
‘’அத்தி வரதரை தரிசித்த ஆன்மீக தமிழன் சீமான்,’’ என்ற தலைப்பில் வைரலாகி வரும் ஒரு ஃபேஸ்புக் செய்தியை காண நேரிட்டது. இதன்பேரில் உண்மை கண்டறியும் சோதனை செய்ய தீர்மானித்தோம்.
தகவலின் விவரம்:

சூர்ய புத்திரன். என்.பிரபாகரன். விருதுநகர் என்பவர் ஜூலை 16, 2019 அன்று இந்த பதிவை வெளியிட்டுள்ளார். இதில், குழந்தையை சுமந்தபடி நிற்கும் ஒரு பெண்ணின் அருகே சீமான் நிற்கும் புகைப்படத்தை பகிர்ந்து, அதன் மேலே, ‘’ பெண்டாட்டி புள்ள குடும்பம்…. ஆரோக்கியம் ஐஸ்வர்யம் ன்னு நினைப்பு வந்துட்டா…. அத்தி வரதரை தரிசனம் செய்து கோவிந்தா சொல்லு #தமிழா. இது மட்டும் வட இந்திய சாமி இல்லைடா. காஞ்சிபுர சாமியடா… புரியுதா #தமிழா,’’ என்று எழுதியுள்ளார். இதனை பலரும் உண்மை என நினைத்து வைரலாக ஷேர் செய்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
குறிப்பிட்ட ஃபேஸ்புக் பதிவில் கூறியுள்ளதுபோல, சீமான் பற்றி வேறு யாரேனும் பதிவு வெளியிட்டுள்ளனரா என ஃபேஸ்புக்கில் தேடிப் பார்த்தோம். அப்போது நிறைய பேர் இந்த புகைப்படத்தை பதிவிட்டு, அத்தி வரதரை தரிசித்த சீமான் என்று கூறியிருந்ததை காண நேரிட்டது.

ஆனால், இவர்கள் கூறியுள்ளது எதுவும் உண்மை இல்லை. குறிப்பிட்ட புகைப்படம் வைரலானதை தொடர்ந்து, சீமான் ஆதரவாளர்கள் சிலர் இந்த விசயத்தின் பின்னணி பற்றி ஃபேஸ்புக்கில் தகவல் ஆதாரத்துடன் பதிவிட்டுள்ளனர்.
இதேபோல, மற்றொரு நாம் தமிழர் கட்சி ஆதரவாளர் பகிர்ந்திருந்த ஃபேஸ்புக் பதிவை ஆதாரத்திற்காக இங்கே இணைத்துள்ளோம்.
இதன்படி, மேற்கண்ட புகைப்படத்தில் இருப்பவர்கள் சீமான், அவரது மனைவி கயல்விழி மற்றும் மகன் மாவீர பிரபாகரன் ஆகியோர் ஆவர். இந்த புகைப்படம் கடந்த ஜூலை 15, 2019 அன்று விருதுநகரில் உள்ள ராமுதேவன் பட்டியில் எடுக்கப்பட்டதாகும். அன்றைய தினம், சீமானின் மகன் மாவீர பிரபாகரனுக்கு முதல் சோறு ஊட்டும் நிகழ்வு நடைபெற்றுள்ளது. இதன்போது, சீமான் தனது மாமனாரும், தமிழக சட்டமன்ற முன்னாள் சபாநாயகர் காளிமுத்துவின் நினைவிடம் சென்று மரியாதை செலுத்தினார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படத்தை வைத்துத்தான், அவர் அத்திவரதரை தரிசிக்க சென்றதாக, வதந்தி பரப்பியுள்ளனர்.
சம்பவத்தன்று சீமான் தொடர்பாக, தந்தி டிவி வெளியிட்ட செய்தியின் வீடியோ ஆதாரம் கீழே இணைக்கப்பட்டுள்ளது.
இதுவரை கிடைத்த ஆதாரங்களின் அடிப்படையில் மேற்கண்ட ஃபேஸ்புக் செய்தி தவறான ஒன்று என உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
உரிய ஆதாரங்களின்படி நாம் ஆய்வு செய்த ஃபேஸ்புக் செய்தி தவறானது என நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, நமது வாசகர்கள் இத்தகைய உறுதிப்படுத்தப்படாத தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை மற்றவர்களுக்கு பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.

Title:அத்தி வரதரை தரிசித்த சீமான்: ஃபேஸ்புக் செய்தியின் உண்மை என்ன?
Fact Check By: Pankaj IyerResult: False
