
தமிழகத்தில் அதிமுக-வுக்கு 69 சதவிகித மக்கள் வாக்களித்துள்ளார்கள் என்று தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பை புதிய தலைமுறை வெளியிட்டதாக ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:

அசல் பதிவைக் காண: Facebook I Archive
புதிய தலைமுறை நியூஸ் கார்டு மற்றும் தமிழ் திரைப்பட காட்சி ஒன்றை இணைத்து பதிவிடப்பட்டுள்ளது. அந்த நியூஸ் கார்டில், “தமிழகத்தின் 5 மணி நிலவரம் வாக்குப்பதிவு சதவிகிதம் 63.65%. கருத்துக்கணிப்பு விவரம் அதிமுக 69% திமுக 26% மற்றவை 5% எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த நியூஸ் கார்டு பதிவை தீமை முன்னேற்ற கழகம் என்ற ஃபேஸ்புக் பக்கம் 2021 ஏப்ரல் 6ம் தேதி பதிவிட்டுள்ளது. பலரும் இதை ஷேர் செய்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
தமிழக சட்டமன்ற தேர்தல் 2021 ஏப்ரல் 6ம் தேதி நடந்து முடிந்தது. தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பை வெளியிட தேர்தல் ஆணையம் தடைவிதித்துள்ளது. மேற்கு வங்கத்தில் கடைசிக் கட்ட தேர்தல் முடிந்த பிறகு ஏப்ரல் 29ம் தேதி மாலையில் தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பு வெளியிடலாம் என்று ஏற்கனவே தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
அசல் பதிவைக் காண: dinamalar.com I Archive
இந்த சூழலில், தமிழகத்தில் வாக்குப்பதிவு முடிவடையாத சூழலில் அதிமுக-வுக்கு 69 சதவிகித மக்கள் ஆதரவு அளித்துள்ளதாக கருத்துக்கணிப்பில் தெரியவந்துள்ளது என்று புதிய தலைமுறை செய்தி வெளியிட்டதாக, ஒரு நியூஸ் கார்டு வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது உண்மையா என்று ஆய்வு செய்தோம்.

முதலில், புதிய தலைமுறை ஃபேஸ்புக் பக்கத்தில் ஏப்ரல் 6ம் தேதி வெளியான நியூஸ் கார்டுகளை ஆய்வு செய்தோம். அப்போது, நாம் ஆய்வுக்கு எடுத்துக் கொண்டது போன்று எந்த ஒரு நியூஸ் கார்டும் அதில் இல்லை. மாலை 5 மணி நிலவரம் தொடர்பாக புதிய தலைமுறை வெளியிட்ட நியூஸ் கார்டு இருந்தது. அதில் “63.6% வாக்குப்பதிவு மாலை 5 மணி வரை” என்று குறிப்பிட்டிருந்தனர். வேறு எதையும் குறிப்பிடவில்லை.

அசல் பதிவைக் காண: Facebook I Archive
தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்பு வெளியிட தடை உள்ள சூழலில் அது போன்று ஏதும் வெளியிடப்பட்டதா என்று புதிய தலைமுறை டிஜிட்டல் பிரிவு நிர்வாகி சரவணனைத் தொடர்புகொண்டு கேட்டோம். அவரும் இது தவறான தகவல். போலியான நியூஸ் கார்டு என்று உறுதி செய்தார்.
தேர்தல் முடிந்த நிலையில் தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பு வெளியிடுவது வழக்கம். அதுவும் அனைத்துக் கட்ட தேர்தல் முடிந்த பிறகுதான் வெளியிட வேண்டும் என்று தேர்தல் ஆணையமே தடை பிறப்பித்துள்ளது. இந்த சூழலில் 69 சதவிகித ஆதரவை அதிமுக பெறும் என்று புதிய தலைமுறை தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பு வெளியிட்டதாகப் பரவும் நியூஸ் கார்டு போலியானது என்று உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்பில் அதிமுக 69 சதவிகித வாக்குகளை பெறும் என்று பரவும் புதிய தலைமுறை தொலைக்காட்சி நியூஸ் கார்டு போலியானது என்பதை ஃபேக்ட் கிரஸண்டோ உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

Title:அதிமுக வெற்றி பெறும் என்று தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பு வெளியிட்டதா புதிய தலைமுறை?
Fact Check By: Chendur PandianResult: False
