ஆர்.எஸ்.எஸ் என்பதால் மேற்கு வங்கத்தில் கொல்லப்பட்ட குடும்பம்?
ஆர்.எஸ்.எஸ் மற்றும் பாரதிய ஜனதா கட்சியை ஆதரித்தார் என்பதற்காக ஒருவர் குடும்பத்தோடு படுகொலை செய்யப்பட்டார் என்று ஒரு தகவல் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:
Facebook Link | Archived Link |
சமீபத்தில் மேற்கு வங்கத்தில் படுகொலை செய்யப்பட்ட போந்து பிரகாஷ் பால் மற்றும் அவரது குடும்பத்தினர் புகைப்படத்தைப் பகிர்ந்துள்ளனர்.
நிலைத்தகவலில், "ஆர்எஸ்எஸ் மற்றும் பாஜகவை ஆதரித்த ஒரே காரணத்திற்காக ஒரு குழந்தை உட்பட ஒரே குடும்பத்தை சேர்ந்த மூன்று நபர்கள், கொடூரமாகக் கொல்லப்பட்டுள்ளனர். நடந்தது மேற்கு வங்க மாநிலத்தில்.
கொல்லப்பட்டவர்கள் ஹிந்துக்கள். இறந்தவர்களுக்காக நீதிகேட்டு விவாதம் நடத்துமா ஊடகங்கள்? இப்போது கடிதம் எழுதுவார்களா பிரபலங்கள்?" என்று குறிப்பிட்டுள்ளனர்.
இந்த பதிவை, Guru Krishna என்பவர் 2019 அக்டோபர் 10ம் தேதி வெளியிட்டுள்ளார். பலரும் இதை ஷேர் செய்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
மேற்கு வங்க மாநிலம் முர்ஷிதாபாத்தில் ஆசிரியர் போந்து பிரகாஷ் பால், அவருடைய எட்டு மாத கர்ப்பிணி மனைவி, மகன் ஆகியோர் கடந்த 8ம் தேதி வீட்டில் ரத்த வெள்ளத்தில் சடலமாக கண்டெடுக்கப்பட்டனர். கொலையாளிகள் பற்றி போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர். முதலில் வெளியான செய்திகளில் இந்த கொலை அரசியல் காரணங்களுக்காக நிகழ்த்தப்பட்டது என்றோ, கொல்லப்பட்டவர் ஆர்.எஸ்.எஸ் பின்னணி கொண்டவர் என்றோ இல்லை.
freepressjournal.in | Archived Link |
இந்த நிலையில் ஆர்.எஸ்.எஸ் மாநில செயலாளர் ஜிஷ்ணு போஸ் தன்னுடைய சமூக ஊடக பக்கத்தில், "கொலை செய்யப்பட்ட பால், சில மாதங்களுக்கு முன்பு தான் வாரந்தோறும் நடக்கும் ஆர்.எஸ்.எஸ் மிலன் நிகழ்ச்சியில் பங்கேற்க ஆரம்பித்தார். சில மணி நேரங்களில் ஒரு குடும்பமே அழிக்கப்பட்டது அதிர்ச்சியை அளிக்கிறது. குழந்தையும் விட்டு வைக்கவில்லை. சம்பவம் நடந்து 48 மணி நேரத்துக்கு மேல் ஆகிறது. ஆனால் போலீசார் எந்த ஒரு முடிவுக்கும் வந்தது போல இல்லை. ஒருவர் கூட கைது செய்யப்படவில்லை. இந்த கொலை சம்பவம் தொடர்பாக உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று கூறியிருந்தார். அதைத் தொடர்ந்து இந்த கொலை தேசிய அளவில் பேசும் பொருளாக மாறிவிட்டது.
பா.ஜ.க தேசிய செயலாளர் ராகுல் சின்ஹா, "மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு முற்றிலும் குலைந்துவிட்டதை இது காட்டுகிறது. நாம் காட்டாட்சியில் வாழ்கிறோமா? சங் பரிவார் அமைப்புடன் தொடர்புடைய ஆசிரியர் படுகொலை செய்யப்பட்டுள்ளார். அவருடைய மனைவி, குழந்தையைக் கூட விட்டுவைக்கவில்லை. இதற்கு முதலமைச்சர்தான் பொறுப்பு. அவர்தான் அம்மாநிலத்தின் உள்துறை அமைச்சராகவும் உள்ளார்" என்று கூறினார்.
தமிழக பா.ஜ.க பொருளாளர் எஸ்.ஆர்.சேகர் கூட இந்த கொலை தொடர்பான பதிவுகளை அவ்வப்போது வெளியிட்டு வருகிறார்.
Facebook Link | Archived Link 1 |
Times of India | Archived Link 2 |
அனைத்துக்கும் மேலாக அம்மாநில ஆளுநர் இந்த கொலை தொடர்பாக கருத்து தெரிவித்தது பரபரப்பை அதிகரிக்கச் செய்தது. நாடு முழுக்க இந்த கொலை பற்றிய செய்தி, படங்கள் வலதுசாரிகளால் பரப்பப்பட்டு வந்தது.
