
தேள் கொட்டினால் இதய நோய் வராது, தேனி கொட்டினால் உயர் ரத்த அழுத்தம் வராது, செய்யான் கடித்தால் சர்க்கரை நோய் வராது, சங்குழவி கடித்தால் புற்றுநோய் வராது என்று ஒரு பதிவு வாட்ஸ்அப், ஃபேஸ்புக்கில் வைரலாக பரவி வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:

Facebook Link | Archived Link |
உங்களுக்குத் தெரியுமா என்று தலைப்பிட்டு தேள் படத்துடன் கூடிய போட்டோ நியூஸ் கார்டு ஒன்று ஃபேஸ்புக்கில் பலராலும் பகிரப்பட்டு வருகிறது. அதில், “ஒரு மனிதனை தேள் கடித்து பின் வைத்தியம் பார்த்துவிட்டால், அவருக்கு வாழ்நாள் முழுவதும் இதய அறுவைசிகிச்சையோ, ஆஞ்சியோபிளாஸ்டோ தேவையில்லை. தேள் கடித்தவருக்கு மார்க்கட்டீன் என்ற விஷம் இதய ரத்த குழாய்களில் கொழுப்பு படிவதை தடுத்து இதய நோய் வராமல் தடுக்கிறது. இதைப்போல், தேனீ கொட்டியவர்களுக்கு ரத்த கொதிப்பு வராது, செய்யான் கடித்தவர்களுக்கு சர்க்கரை நோய் வராது, சங்குழவி கடித்தவருக்கு கேன்சர் வராது. இவைகளின் விஷம்தான் ஆங்கில மருத்துவத்தில் தடுப்பு மருந்தாக பயன்படுகிறது” என்று குறிப்பிட்டுள்ளனர்.
வாட்ஸ் ஆப், ஹலோ உள்ளிட்ட சமூக ஊடகங்களில் இந்த புகைப்படம் வைரலாக பரவி வருகிறது. ஃபேஸ்புக்கில் இந்த பதிவு பலராலும் ஷேர் செய்யப்பட்டு வருகிறது. இது உண்மையா என்ற சந்தேகத்தோடு Namasivayam K என்பவர் 2019 அக்டோபர் 4ம் தேதி இந்த பதிவை வெளியிட்டுள்ளார். பலரும் இதை ஷேர் செய்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
பாம்பு உள்ளிட்ட சில விஷ உயிரினங்களிடமிருந்து எடுக்கப்படும் விஷத்தைக் கொண்டு மருந்துகள் தயாரிக்கப்படுவது உண்மையே. இந்த ஒரு வரி உண்மையை வைத்துக்கொண்டு ஒரு கதையே எழுதிவிட்டனர். இது உண்மையா, பொய்யா என்று தெரியாமல் தெரிந்துகொள்ளும் ஆர்வத்தில் இதை பலரும் சமூக ஊடகங்களில் ஷேர் செய்து வருவது தெரிந்தது.

அந்த போட்டோ கார்டில் குறிப்பிட்டது போன்று மார்க்கட்டீன் என்று விஷம் உள்ளதா என்று தேடினோம். கூகுளில் தேடியபோது அதுபோல எதுவும் நமக்கு கிடைக்கவில்லை. வேறு வேறு முறைகளில் டைப் செய்தபோது மார்கடாக்சின் (margatoxin) என்ற பெயரில் ஒரு வேதிப் பொருள் இருப்பது தெரியவந்தது. அது இதய நோயைத் தடுக்க உதவலாம் என்று ஆராய்ச்சி முடிவுகளில் தெரியவந்துள்ளது என்று 2010ம் ஆண்டு வெளியான கட்டுரை கிடைத்தது. அதுவும் ஆராய்ச்சி நிலையில்தான் உள்ளது… மருந்தாகவோ, சிகிச்சையாகவே எங்கும் அறிமுகப்படுத்தப்படவில்லை.
BBC | Archived Link 1 |
pharmaceutical-technology.com | Archived Link 2 |
ஒருவேளை சித்த மருத்துவத்தில் இதுபோன்று ஏதேனும் நம்பிக்கை உள்ளதா என்று வேலூர் மாவட்டம் ஆண்டியப்பனூர் அரசு சித்த மருத்துவர் டாக்டர் விக்ரம் குமாரிடம் கேட்டோம்.

