கும் விரோதியோ துரோகியோ இல்லை ” என்றார்.
இந்த பதிவில், நாகப்பட்டினம் எம்.பி-யும் கம்யூனிஸ்ட் கட்சியைச் சார்ந்தவர்தான் என்று குறிப்பிட்டுள்ளனர். உண்மைதான்… ஆனால், சு.வெங்கடேசன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சார்ந்தவர், நாகப்பட்டினம் எம்.பி எம்.செல்வராஜ் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்தவர். இரண்டும் வெவ்வேறு கட்சிகள். இது தொடர்பாக பிபிசி தமிழில் வெளியான தமிழக எம்.பி-க்கள் பட்டியலைக் காண இங்கே கிளிக் செய்யுங்கள்.
சு.வெங்கடேசன் கூறாத விஷயத்தை வெளியிட்டு மக்கள் மனதில் விஷத்தை விதைக்கும் முயற்சியில் ஈடுபட்டது தெரிகிறது. எதிர்க்கட்சியினர், கடவுள் நம்பிக்கை அற்றவர்கள் மனதில் தோன்றாத விஷமத்தனமான விஷயம், சிந்தனை எல்லாம் கடவுள் நம்பிக்கை உள்ளவர்கள் என்று கூறுபவர்கள் மனதில் தோன்றுவது அதிர்ச்சியை அளிக்கிறது.
நம்முடைய ஆய்வில்,
மதுரை ரயில் நிலைய முகப்பில் உள்ள கோவில் கோபுரத்தை நீக்க வேண்டும் என்று சு.வெங்கடேசன் கூறியதாக எந்த ஒரு செய்தியும் வெளியாகவில்லை.
கோவிலின் முகப்பு பகுதியில் மீன் சின்னத்தை வைக்க வேண்டும். தேஜஸ் ரயிலின் பெயரை தமிழில் வைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்ததற்கான ஆதாரம் கிடைத்துள்ளது.
சு.வெங்கடேசன் நேரடியாக மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவில் குறிப்பிட்டுள்ள தகவலை மறுத்துள்ளார்.
இந்த ஆதாரங்கள் அடிப்படையில், மார்க்சிஸ்ட் கட்சியைச் சேர்ந்த சு.வெங்கடேசன் மதுரை ரயில் நிலைய முகப்பில் உள்ள கோபுரத்தை அகற்ற வேண்டும் என்று எந்த ஒரு கோரிக்கைவிடுத்ததாக வெளியான ஃபேஸ்புக் பதிவு தவறானது, விஷமத்தனமானது என்று உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில், மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு தவறானது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.

Title:மதுரை ரயில் நிலைய முகப்பு கோபுர வடிவத்தை அகற்றச் சொன்னாரா வெங்கடேசன்?
Fact Check By: Chendur PandianResult: False
