தமிழச்சி தங்கபாண்டியனுடன் இருப்பவர் மேக்அப் ஊழியரா?

அரசியல்

தென் சென்னை நாடாளுமன்ற தி.மு.க வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியன் செல்லும் இடம் எல்லாம் தன்னுடன் ஒரு மேக்அப் மேனை அழைத்துச் செல்வதாகவும் கூறி ஒரு பதிவு, ஃபேஸ்புக்கில் வைரல் ஆகி வருகிறது. உண்மையில் அவர் மேக்அப் ஊழியரா என்று ஆய்வில் ஈடுபட்டோம். முடிவு உங்கள் பார்வைக்கு…

தகவலின் விவரம்:

வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியன் அவர்களுக்கு கூடவே மேக்கப் மேன் வைத்திருந்து அரை மணி நேரத்திற்கு ஒரு முறை அலங்காரம் செய்துகொண்டு வரும் இவரா தொகுதி மக்களின் பிரச்சனைகளை பாராளுமன்றத்தில் பேசப் போகிறார் பாராளுமன்றத்தில் அழகிப் போட்டி நடத்தி அதில் வெற்றி பெற போகிறாரா

Archive link

இந்த பதிவில், தமிழச்சி தங்கபாண்டியனுக்கு அருகில் ஒரு நபர் அமர்ந்திருக்கிறார். கையில் ரெக்கார்டர் போன்ற கருவியை வைத்துள்ளார். ஆனால், அவர் மேக்அப் மேன் என்று பதிவில் கூறப்பட்டுள்ளது. அரை மணி நேரத்துக்கு ஒரு முறை மேக்அப் செய்கிறார் தமிழச்சி. அதற்காக தன்னுடன் ஒரு மேக்அப் கலைஞரை உடன் அழைத்து செல்கிறார். நாடாளுமன்றத்தில் பேச போகிறாரா அல்லது அங்கு அழகி போட்டியில் பங்கேற்கப் போகிறாரா என்று பதிவிடப்பட்டுள்ளது. தேர்தல் நேரம் என்பதால், தி.மு.க – ஸ்டாலின் எதிர்ப்பாளர்கள் மற்றும் அ.தி.மு.க, பா.ஜ.க மற்றும் அதன் தோழமைக் கட்சிகளின் ஆதரவாளர்கள் இந்த பதிவை அதிக அளவில்  ஷேர் செய்துள்ளனர்.

உண்மை அறிவோம்

தென்சென்னை நாடாளுமன்றத் தொகுதிக்கு தி.மு.க சார்பில் கவிஞர் தமிழச்சி தங்கபாண்டியன் (எ) சுமதி போட்டியிடுகிறார். 60 வயதைக் கடந்த இவர், இளமையாகத் தோற்றம் அளிக்கக் கூடியவர். திமுக.,விலேயே இவரை அழகான வேட்பாளர் என்று வர்ணித்து வருகிறார்கள்.

கடந்த மார்ச் 20ம் தேதி, சைதாப்பேட்டை தொகுதிக்குட்பட்ட பகுதியில் தேர்தல் பிரசாரம் செய்த தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலினின் மகனும் சினிமா நடிகருமான உதய நிதி ஸ்டாலின், ‘அழகான வேட்பாளர்’ என்று தமிழச்சி தங்க பாண்டியனைப் பற்றி பொதுக் கூட்டத்தில் குறிப்பிட்டார். தான் அழகு என்று குறிப்பிட்டது அவர் தமிழின் மீது கொண்ட பற்றையும், கழகத்தின் மீது கொண்ட அன்பையும் தான் என்றும் தெரிவித்திருந்தார். ஆனாலும், அழகு என்று தமிழச்சியின் முக அழகை குறிப்பிட்டதாகவே சமூகவலைத்தளங்களில் அவதூறு பரப்பப்பட்டு வருகிறது. உதயநிதி பேச்சு தொடர்பான செய்தியைப் படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்.

இதைத் தொடர்ந்தே தமிழச்சியின் மேக்அப் தொடர்பான அவதூறு சமூக ஊடகங்களில் பரவ தொடங்கியுள்ளது. இந்த பதிவில் கூறியுள்ளது தொடர்பாக செய்தி ஏதேனும் வெளியாகி இருக்கிறதா என்று தேடிப்பார்த்தோம். அப்படி செய்தி ஏதும் இல்லை. பதிவில் இடம் பெற்ற படத்தை கூகுள் ரிவர்ஸ் இமேஜில் தேடினோம். அப்போதும் நமக்கு எந்த தகவலும் கிடைக்கவில்லை.

