பா.ஜ.க மற்றும் அ.தி.மு.க அரசுகள் இருக்கும் வரை நீட் தேர்வு தொடரும் என்று தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியதாக ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

VIJAYA BASKAR 2.png
Facebook LinkArchived Link

அக்டோபர் 6, 2019 தேதியிட்ட புதிய தலைமுறை நியூஸ் கார்டு ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அதில் விஜயபாஸ்கர் படம் உள்ளது. "பா.ஜ.க மற்றும் அ.தி.மு.க அரசுகள் இருக்கும் வரை நீட் தேர்வு தொடரும். நீட் உயர் ஜாதியினருக்கு சாகமாக இருக்கிறது என்பது உண்மைதான். ஆனால், அவர்களும் சமூகத்தின் அங்கம்தானே? - அமைச்சர் விஜயபாஸ்கர் விளக்கம்" என்று உள்ளது.

இந்த பதிவை, Natpudan Nowshath என்பவர் 2019 அக்டோபர் 10, 2019 அன்று வெளியிட்டுள்ளார். பலரும் இதை ஷேர் செய்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

தமிழகத்தின் மிக முக்கிய பிரச்னைகளுள் ஒன்று நீட் தேர்வுக்கு விலக்கு பெறுவது. எப்படியாவது நீட் தேர்வுக்கு விளக்கு பெற்றுத் தருவோம் என்றுதான் ஆளும் அ.தி.மு.க-வும் எதிர்க்கட்சியான தி.மு.க-வும் கூறி வருகின்றன. இந்த நிலையில், அ.தி.மு.க ஆட்சி இருக்கும் வரை நீட் தேர்வு தொடரும் என்று தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறினார் என்ற தகவல் சமூக ஊடகங்களில் வைரலாக பரவி வருகிறது. இது உண்மையா என்று ஆய்வு மேற்கொண்டோம்.

நியூஸ் கார்டை பார்க்க அசல் போலவே தெரிகிறது. ஆனால், அமைச்சரின் கருத்து உள்ள பகுதி மட்டும் மாற்றப்பட்டது போல உள்ளது. புதிய தலைமுறை பயன்படுத்தும் தமிழ் ஃபாண்ட் போல இல்லை. மேலும், பின்னணி டிசைன் எதுவும் காணப்படவில்லை. எனவே, புதிய தலைமுறை நியூஸ் கார்டு டிசைனை எடுத்து மாற்றியிருக்கலாம் என்று தெரிகிறது.

VIJAYA BASKAR 3.png

இதை உறுதி செய்ய, அக்டோபர் 10ம் தேதி புதிய தலைமுறையில் வெளியான நியூஸ் கார்டுகளை ஆய்வு செய்தோம். அப்போது, விஜயபாஸ்கர் தொடர்பான நியூஸ் கார்டு ஒன்று கிடைத்தது. ஆனால், அது நீட் தேர்வு தொடர்பானது இல்லை.

புதிய தலைமுறை வௌியிட்ட நியூஸ் கார்டில், "கொசு கடிப்பதற்கு முன் அது உள்ளாட்சித் துறை பணி, கொசு கடித்த பிறகு அது சுகாதாரத்துறை பணி. எனவே, உள்ளாட்சித் துறையும் சுகாதாரத் துறையும் சேர்ந்து டெங்கு தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ளது என கூறினேன். நான் கூறிய கருத்தில் தவறில்லையே? - அமைச்சர் விஜயபாஸ்கர் விளக்கம்" என்று இருந்தது. இந்த நியூஸ் கார்டை எடுத்து, அமைச்சரின் கருத்தை மட்டும் மாற்றி, சர்ச்சைக்குரிய கருத்தைச் சேர்த்து எடிட் செய்து வெளியிட்டுள்ளது உறுதியாகிறது.

VIJAYA BASKAR 4.png

பா.ஜ.க மற்றும் அ.தி.மு.க அரசுகள் இருக்கும் வரை நீட் தேர்வு தொடரும் என்று வேறு எங்காவது அமைச்சர் விஜய பாஸ்கர் கூறினாரா, அது தொடர்பாக செய்தி ஏதும் வெளியாகி உள்ளதா என்று கூகுளில் தேடினோம். ஆனால், நமக்கு அதுபோல எந்த ஒரு செய்தியும் கிடைக்கவில்லை. கடைசியாக நீட் தேர்வு ஆள்மாறாட்டம் தமிழக அரசு காரணம் இல்லை என்று அவர் பேட்டியளித்திருந்தார் என்பது மட்டுமே தெரிந்தது.

Search Linkputhiyathalaimurai.comArchived Link

நம்முடைய ஆய்வில், புதிய தலைமுறை நியூஸ் கார்டை எடிட் செய்து தவறான தகவலை பரப்பியது உறுதி செய்யப்பட்டுள்ளது. அ.தி.மு.க ஆட்சி இருக்கும் வரை நீட் தேர்வு இருக்கும் என்று விஜயபாஸ்கர் கூறியதாக எந்த ஒரு செய்தியும் கிடைக்கவில்லை. இதன் அடிப்படையில், பா.ஜ.க மற்றும் அ.தி.மு.க அரசுகள் இருக்கும் வரை நீட் தேர்வு தொடரும் என்று விஜயபாஸ்கர் கூறியதாக பகிரப்படும் தகவல் தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில், மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு தவறானது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.

Avatar

Title:பாஜக, அதிமுக அரசுகள் இருக்கும் வரை நீட் தொடரும்– விஜயபாஸ்கர் பெயரில் வதந்தி

Fact Check By: Chendur Pandian

Result: False