
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், 19 ஆண்டுகள் வாடகை பாக்கி வைத்திருந்ததாக தகவல் ஒன்று சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:

Facebook Link | Archived Link |
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மற்றும் பெரியவர் ஒருவரின் புகைப்படங்களை ஒன்று சேர்த்து பதிவிட்டுள்ளனர். அதில், சீமான் படம் இருக்கும் பகுதியில், “ஐந்து வருடம் என்னிடம் இந்த நாட்டை கொடுத்துப் பாருங்கள் – சைமன்” என்று உள்ளது. கீழே பெரியவர் படம் இருக்கும் இடத்தில், “19 வருஷமா சைமனுக்கு வீட்டை வாடகைக்கு விட்டுவிட்டுத் தவிக்கும் பெரியவர்” என்று உள்ளது. இதன் மூலம், சீமான் 19 ஆண்டுகளாக வீட்டுக்கு வாடகை தராமல் பெரியவரை ஏமாற்றி வருவது போன்ற தோற்றத்தை ஏற்படுத்தியுள்ளனர்.
இந்த பதிவை, Ponni Ravi என்பவர் தன்னுடைய ஃபேஸ்புக் பக்கத்தில் 2019 அக்டோபர் 8ம் தேதி வெளியிட்டுள்ளார். பலரும் இதை ஷேர் செய்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
சில ஆண்டுகளுக்கு முன்பு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தன்னுடைய வீட்டுக்கு வாடகை கூட செலுத்தாமல் இருந்ததாகவும் நீதிமன்ற உத்தரவு அடிப்படையில் வீட்டைவிட்டு அவரை வெளியேற்றிவிட்டதாகவும் வழக்கறிஞர் ஒருவர் பதிவிட்டிருந்தார். ஆனால், அப்போதே இந்த தகவல் தவறானது என்று விளக்கம் அளிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து தன்னுடைய பதிவையும் அந்த வழக்கறிஞர் நீக்கினார். அவராக நீக்கிவிட்டதால் இது பெரிய அளவில் பேசுபொருள் ஆகவில்லை. ஆனால், சமூக ஊடகங்களில் அவ்வப்போது இந்த விஷயம் வைரல் ஆக்கப்படுகிறது.
news.mowval.in | Archived Link |
இந்த நிலையில் புதிதாக வீட்டுக்கான வாடகையை சீமான் அளிக்காமல் பெரியவர் ஒருவரை ஏமாற்றி வருவது போல பதிவிட்டுள்ளனர். இது உண்மையா என்று ஆய்வு மேற்கொண்டோம். கூகுளில் “சீமான் வீட்டு வாடகை பிரச்னை” என்று டைப் செய்து தேடினோம். அப்போது, 2018ம் ஆண்டு வெளியான வாடகை பிரச்னை தொடர்பான செய்திகளே கிடைத்தன.