TAMIL 2.png
TAMIL 3.png

பதிவில் இடம்பெற்றுள்ள புகைப்படத்தைப் பார்க்கும்போது தமிழச்சி அருகில் இருக்கும் நபர் கையில் ரெக்கார்டர் வைத்திருப்பது தெளிவாகத் தெரிகிறது. அவர் நிச்சயம் மேக்அப் மேன் இல்லை. அவர் ஒரு பத்திரிகையாளர் என்பது தெரிந்தது. இருப்பினும், யார் அவர் என்பதைக் கண்டறிவதில் சிக்கல் இருந்தது.

TAMIL 4.png

இது தொடர்பாக தமிழச்சி தங்கபாண்டியனிடம் கேட்பதே சரியானதாக இருக்கும் என்று அவரைத் தொடர்புகொண்டோம். தேர்தல் பிரசார வேலையில் இருந்ததால் அவரால் பேச முடியவில்லை. இருப்பினும், தமிழச்சி தங்கபாண்டியன் தரப்பில் பேசியவர்கள் ‘இது வெறும் வதந்திதான். படத்தில் உள்ள நபர் கல்கி இதழில் பணியாற்றுகிறார்’ என்ற தகவலைத் தந்தனர். 

கல்கி பத்திரிகையில் பணியாற்றுகிறார் என்ற தகவலை வைத்து கல்கி அலுவலகத்தை, தொடர்புகொண்டு பேசினோம். நம்மிடம் பேசிய கல்கி இதழின் பொறுப்பாசிரியர் ரேவதி சூரியன், “வதந்தி பற்றி எங்களுக்கும் தெரிய வந்தது. அவர் கல்கி இதழில் தலைமை உதவி ஆசிரியராக உள்ள அமிர்தம் சூர்யாதான்” என்றார். இருப்பினும், பதிவை அனுப்பி வைக்கிறோம், பார்த்துவிட்டு உறுதி செய்தால் நன்றாக இருக்கும். சூர்யாவின் தொடர்பு எண் வேண்டும், என்று கேட்டோம். 

அதன்படி இந்த பதிவின் லிங்க் மற்றும் புகைப்படம் அனுப்பினோம். அதைப் பார்த்துவிட்டு மீண்டும் தொடர்புகொண்ட கல்கி பொறுப்பாசிரியர் ரேவதி, “இந்த வதந்தி குறித்துத்தான் நானும் குறிப்பிட்டேன். படத்தில் இருப்பவர் கல்கி நிறுவனத்தில் பணியாற்றும் அமிர்தம் சூர்யாதான்” என்றார்.

அமிர்தம்சூர்யா தமிழ் இலக்கியவாதியாக அறியப்படுபவர். அவரைப் பற்றி தமிழ் விக்கிப்பீடியா வெளியிட்டுள்ள தனி வரலாறு இங்கே இணைக்கப்பட்டுள்ளது. நவீன கவிஞராக, சிறுகதை எழுத்தாளராக, பத்திரிகையாளராக, விமர்சகராக, நல்ல பேச்சாளராக 25 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ் இலக்கிய உலகில் அறியப்படுபவராக இருக்கிறார் அமிர்தம் சூர்யா.

அமிர்தம் சூர்யாவைத் தொடர்புகொண்டு பேசினோம். “இந்த புகைப்படம் ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு எடுக்கப்பட்டது. சிவகாசியில் நடந்த கல்லூரி விழாவில் பங்கேற்றுவிட்டு வரும் வழியில் கல்கி இதழுக்காக ஒரு பேட்டி எடுக்கலாம் என்று முடிவு செய்தோம். அப்போது எடுக்கப்பட்ட படம்தான் இது. கையில் ஹேண்ட் மைக் – ரெக்கார்டர் இருப்பதை நீங்கள் காணலாம். 

இந்த வதந்தி தொடர்பாக தமிழச்சி தங்கபாண்டியன் அவர்களின் கணவரும் ஓய்வு பெற்ற ஐ.பி.எஸ் அதிகாரியுமான சந்திரசேகர் கூட என்னைத் தொடர்பு கொண்டு என்ன நடவடிக்கை எடுக்கலாம் என்று கேட்டார். பா.ஜ.க-வினர் திட்டமிட்டுச் செய்கின்றனர். இதற்கு எதிர்வினையாற்றினால், மறுப்பு தெரிவித்தால் அதையும் வைத்து ஏதாவது செய்வார்கள். அதனால் அமைதியாக இருந்துவிடலாம் என்று கூறினேன்.