கொல்லப்பட்ட பிரகாஷ் பால் பள்ளி ஆசிரியராகவும் மல்டி லெவல் மார்க்கெட்டிங் தொழிலும் செய்து வருகிறார் என்று போலீசார் கூறுகின்றனர். "அரசியல், மதம் சார்ந்த காரணத்துக்காக இந்த கொலை நடந்தது என்று கூறுவதற்கு எந்த ஒரு ஆவணமோ, சாட்சியமோ, ஆதாரமோ கிடைக்கவில்லை. இந்த கொலை மிக மோசமாக நடந்துள்ளது. கணவன் மனைவிக்கு இடையே பிரச்னை இருந்துள்ளது. இது தொடர்பாக பிரகாஷ் பால் எழுதிவைத்துள்ளது கிடைத்துள்ளது. எனவே, குடும்ப பிரச்னை காரணமாக கொலை நடந்திருக்கலாமா என்றும் விசாரணை நடத்தி வருகிறோம். பிரகாஷ் பாலுக்கு அரசியல் பின்னணி இருந்தது என்பதற்கான எந்த ஒரு ஆதாரமும் இதுவரை கிடைக்கவில்லை. வீட்டில் இருந்து 15 மீட்டர் தெலைவில் ஆயுத பூஜை நடந்துள்ளது. அதனால் வீட்டில் இருந்து வந்த சப்தம் யாருக்கும் கேட்காமல் போய்விட்டது" என்று கூறியதாக தி பிரிண்ட் இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது.
theprint.in | Archived Link |
கொலை செய்யப்பட்டவர் ஆர்.எஸ்.எஸ் பின்னணியைக் கொண்டவரா என்று தேடினோம். ஆனால், அப்படி எந்த ஒரு ஆதாரமும் நமக்கு கிடைக்கவில்லை. ஜிஷ்ணு போஸ் உள்ளிட்டவர்கள் கூறியதன் அடிப்படையில் போந்து பிரகாஷ் பால் ஆர்.எஸ்.எஸ் பின்னணி கொண்டவர் என்று ஊடகங்கள் செய்தி வெளியிட்டது தெரிந்தது. இந்த நிலையில், போந்து பிரகாஷ் பாலுக்கு எந்த ஒரு அரசியல் அமைப்புடனும் தொடர்பு இருந்தது இல்லை என்று அவருடைய குடும்பத்தினர் மறுப்பு தெரிவித்த செய்திகள் நமக்கு கிடைத்தன.
மேற்கு வங்க காவல் துறை வெளியிட்ட ட்வீட் நமக்கு கிடைத்தது. அதில், "தனிப்பட்ட விரோதத்தின் காரணமாக இந்த கொலை நிகழ்ந்துள்ளது. இது தொடர்பாக ஆசிரியர் ஒருவர் உள்பட இரண்டு பேரைக் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறோம். கொலை செய்யப்பட்டவருக்கு எந்த ஒரு அரசியல் பின்னணி இருந்ததாகவோ, அரசியல் காரணங்களுக்காக கொலை செய்யப்பட்டது என்றோ எந்த ஒரு ஆதாரமும் இல்லை" என்று குறிப்பிட்டு இருந்தனர்.
Archived Link |
இந்தியா டுடே வெளியிட்டுள்ள செய்தியில், கொலை செய்யப்பட்ட போந்து பிரகாஷ் பாலின் தாயார் மாயா பால் பேட்டி வெளியாகி உள்ளது. அதில், "அவன் ஆர்.எஸ்.எஸ் தொண்டர் இல்லை. அவனுக்கு எந்த ஒரு அரசியல் கட்சியுடனும் தொடர்பு இல்லை. அவன் தன்னுடைய ஆசிரியர் பணியில் மிகவும் தீவிரமாக இருந்தான். எந்த ஒரு அரசியல் பணியிலும் அவன் தன்னை ஈடுபடுத்திக்கொண்டது இல்லை" என்றார்.
அதேபோல், போந்து பிரகாஷின் மைத்துனர் திப்திமான் சர்க்கார் ஆர்.எஸ்.எஸ் மீது குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், "என்னுடைய மைத்துனர் எந்த ஒரு அரசியல் கட்சியையும் சார்ந்தவர் இல்லை. அவருடைய மரணத்துக்குப் பிறகு நிதி உதவி அளிப்பதாக என்னை ஆர்.எஸ்.எஸ் உறுப்பினர் ஒருவர் தொடர்புகொண்டார். கொல்கத்தாவிலிருந்து அழைப்பதாக அவர் தெரிவித்தார். அவருடைய பெயர் எனக்கு நினைவில்லை. முதலில் அவர் போந்து பிரகாஷ் உடன் பணியாற்றும் ஆசிரியராக இருப்பார், அதனால்தான் நிதி உதவி செய்ய விரும்புகிறார் பேல என்று நினைத்தேன். ஆனால், அவரிடம் எந்த ஒரு நிதி உதவியும் தேவையில்லை என்று கூறிவிட்டேன்" என்றார்.
indiatoday.in | Archived Link |
பிபிசி தமிழ் வெளியிட்ட செய்தியில், சம்பந்தப்பட்ட பகுதி பா.ஜ.க தலைவர் பிரதாப் ஹால்தாரிடம் பேட்டி எடுத்தது தெரிந்தது. அதில், "பிரகாஷ் பா.ஜ.க-வுக்காக வேலை செய்யவில்லை. ஆனால், ஆர்.எஸ்.எஸ் உடன் அவருக்குத் தொடர்ந்து இருந்ததாகக் கூறுவார்கள். ஆர்.எஸ்.எஸ் கிளையில் பதிவேடு ஏதும் இல்லை. இதனால், ஆதாரங்கள் கிடைப்பது மிகவும் கடினம்" என்று அவர் கூறியுள்ளார்.