Search Link | Asianet news | Archived Link |
அந்த செய்திகளை படித்துப் பார்த்தோம். அதில் 15 ஆண்டுகளாக வீட்டு உரிமையாளரைக் கூட பார்க்கவில்லை என்று சீமான் தரப்பு அளித்திருந்த விளக்கம் இருந்தது. அதேநேரத்தில், “19 ஆண்டுகளாக வாடகை கூட தராமல் வீட்டை ஏமாற்றி வந்த சீமான்! கோர்ட்டுக்கு சென்று மீட்ட பெரியவர்! வைரலாகும் முகநூல் பதிவு” என்று ஏஷியாநெட் நியூஸ் தமிழ் உள்ளிட்ட சில இணையதளங்களில் செய்தி வெளியாகி இருந்தது நமக்கு கிடைத்தது. 2018ம் ஆண்டு வழக்கறிஞர் வி.எஸ்.கோபு என்பவர் பதிவிட்டதைத்தான் அந்த செய்தியில் குறிப்பிட்டு இருந்தனர்.
வி.எஸ்.கோபு தன்னுடைய பதிவில், “சென்னை சாலிகிராமம் பகுதியில் 19 ஆண்டுகளாக ஒரு முதியவரின் வீட்டில் வாடகை கொடுக்காமல் தங்கியிருந்தார் சீமான். இத்தனை வருட காலமாக, ரூ.45 லட்சத்துக்கும் மேல் வாடகை பாக்கி இருக்கிறது. பல நீதிமன்றங்களில் வழக்கு இழுத்தடிப்பு, உரிமையாளர் உள்ளே நுழைய முடியாதபடியான மிரட்டல். ஒரு வழியாக இன்று என்னால் அதற்குத் தீர்வு கிடைத்தது என நினைக்கும்போது ஒரு வழக்கறிஞராக நான் பெருமிதம் கொள்கிறேன்.
இத்தனைக்கும் சீமான் ஒரிஜினல் வாடகைதாரர் அல்ல. உண்மையான வாடகைதாரரே காலி செய்துவிட்டு சென்ற பிறகு, அவரோடு அவர் உதவி இயக்குநராகத் தங்கி வாழ்க்கையை ஆரம்பித்த இடத்தைவிட்டு இன்றுவரை வெளியேற மறுத்து வந்தார். இன்று இதுவரை தான் செய்த தவற்றை உணர்ந்து, மனந்திருந்தி வீட்டின் சாவியை நீதிமன்றம் வழியாக உரிமையாளரிடம் ஒப்படைத்தார் நாம் தமிழர் கட்சி சீமான்” என்று குறிப்பிட்டு இருந்தார். வழக்கறிஞர் வெளியிட்ட பதிவு நீக்கப்பட்டுவிட்டது. ஆனால், அவருடைய பதிவை பலரும் ஷேர் செய்து வருகின்றனர்.
Facebook Link | Archived Link |
ஆனால் இந்த தகவல் தவறானது என்று நாம் தமிழர் கட்சியினர் மறுத்திருந்தனர். இது தொடர்பாக சீமான் தரப்பில் பேசியவர்கள், “19 ஆண்டுகளுக்கு முன்பு ரவிச்சந்திரன் என்பவர் அந்த வீட்டுக்கு வாடகை வந்தார். அவர் பெயரில்தான் அக்ரிமெண்ட் போடப்பட்டது. அப்போது அவருடன் சீமானும் தங்கியிருந்தார். 15 ஆண்டுகளுக்கு முன்பு சீமான் அந்த வீட்டைவிட்டு வெளியேறிவிட்டார். கிண்டி, பட்ரோடு, போரூர் என்று மூன்று வீடு மாறிவிட்டார். இந்த வழக்கு நடந்ததே சீமானுக்குத் தெரியாது. சீமான் வீட்டு சாவியை ஒப்படைத்தார் என அந்த பதிவில் குறிப்பிட்டிருப்பது பொய். அந்த வீட்டு உரிமையாளரைப் பார்த்தே 15 ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது. அப்படி இருக்கும்போது வீட்டு உரிமையாளரிடம் சாவி ஒப்படைத்தார் என்று பொய்யான தகவலை வெளியிட்டுள்ளனர். அப்போது, எப்படி ஒப்படைத்தார் என்பதற்கு ஏதும் ஆதாரம் தாருவார்களா?” என்று கூறினார். இந்த செய்தி விகடனில் 2018 அக்டோபர் 3ம் தேதி வெளியாகி இருந்தது.
vikatan.com | Archived Link |
அதேபோல், வழக்கறிஞர் இராவணன் என்பவர் வெளியிட்ட விளக்கத்தை நாம் தமிழர் கட்சியின் முக்கிய பொறுப்பாளராக இருந்த சே.பாக்யராசன் தன்னுடைய முகநூல் பக்கத்தில் அப்போதே வெளியிட்டு இருந்தார். அதில், வழக்குக்குத் தொடர்பு இல்லாத சீமான் பெயரை சேர்த்து தவறான தகவலை பரப்பியுள்ளனர் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது. இது தொடர்பான செய்தி பத்திரிகை டாட் காம் என்ற இணையதளத்தில் வெளியாகி இருந்தது.
patrikai.com | Archived Link |
வழக்கறிஞர் கோபு தன்னுடைய பதிவை ஏன் நீக்கினார் என்று தெரியவில்லை. சீமான் நீதிமன்றம் வந்து சாவியை ஒப்படைத்தார் என்றால் கட்டாயம் அது தொடர்பாக பத்திரிகைகளில் செய்தி வெளியாகி இருக்கும். அவரவர் கையில் செல்போன் கேமரா உள்ளது. யாராவது ஒருவராவது வீடியோ, புகைப்படத்தை எடுத்து வெளியிட்டிருப்பார்கள். ஆனால், அப்படி எந்த ஒரு செய்தியோ புகைப்படமோ வெளியாகவில்லை. ஆதாரமாக நீதிமன்ற உத்தரவு நகலை வழக்கறிஞர் கோபு வெளியிட்டு இருக்கலாம். ஆனால் அதையும் அவர் வெளியிடவில்லை. இதன் மூலம் 15 ஆண்டுகளுக்கு முன்பு சீமான் அந்த வீட்டில் குடியிருந்தார் என்பதால் அவருடைய பெயரை சேர்த்து வழக்கறிஞர் தன்னுடைய ஃபேஸ்புக் பதிவில் வெளியிட்டிருக்கலாம் என்று தெரிகிறது.
நம்முடைய ஆய்வில்,
15 ஆண்டுகளுக்கு முன்பு வரை குறிப்பிட்ட அந்த வீட்டில் சீமான் வசித்துள்ளார். அதன்பிறகு அவர் வேறு வீட்டுக்கு சென்றுவிட்டார்.
சீமான் வாடகை பாக்கி வைத்தது தொடர்பாக வழக்கறிஞர் ஒருவர் முகநூலில் பதிவிட்டு பின்னர் நீக்கியது உறுதி செய்யப்பட்டுள்ளது.
சீமானுக்கும் வீட்டு உரிமையாளருக்கும் நேரடி தொடர்பு இல்லை என்று குறிப்பிட்ட ஃபேஸ்புக் பதிவில் வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.
15 ஆண்டுகளுக்கு முன்பு அந்த வீட்டை விட்டு வெளியேறிவிட்டதாகவும், அதன் பிறகு மூன்று வீடு மாறிவிட்டதாகவும் சீமான் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
சீமானுக்கும் இந்த வழக்குக்கும் தொடர்பு உள்ளது என்று கூற வேறு எந்த ஒரு ஆதாரமும் இல்லை.
இந்த ஆதாரங்கள் அடிப்படையில், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கும் வீட்டு உரிமையாளர் ஒருவருக்கும் இன்னும் வாடகை பாக்கி பிரச்னை 19 ஆண்டுகளாக தொடர்கிறது என்று ஃபேஸ்புக்கில் பதிவிட்டுள்ளது தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில், மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு தவறானது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.

Title:19 ஆண்டுகள் வாடகை பாக்கி வைத்த சீமான்?- பரபரப்பை ஏற்படுத்திய தகவல்!
Fact Check By: Chendur PandianResult: False