தமிழச்சி தங்கபாண்டியன் அவர்களுடன் 20 ஆண்டுகளுக்கும் மேலாக, எனக்கு நட்பு உள்ளது. நிருபர் – வி.ஐ.பி என்ற அளவில் இல்லை. அதைவிட மேலாக, என் குடும்ப தோழி அவர். ஏற்றுமதி நிறுவனத்தில் பணியாற்றி வந்த என்னைப் பத்திரிகையாளனாக மாற்றியதே அவர்தான்” என்றார்.

(கல்கி இதழின் பொறுப்பாசிரியர் ரேவதி சூரியன் மற்றும் தலைமை உதவி ஆசிரியர் அமிர்தம் சூர்யாவுடனான ஃபோன் உரையாடல்கள், அவர்களின் முழு அனுமதியுடன் பதிவு செய்யப்பட்டுள்ளன. ஏதேனும் சட்டசிக்கல் ஏற்பட்டால் இந்த ஆதாரங்கள், நம் விசாரணைக்கு சாட்சியாக பயன்படுத்தப்படும்.)

amirtham surya 3.JPG
(புகைப்படம்- அமிர்தம் சூர்யா)

மேலும், 2013ம் ஆண்டு பிப்ரவரி மாதம் கல்கி இதழில் வெளியான அந்த பேட்டி மற்றும் படத்துக்கான லிங்கையும் கொடுத்தார் அமிர்தம் சூர்யா. அதைக் காண இங்கே கிளிக் செய்யுங்கள்.

இந்த பதிவை வெளியிட்ட பொன்னி ரவியின் பின்னணியை ஆய்வு செய்தோம். அவர் தன்னைப் பற்றிய விவரம் எதையும் ஃபேஸ்புக்கில் பதிவிடவில்லை. ஆனால், அவருடைய பதிவுகள் எல்லாம் பா.ஜ.க, அ.தி.மு.க ஆதரவு ரகத்திலேயே இருந்தன. பிரதமர் மோடியின் படத்தை கவர் பிக்சராக வைத்துள்ளார். இதன் மூலம் இவர் பா.ஜ.க ஆதரவாளராக இருப்பார் என்பதைப் புரிந்துகொள்ள முடிகிறது. தொடர்ந்து அவதூறான தகவல்களை பதிவிட்டு வருவதையும் காண முடிந்தது.

TAMIL 5.png

தமிழச்சி தங்கபாண்டியனை விமர்சித்து, இவர் மற்றொரு பதிவு ஒன்றையும் பகிர்ந்துள்ளார்.

Archive link

இது போன்று பல பதிவுகளை அவர் வெளியிட்டுக்கொண்டே இருக்கிறார். இதன் மூலம், நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜ.க-வுக்கு ஆதரவாக அவர் செயல்பட்டு வருவது உறுதியாகிறது.

நாம் ஆய்வு மேற்கொண்ட வகையில் தெரியவந்த ஆதாரங்களின் விவரம்,

1) தமிழச்சி தங்கபாண்டியன் தரப்பில் மறுப்பு.
2) புகைப்படத்தில் இருப்பவர் பத்திரிகையாளர் என்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது.
3) அமிர்தம் சூர்யாவின் விளக்கம்.
4) புகைப்படம் மற்றும் அப்போது எடுக்கப்பட்ட பேட்டியின் முழு விவரம்.
5) பதிவை வெளியிட்டவரின் பின்னணி.

இவற்றின் அடிப்படையில் இந்த பதிவு திட்டமிட்டு பரப்பப்பட்ட வதந்தி, பொய் பிரசாரம் என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது.

முடிவு

உரிய ஆதாரங்களின்படி, படத்தில் இருப்பவர் தமிழச்சி தங்கபாண்டியனின் மேக்அப் மேன் இல்லை. இலக்கியவாதியும் பத்திரிகையாளருமான அமிர்தம் சூர்யாதான் அது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. தனிப்பட்ட அரசியல் காரணங்களுக்காக, இத்தகைய தவறாக சித்தரிக்கப்பட்ட பதிவு வெளியிடப்பட்டுள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான வீடியோ, செய்தி, புகைப்படங்கள் எதையும் உறுதிப்படுத்தாமல், மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். அப்படி, நீங்கள் பகிர்ந்த விஷயம் பற்றி யாரேனும் புகார் கொடுத்தால், நீங்கள் சட்டப்படியான நடவடிக்கைக்கு ஆளாக நேரிடும் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.

Avatar

Title:தமிழச்சி தங்கபாண்டியனுடன் இருப்பவர் மேக்அப் ஊழியரா?

Fact Check By: Praveen Kumar 

Result: False

1 thought on “தமிழச்சி தங்கபாண்டியனுடன் இருப்பவர் மேக்அப் ஊழியரா?

Comments are closed.