தொண்டருடன் ஃபோனில் வாக்குவாதம் செய்த சீமான்!

அரசியல் சமூக வலைதளம்

‘’தொண்டருடன் சீமான் வாக்குவாதம்’’, என்ற பெயரில், ஒரு ஆடியோ பதிவு, ஃபேஸ்புக்கில் வைரலாகி வருகிறது. இந்த பதிவு பதிவு, இதுவரையிலும், 22,000 ஷேர்களை கடந்துள்ளது. எனவே, இதன் உண்மைத்தன்மையை பரிசோதிக்க முடிவு செய்தோம்.

பதிவின் விவரம்:

ஆடியோ : தொண்டருடன் சீமான் வாக்குவாதம்#Seeman #NewsJ #NewsJTamil

Archive Link

உண்மை அறிவோம்:
தமிழ் சினிமாவில் இயக்குனராக இருந்து, பின்னர் நடிகராகவும் மாறிய சீமான், அரசியல் ஆர்வம் காரணமாக, தனி இயக்கம் காண்பதாக, கடந்த 2010, மே மாதம் 18ம் தேதி அறிவித்தார். இதன்படி, சி.பா.ஆதித்தனார் நடத்திவந்த நாம் தமிழர் இயக்கத்தை புதுப்பித்து, நாம் தமிழர் கட்சியாக, சீமான் பெயரிட்டார். தமிழ் தேசியம், விடுதலைப் புலிகள் ஆதரவு உள்ளிட்டவை, இந்த கட்சியின் பிரதான கொள்கைகளாகக் கூறப்படுகிறது. இதன்பேரில், தமிழக சட்டப்பேரவை, நாடாளுமன்ற தேர்தல்கள் தொடங்கி, பஞ்சாயத்து தேர்தல் வரை, நாம் தமிழர் கட்சி, போட்டியிட்டு வருகிறது. இதுபற்றிய விரிவான தகவலை, விக்கிப்பீடியா தமிழில் இங்கே கிளிக் செய்து படிக்கலாம்.

இந்நிலையில், சீமான், தனது கட்சித் தொண்டருடன் வாக்குவாதம் செய்வதாகக் கூறி, கடந்த மார்ச் 17, 18, 19 தேதி முதலாக, ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக ஊடகங்களில், ஒரு பதிவு வைரலாகி வருகிறது. இந்த ஆடியோ பதிவில், இருப்பது சீமான் குரலைப் போலவே உள்ளது. அதில், எடுத்த எடுப்பிலேயே, நாடாளுமன்ற தேர்தல் 2019ல் நாம் தமிழர் கட்சி சார்பாக, யார் யாருக்கு சீட் தருவது என்பது தொடர்பாக, தனது கட்சித் தொண்டரை கடுமையாக, அந்த குரல் விமர்சிக்கிறது. அத்துடன், ‘தலைவர் வேலையை பார்க்க எனக்குத் தெரியும், நீ போஸ்டர் ஒட்டும் வேலையை மட்டும் பாருடா,’ என்று காட்டமாக எச்சரிக்கையும் அந்த குரல் விடுக்கிறது. பின்னர், திடீரென ஃபோன் கட் செய்யப்படுகிறது.
இதில், இருப்பது சீமான் குரல்தான் என்பது, அவரது பேச்சை அடிக்கடி ஊடகங்களில் பார்த்தவர்களுக்கு எளிதாக புரியும். சந்தேகம் இருப்பின், புதிய தலைமுறையின் யூ டியூப் பக்கத்தில் வெளியிடப்பட்ட, சீமானின் சமீபத்திய வீடியோ ஒன்றை நீங்களே பாருங்கள். அதன் இணைப்பு கீழே தரப்பட்டுள்ளது.

இப்படி, சர்ச்சையாக பேசுவது சீமானுக்கு வழக்கம்தான். ஏற்கனவே, கடந்த 2015ம் ஆண்டு இதேபோல, தேனியை சேர்ந்த ஒருவர்,  சீமானை ஃபோனில் தொடர்பு கொண்டு பேசியபோது, ‘’ஃபோனை வைடா ங்கோத்தா,’’ என்று ஆபாசமாக அவர் திட்டியிருந்தார். இந்த சம்பவம் அப்போதே சமூக ஊடகங்களில் வைரலாக பரவியது. அத்துடன், இதனை சமூக ஊடகங்களில் வெளியிட்ட அந்த நபரை, சீமானின் ஆதரவாளர்கள் நேரில் சென்று தாக்கியதும், பெரும் பரபரப்பு செய்தியாகும். இதுபற்றி வெப்துனியா இணையதளம் வெளியிட்ட செய்தி ஆதாரத்தை இங்கே கிளிக் செய்து படிக்கலாம்.

Archive Link

இதுபற்றி சீமான் விளக்கம் எதுவும் அளித்துள்ளாரா என, கூகுளில் தேடியபோது, நாம் ஆய்வுக்கு எடுத்துக் கொண்ட #NewsJ வீடியோவும், சீமான் விளக்கம் தெரிவித்தது பற்றி விகடன் இணையதளம் வெளியிட்ட வீடியோவும் கிடைத்தன. ஆதார படம் கீழே இணைக்கப்பட்டுள்ளது.

இந்த ஆடியோ பற்றி மார்ச் 19ம் தேதியன்று சீமான் விளக்கம் தெரிவித்துள்ளார். இதுபற்றி விகடன் இணையதளம் வெளியிட்ட யூ டியூப் வீடியோ ஆதாரம் இங்கே தரப்பட்டுள்ளது.

Archive Link

மேற்கண்ட ஆதாரங்களின்படி, இது உண்மையான பதிவுதான், என்று உறுதி செய்யப்படுகிறது. சீமான் எதிர்ப்பு மற்றும் நாடாளுமன்ற தேர்தல் 2019 ஆகியவற்றின் காரணமாக, இந்த பதிவு வைரலாக, ஷேர் செய்யப்பட்டுள்ளது.

முடிவு:
உரிய ஆதாரங்களின்படி, இது ஒரு உண்மையான பதிவு என்று உறுதி செய்யப்படுகிறது. சம்பந்தப்பட்ட சீமானே இதை ஒப்புக் கொண்டு, விளக்கமும் அளித்துள்ளார். எனவே, இதில் எந்த சந்தேகமும் இல்லை.

Avatar

Title:தொண்டருடன் ஃபோனில் வாக்குவாதம் செய்த சீமான்!

Fact Check By: Parthiban S 

Result: True