ரஜினி ஸ்கூல் வாடகை பாக்கி பொய் பிரசாரமா? - வைரல் ஃபேஸ்புக் செய்தி
ரஜினிகாந்த் பள்ளிக்கூட வாடகை பாக்கி என்பது பொய் பிரசாரம் என்று ஒரு தகவல் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:
Facebook Link | Archived Link |
திரைப்பட தயாரிப்பாளரான கலைஞானத்திற்கு ரூ.45 லட்சத்தில் வீடு ஒன்றை நடிகர் ரஜினிகாந்த் வாங்கிக் கொடுத்ததாகக் கூறி, அதுதொடர்பான புகைப்படங்கள் கொலாஜாக பகிரப்பட்டுள்ளன. அவற்றின் மேல், "கலைஞானத்திற்கு 45 லட்சத்தில் வீடு... ஸ்கூல் வாடகை பாக்கி என்று பொய் பிரசாரம் செய்தவர்கள், உங்கள் மனசாட்சியை இப்ப தொட்டுப் பார்த்துக்கொள்ளுங்கள்" என்று குறிப்பிட்டுள்ளனர்.
இந்த பதிவை, நெற்றிக்கண் நெற்றிக்கண் நெற்றிக்கண் என்ற ஃபேஸ்புக் பக்கம் வெளியிட்டுள்ளது. இதை பலரும் ஷேர் செய்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
நடிகர் ரஜினிகாந்த் மனைவி லதா ரஜினிகாந்த் சென்னை வேளச்சேரி, கிண்டி பகுதியில் ஆஸ்ரம் என்ற பள்ளியை நடத்தி வருகிறார். கிண்டி ரேஸ்கோர்ஸ் சாலையில் வெங்கடேஸ்வரலு என்பவருக்கு சொந்தமான இடத்தில் ஒரு பள்ளியை லதா ரஜினிகாந்த் நடத்தி வருகிறார். இந்த இடம் தொடர்பாக வெங்கடேஸ்வரலுவுக்கும் பள்ளி நிர்வாகத்துக்கும் இடையே பிரச்னை இருந்து வருகிறது.
இந்த நிலையில், பள்ளி இருக்கும் இடத்திற்கான வாடகை ரூ.10 கோடியை நிர்வாகம் அளிக்கவில்லை, உயர் நீதிமன்றத்தில் இது தொடர்பாக வழக்கு தொடரப்பட்டுள்ளது என்றும் வெங்கடேஸ்வரலு பரபரப்பு குற்றச்சாட்டை வெளியிட்டார். மேலும், கடந்த 2017ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 16ம் தேதி திடீரென்று பள்ளியின் கேட்டை பூட்டி பரபரப்பை ஏற்படுத்தினார்.
vikatan.com | Archived Link 1 |
puthiyathalaimurai.com | Archived Link 2 |
Youtube Link | Archived Link 3 |
இது தொடர்பாக நிலத்தின் உரிமையாளர்கள் கூறுகையில், "2016ம் ஆண்டு முதல் இந்த பள்ளி கட்டிடத்திற்கான வாடகையை ரூ.10 லட்சமாக உயர்த்தி வழங்க வேண்டும் என்று கூறினோம். ஆனால், நிர்வாகம் ஏற்கவில்லை. இதனால் வழக்கு தொடர்ந்தோம். 10 கோடி ரூபாய் நிலுவை உள்ளதாக குறிப்பிட்டோம். ஆனால், நீதிமன்றம் அவ்வளவு தர முடியாது, ரூ.2 கோடி வழங்க உத்தரவிட்டனர். நாங்களும் அதை ஏற்றுக்கொண்டோம். ஆனால், அந்த ரூ.2 கோடியை வழங்கக் கூட ஆஸ்ரம் நிர்வாகம் முன்வரவில்லை. அதனால் கேட்டை பூட்டினோம்" என்றனர்.
Archived Link |
ஆனால், இந்த குற்றச்சாட்டை லதா ரஜினிகாந்த் மற்றும் பள்ளி நிர்வாகம் மறுத்தது. இது தொடர்பாக பள்ளி நிர்வாகம் வெளியிட்ட அறிக்கையில், "ஆஸ்ரம் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் சார்பில், நாங்கள் பின் வரும் இந்தத் தகவலை அளிக்கிறோம். நாங்கள் கிண்டியில் இருக்கும் எங்கள் பள்ளியை கடந்த 10 வருடங்களுக்கு மேலாக நடத்தி வருகிறோம்.
சமீபகாலமாக நில உரிமையாளரின் குடும்ப தகராறு காரணமாக நாங்கள் அவர்களிடமிருந்து அநேக தொந்தரவுகளை சந்தித்து வருகிறோம். இது வாடகை பற்றியது மட்டும் அல்ல. இது ஒரு சுரண்டல். மற்றும் அவர்கள் காரணமில்லாமலும் முறையற்ற முறையிலும் வாடகைத் தொகையை நாங்கள் பேசிய தொகையைக் காட்டிலும் அதிகரித்துள்ளனர்.
நாங்கள் இது குறித்து ஏற்கனவே ஆலோசித்தது மட்டுமில்லாமல் அந்த இடத்தை காலி செய்வது குறித்தும் முடிவெடுத்துள்ளோம். மேலும், இப்பிரச்னையை முடிப்பது தொடர்பாக பேச்சு வார்தைகளில் ஈடுபட்டுள்ளோம்" என்று குறிப்பிட்டிருந்தனர்.
indiaglitz.com | Archived Link 1 |
tamil.indianexpress.com | Archived Link 2 |
அதைத் தொடர்ந்து வெங்கடேஸ்வரலு மீது நீதிமன்றத்தில் பள்ளி நிர்வாகம் தரப்பில் அவதூறு வழக்கும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
நிலத்தின் உரிமையாளர் வாடகையை அதிகமாக கேட்கிறாரா, அது அநியாயமானதா என்ற ஆய்வுக்குள் நாம் செல்லவில்லை. வாடகை பாக்கி என்று வதந்தி பரப்பப்படுகிறதா என்று மட்டுமே நாம் ஆய்வு மேற்கொண்டோம்.
நம்முடைய ஆய்வில்,
வாடகை பாக்கி உள்ளது, நீதிமன்ற உத்தரவிட்டும் நிலுவைத் தொகையை வழங்கவில்லை என்று நிலத்தின் உரிமையாளர் கூறியது உறுதி செய்யப்பட்டுள்ளது.
பல ஆண்டுகளாக இது தொடர்பாக பிரச்னை இருப்பதும், உயர் நீதிமன்றத்தில் வழக்கு நடந்து வந்திருப்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளது.
நிலத்தின் உரிமையாளர் பிரச்னை கொடுப்பதாகவும், வாடகை தொடர்பாக பிரச்னை உள்ளதாகவும் பள்ளி நிர்வாகம் தெரிவித்தது உறுதி செய்துள்ளது.
பள்ளியின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தியதாகக் கூறி நிலத்தின் உரிமையாளர் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது.
இந்த ஆதாரங்கள் அடிப்படையில், ஆஸ்ரம் பள்ளி வாடகை தொடர்பாக வதந்தி பரப்பப்பட்டது என்ற தகவல் தவறானது என்பது உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில், மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு தவறானது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.
Title:ரஜினி ஸ்கூல் வாடகை பாக்கி பொய் பிரசாரமா? - வைரல் ஃபேஸ்புக் செய்தி
Fact Check By: Chendur PandianResult: False