டாக்டர் விக்ரம் குமார்
“இந்த தகவல் முழுக்க முழுக்க தவறானது. தேள், தேனீ, குழவி கொட்டினால் நோய்கள் வராது என்று கூறுவது எல்லாம் ஏமாற்று வேலை. இதற்கு எந்த ஒரு ஆராய்ச்சி முடிவும் இல்லை. தேள் கொட்டினால் இதய நோய் வராது என்கிறார்கள், இதய நோய் வருவதற்கு உணவு, உடற்பயிற்சியின்மை என்று பல காரணங்கள் உள்ளன. தேள் கொட்டிய ஒருவர் ஜங்க் ஃபுட் சாப்பிட்டு, புகையிலைப் பழக்கம் அதிகமாக கொண்டிருந்தாலும் அவருக்கு இதய நோய் வரத்தான் செய்யும். எனவே, இதுபோன்ற வதந்திகளை நம்ப வேண்டாம்” என்றார்.
மூலிகை ஆராய்ச்சியாளர் எம்.மரிய பெல்சினிடம் கேட்டோம். “தேளின் விஷத்தில் உள்ள `மார்கடாக்சின்’ (Margatoxin) என்ற விஷம் தொடர்பாக நடத்தப்பட்ட ஓர் ஆய்வில், அது இதய செயலிழப்பை தடுக்கும் என்பது கண்டுபிடிக்கப்பட்டது. ஆனால், அதை யாரும் உறுதிபடுத்தவோ, தேளின் விஷத்தை ஊசி மூலம் செலுத்தி யாருக்கும் சிகிச்சையோ அளிக்கப்படவில்லை. அப்படியொரு அபாயகரமான சிகிச்சையை யாரும் அளிக்கவில்லை. இது உயிருடன் விளையாடும் செயல் என்பதால் இதுபற்றி வெளிப்படையாக யாரும் அறிக்கை வெளியிடவில்லை. எங்கோ (வெளிநாட்டில்) எப்போதோ நடத்தப்பட்ட ஓர் ஆய்வை முன்னிறுத்தி இதுபோன்ற தவறான தகவலை பரப்புவது சரியல்ல. இதை மக்கள் நம்பவேண்டாம். எனக்கு இதய நோய் வராமலிருக்க வேண்டுமானால் எத்தகைய விஷப்பரிட்சையையும் செய்யத்தயார் என்று யாரும் இறங்க வேண்டாம்.
இதேபோல் தேனீயைக் கொட்ட வைப்பதன்மூலம் மூட்டுவலி, எலும்புகளில் ஏற்படும் வலி, மூட்டு அழற்சி மற்றும் நோய் எதிர்ப்புத்திறன் குறைபாடுகளைப் போக்கலாம் என்றும் சீன மருத்துவத்தில் அது பின்பற்றப்படுவதாகவும் சொல்லப்படுகிறது. ஆனால்,இப்படியொரு சிகிச்சையை நம் ஊரில் யாரும் செய்ததாகவோ, அதை பரிந்துரைத்ததாகவோ தெரியவில்லை. தனிப்பட்ட யாரும் முயற்சித்திருக்கலாம். தேனீ கொட்டுவதால் வெளிப்படும் அதன் விஷம் அல்லது நச்சில் மெலிட்டின் (Melittin) என்ற புரதம் அதிக அளவில் இருக்கிறது. அது தற்காலிக வீக்கம் மற்றும் வலியை ஏற்படுத்துவதுடன் ரத்தத்தை உறைய வைக்கும். வேறு சிகிச்சையுடன் இணைத்து செய்யப்படும்போது இந்த தேனீ கொட்டு சிகிச்சை மூலம் ஆர்த்ரைட்டிஸ் பிரச்னையை சரி செய்யலாம் என்று அமெரிக்காவில் உள்ள தேசிய உயிரி தொழில்நுட்பவியல் தகவல் மையம் கூறியுள்ளது. எலிகளுக்கு இந்தப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதாகவும் மனிதர்களுக்கு இது மேற்கொள்ளப்படவோ, பரிந்துரைக்கப்படவோ இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
ஆகவே, இதுபோன்று வாயில் வந்ததையும், கண்ணில் கண்டதையும் பார்த்து செய்ய வேண்டாம். இதுபோன்ற தவறான தகவல்களை உறுதிபடுத்தாமல் யாருக்கும் பரிந்துரைக்கவும் வேண்டாம். இவற்றை உண்மையென்று நம்பி பரீட்சித்துப் பார்த்தால் விபரீதம் நிகழலாம் என்பதால் எச்சரிக்கை தேவை” என்றார்.
இந்த தரவுகள் அடிப்படையில், தேள் கடித்தவர்களுக்கு இதய நோய் வராது என்று பகிரப்படும் தகவல் தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில், மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு தவறானது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.

Title:தேள் கொட்டினால் இதய நோய் வராது: சமூக ஊடகத்தை கலக்கும் வதந்தி!
Fact Check By: Chendur PandianResult: False
