பிள்ளையார் கோவிலை அகற்ற வேண்டும்- சரவணா ஸ்டோர் பெயரில் பரவும் வதந்தி!

சமூக ஊடகம் | Social சமூகம்

சரவணா ஸ்டோர் முன்பு உள்ள பிள்ளையார் கோவிலை அகற்ற வேண்டும் என்று சிலர் சரவணா ஸ்டோர் உரிமையாளரை அணுகியதாக ஒரு பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

SARAVANA 2.png
Facebook Link 1Archived Link 1
Facebook Link 2Archived Link 2
Article LinkArchived Link 3

பிள்ளையார் கோவிலை உடனடியாக எடுக்கச் சொன்னவர்களுக்கு சரவணா ஸ்டோர் அண்ணாச்சி கொடுத்த பொளேர் பதிலடி! – என்று ஒரு செய்தி சமூக ஊடகங்களில் வைரலாக பரவி வருகிறது. tnnews24.com என்ற இணையதளம் வெளியிட்ட இந்த செய்தியை பலரும் சமூக ஊடகங்களில் பகிர்ந்து வருகின்றனர்.

tnnews24 என்ற ஃபேஸ்புக் பக்கம் இந்த செய்தியை அக்டோபர் 23, 2019 அன்று ஷேர் செய்துள்ளது. இதேபோல், Namhindu – நாம் இந்து என்ற ஃபேஸ்புக் பக்கம் செய்தியை மட்டும் காப்பி பேஸ்ட்  (யு.ஆர்.எல் இணைப்பு வழங்கவில்லை) செய்து பகிர்ந்துள்ளது. 2019 அக்டோபர் 24ம் தேதி வெளியான இந்த பதிவை நூற்றுக் கணக்கானோர் ஷேர் செய்துள்ளனர்.

உண்மை அறிவோம்:

குரோம்பேட்டையில் உள்ள சூப்பர் சரவணா ஸ்டோர் கடை முன்பு பிள்ளையார் கோவில் ஒன்று உள்ளதாகவும், அந்த பகுதியில் அதிக அளவில் காணப்படும் சிறுபான்மை சமூகத்தினர் இந்த கோவிலை அகற்ற வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளதாகவும் சமூக ஊடகங்களில் செய்தி பகிரப்பட்டுள்ளது. குறிப்பிட்ட இரு சமயத்தைச் சார்ந்தவர்கள் பற்றியது என்பதால் அதிக அளவில் இது ஷேர் செய்யப்பட்டு வருகிறது.

டிஎன்நியூஸ்24 வெளியிட்டிருந்த செய்தியைப் படித்துப் பார்த்தோம். தலைப்பு. லீட் தாண்டிய பிறகு, “சமூக வலைத்தளம்” என்று சப்-டைட்டில் வைத்திருந்தனர். அதில், “குரோம்பேட்டை சரவணா ஸ்டோர் கடைக்கு ஒரு குறிப்பிட்ட மதத்தைச் சேர்ந்தவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். அதற்கு காரணமாக அவர்கள் சொன்ன தகவலை கேட்டு ஒட்டுமொத்த கடை ஊழியர்களும் அதிர்ச்சி அடைந்தனர்.

பல்லாவரம் பகுதியில் எங்கள் மதத்தைச் சார்ந்தவர்கள் அதிகம் வசிக்கிறோம். அப்படி இருக்கையில் பலரும் உங்கள் கடையைத் தேடி வந்து துணிகள் முதல் அனைத்து பொருள்களையும் வாங்குகிறோம். ஆனால், உங்கள் குரோம்பேட்டை கடையின் வாசலில் பிள்ளையார் கோவில் அமைந்திருப்பது எங்களுக்குப் பிடிக்கவில்லை. எடுத்துவிடுங்கள்… இல்லை என்றால் கடைக்கு யாரையும் வரவிடமாட்டோம் என்று முதலில் பணிவுடனும் பின்பு எச்சரிக்கையாகவும் தெரிவித்தனர்.

அதற்கு சரவணா ஸ்டோர் கொடுத்த பதிலடியில் ஆடிப்போய்விட்டனர் எதிர் தரப்பினர். நானும் எங்கள் குடும்பமும் முன்னேற்றத்திற்குக் காரணம் எங்கள் கடவுள் பக்தி. எவ்வளவு உயரம் சென்றாலும் எப்போதும் எங்கள் குடும்பம் கடவுளுக்குப் பணி செய்து கொண்டேதான் இருக்கும். கோவிலை எடுத்துத்தான் அப்படி ஒரு வியாபாரம் வரும் என்றால் அப்படி ஒரு வருமானமே தேவையில்லை என்று அதிரடியாகத் தெரிவித்துள்ளார்” என்று குறிப்பிட்டு இருந்தனர்.

