ஜப்பானை தாக்கும் சுனாமி அலைகள் என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive

சுனாமி தாக்குதலில் படகுகள், சிறிய கப்பல்கள் அடித்துச் செல்லப்படும் வீடியோ ஃபேஸ்புக்கில் 2024 ஜனவரி 1ம் தேதி பதிவிடப்பட்டிருந்தது.

நிலைத் தகவலில், "Big breaking: சுனாமியின் முதல் அலைகள் ஜப்பானில் தாக்க தொடங்கியது என அந்நாட்டு வானிலை ஆய்வு மையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. ரிக்டர் அளவுகோலில் 7.6 என்ற அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டிருந்த நிலையில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது இந்நிலையில் சுனாமி ஜப்பானின் கடற்கரை பகுதிகளில் தாக்கி வருகிறது" என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

உண்மை அறிவோம்:

2024 ஜனவரி 1ம் தேதி ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து ஜப்பானில் சுனாமி ஏற்பட்டது. இதில் ஏராளமானோர் பாதிக்கப்பட்டதாக முதல்கட்ட செய்திகள் கூறுகின்றன. இந்த நிலையில் ஜப்பானில் தாக்கிய சுனாமி என்று சிலர் சமூக ஊடகங்களில் புகைப்படங்கள், வீடியோக்களை பகிர்ந்து வருகின்றனர். இதை பார்க்கும் போது 2024 ஜனவரி 1 அன்று ஏற்பட்ட சுனாமி பாதிப்பின் வீடியோ என்றே நம்பத் தோற்றும் வகையில் உள்ளது. உண்மையில் இந்த வீடியோ 2024ஐ சேர்ந்ததா என்று ஆய்வு செய்தோம்.

நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட ஃபேஸ்புக் பதிவு வீடியோ பல ஆண்டுகளாக சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வரும் வீடியோ தான். 2011ம் ஆண்டு ஜப்பானில் ஏற்பட்ட சுனாமியின் போது எடுக்கப்பட்ட வீடியோ. இதை உறுதி செய்ய உண்மை வீடியோவை தேடினோம். வீடியோ காட்சிகளை புகைப்படங்களாக மாற்றி கூகுள் ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றித் தேடினோம். 2011ம் ஆண்டு இந்த வீடியோவை ஏபி எனப்படும் Associated Press செய்தி நிறுவனம் தன்னுடைய யூடியூப் பக்கத்தில் வெளியிட்டிருந்தது. மார்ச் 14. 2011 அன்று பதிவிடப்பட்ட அந்த பதிவில், ஜப்பான் நகரமான மியாகோவில் (Miyako) ஏற்பட்ட சுனாமி என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

இதன் மூலம் 2011ம் ஆண்டு வீடியோவை தற்போது 2024 சுனாமியை குறிப்பிட்டு தவறாகப் பகிர்ந்திருப்பது தெளிவாகிறது. இந்த வீடியோ ஜப்பானில் ஏற்பட்ட சுனாமி வீடியோதான். 2011ம் ஆண்டு ஏற்பட்ட சுனாமியின் பழைய வீடியோ என்று குறிப்பிட்டிருந்தால் சரியாக இருந்திருக்கும்!

முடிவு:

2024 ஜனவரி 1ம் தேதி ஏற்பட்ட நிலநடுக்கத்தைத் தொடர்ந்து ஜப்பானில் சுனாமி முதல் அலை தாக்கத் தொடங்கியது என்று பரவும் வீடியோ 2011ம் ஆண்டு ஏற்பட்ட சுனாமியின் போது பதிவு செய்யப்பட்டது என்பதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…

Facebook I Twitter I Google News Channel

Avatar

Title:ஜப்பான் சுனாமி என்று பரவும் பழைய வீடியோவால் பரபரப்பு!

Written By: Chendur Pandian

Result: Missing Context