முர்ஷிதாபாத் மாவட்ட ஆர்.எஸ்.எஸ் தலைவர் சமர் ராயிடம் பேட்டி எடுத்துள்ளனர். அப்போது அவர், "பிரகாஷ் ஆர்.எஸ்.எஸ் தன்னார்வலர்தான். அவருடைய இல்லத்தில் கூட சில சந்திப்புகள் நடந்துள்ளன. ஆனால், இதுவரை அவரை நான் சந்தித்தது இல்லை. இதுவரை என்னுடன் எந்த ஒரு சந்திப்புக்கும் அவர் வந்தது கிடையாது. ஆனால் ஆர்.எஸ்.எஸ் தன்னார்வலர்கள் சிலர் பிரகாஷ் அடிக்கடி ஆர்.எஸ்.எஸ் அலுவலகத்துக்கு வந்து சென்றதாக கூறினர். அதனால்தான் அவரும் ஆர்.எஸ்.எஸ் தன்னார்வலர் என்று கூறினேன். இதற்கான புகைப்படமோ எந்த ஒரு ஆவணமோ இல்லை" என்றார்.
BBC Tamil | Archived Link |
யாரோ கூறியதை வைத்து பிரகாஷ் பால் ஆர்.எஸ்.எஸ் தன்னார்வலர் என்று கூறியுள்ளனர். பிரகாஷ் ஆர்.எஸ்.எஸ் உறுப்பினர் என்று நிரூபிப்பதற்கான எந்த ஒரு ஆவணங்களோ ஆதாரமோ அவர்களிடம் இல்லை என்று தெரிவித்துள்ளனர்.
நம்முடைய ஆய்வில்,
பிரகாஷ் பால் அரசியல் பின்னணி பற்றிய தகவல் ஆர்.எஸ்.எஸ் மேற்கு வங்க மாநில செயலாளர் கருத்துக்குப் பிறகே உருவாக்கப்பட்டது தெரியவந்துள்ளது.
பிரகாஷ் பால் ஆர்.எஸ்.எஸ், பா.ஜ.க-வுக்கு பணியாற்றினார் என்று நிரூபிப்பதற்குத் தேவையான எந்த ஒரு ஆதாரத்தையும் ஆர்.எஸ்.எஸ்-ஆல் வழங்க முடியவில்லை.
பிரகாஷ் பால் ஆர்.எஸ்.எஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றதாக கூறினார்கள்… அவர் தன்னார்வலர் என்பதை நிரூபிக்க ஆவணங்கள் இல்லை என்று மாவட்ட ஆர்.எஸ்.எஸ் நிர்வாகி கூறியுள்ளது உறுதியாகி உள்ளது.
தனக்கு பணம் கொடுக்க ஆர்.எஸ்.எஸ் நிர்வாகி ஒருவர் முன்வந்தார் என்று கொலை செய்யப்பட்ட பிரகாஷ் பாலின் மைத்துனர் தெரிவித்துள்ளார்.
பிரகாஷ் பாலுக்கு எந்த ஒரு அரசியல் அமைப்போடும் தொடர்பு இருந்தது இல்லை என்று அவரது தயார் மற்றும் மைத்துனர் உறுதி செய்துள்ளனர்.
“அரசியல் காரணங்களுக்காக இந்த கொலை நடந்தது என்பதற்கு எந்த ஒரு ஆதாரமும் கிடைக்கவில்லை. பிரகாஷ் பால் எந்த ஒரு அரசியல் அமைப்போடும் தொடர்பிலிருந்தார் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை” என்று மேற்கு வங்க காவல் துறை வெளியிட்டுள்ள ட்வீட் கிடைத்துள்ளது.
இந்த ஆதாரங்கள் அடிப்படையில், மேற்கு வங்கத்தில் நடந்த ஒரு பயங்கர கொலையை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி தவறான கருத்தை சமூக ஊடகங்களில் பகிர்ந்து வருவது உறுதியாகிறது. ஆர்.எஸ்.எஸ் தன்னார்வலர் என்ற காரணத்தால் இந்த கொலை நடந்தது என்று ஃபேஸ்புக்கில் பதிவிட்ட தகவல் பொய்யானது என்று உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில், மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு தவறானது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.
Title:ஆர்.எஸ்.எஸ் என்பதால் மேற்கு வங்கத்தில் கொல்லப்பட்ட குடும்பம்?
Fact Check By: Chendur PandianResult: False