கரிகால சோழன் என்பவர் சமூக ஊடகத்தில் வெளியிட்ட பதிவை செய்தியாக வெளியிட்டதாக குறிப்பிட்டுள்ளனர். கடைசியில் ஒரு குறிப்பையும் வைத்திருந்தனர். அதில், “சரவணா ஸ்டோர் நிர்வாகம் உறுதிப்படுத்திய பின்பே இந்த தகவலை பகிர்ந்துள்ளோம். இது குறித்த புகார் குரோம்பேட்டை காவல் நிலையத்தில் அளிக்கப்பட்டுள்ளதாகவும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது” என்று குறிப்பிட்டு இருந்தனர்.

இந்த செய்தியில், சரவணா ஸ்டோர் அண்ணாச்சி என்று மொட்டையாக குறிப்பிட்டுள்ளனர். உரிமையாளர் பெயரை குறிப்பிடவில்லை. செய்தியில், தி லெஜெண்ட் சரவணா ஸ்டோர்ஸ் உரிமையாளர் அருள் படத்தை வைத்துள்ளனர். இதன் மூலம், குரோம்பேட்டையில் உள்ள சரவணா ஸ்டோர் உரிமையாளர் அருள் என்று தெரிவித்துள்ளனர். இதுவே இந்த தகவல் தவறு என்பதை உறுதி செய்கிறது.

SARAVANA 5.png

செல்வரத்தினம் என்பவரால் தொடங்கப்பட்ட சரவணா ஸ்டோர் இன்று பாகப் பிரிவினைக்குப் பிறகு வாரிசுகளின் கைகளுக்கு சென்றுவிட்டது. செல்வ ரத்தினத்தின் மகன் சரவணன் அருளுக்கு சரவணா செல்வரத்தினம் ஸ்டோர் மற்றும் தி லெஜெண்ட் சரவணா ஸ்டோர் உள்ளிட்டவை சொந்தமாகும். இவருக்கு பாடி மற்றும் டிநகரில் கடைகள் உள்ளன. இதை இவருடைய நிறுவனத்தின் இணையளத்துக்கு சென்றாலே தெரிந்துகொள்ளலாம்.

SARAVANA 6.png
tamil.boldsky.comArchived Link

சரவணா செல்வரத்தினத்தின் சகோதரர் ராஜரத்தினம் தனது மகனுடன் இணைந்து சூப்பர் ஸ்டோர் சரவணா ஸ்டோர் என்ற பெயரில் வணிகம் செய்து வருகிறார். இவர்கள் டி.நகர், புரசைவாக்கம், குரோம்பேட்டை, போரூரில் உள்ள சூப்பர் சரவணா ஸ்டோர் கடைகளை நடத்தி வருகின்றனர். அப்படி இருக்கும்போது, லெஜெண்ட் சரவணா ஸ்டோர் உரிமையாளர் சரவணன் அருளிடம் சென்று எப்படி கோரிக்கை விடுத்திருப்பார்கள் என்று தெரியவில்லை.

SARAVANA 7.png

இந்த மிரட்டல் தொடர்பாக சரவணா ஸ்டோர் சார்பில் குரோம்பேட்டை போலீசில் புகார் அளித்துள்ளதாக தெரிவித்துள்ளனர். இது உண்மையா என்று அறிந்துகொள்ள குரோம்பேட்டை போலீஸ் நிலையத்தை (044 2345 2770) தொடர்புகொண்டு பேசினோம். நம்மிடம் பேசியவர்கள், ”இந்த தகவல் தவறானது. சரவணா ஸ்டோர் முன்பு உள்ள கோவிலை அகற்றும்படி மிரட்டல் விடுத்ததாக எந்த ஒரு புகாரும் எங்களுக்கு வரவில்லை” என்றனர்.

நம்முடைய ஆய்வில்,

குரோம்பேட்டை சூப்பர் சரவணா ஸ்டோர் அருள் செல்வ ரத்தினத்துக்கு உரிமையானது இல்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

அருள் செல்வ ரத்தினத்துக்கு டி.நகர், பாடியில் கடைகள் உள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது.

கடை முன்பு உள்ள கோவிலை அகற்றும்படி சரவணா ஸ்டோருக்கு மிரட்டல் வந்ததாக எந்த ஒரு புகாரும் வரவில்லை என்று குரோம்பேட்டை போலீசார் உறுதி செய்துள்ளனர்.

இந்த ஆதாரங்கள் அடிப்படையில், குரோம்பேட்டை சரவணா ஸ்டோர் கடை முன்பு உள்ள விநாயகர் கோவிலை அகற்றும்படி மிரட்டல் விடுக்கப்பட்டது என்று சமூக ஊடகங்களில் பரவும் தகவல் வெறும் வதந்தி என்று உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில், மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு தவறானது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.

Avatar

Title:பிள்ளையார் கோவிலை அகற்ற வேண்டும்- சரவணா ஸ்டோர் பெயரில் பரவும் வதந்தி!

Fact Check By: Chendur Pandian 

Result: False