பாம்புக் கடியில் இருந்து காப்பாற்ற உதவும் சித்த வைத்தியக் குறிப்பு நம்பகமானதா?

சமூக ஊடகம் மருத்துவம் I Medical

‘’பாம்புக் கடியில் இருந்து காப்பாற்ற உதவும் சித்த வைத்தியக் குறிப்பு,’’ என்ற தலைப்பில் பகிரப்பட்டு வரும் ஒரு ஃபேஸ்புக் பதிவை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.

தகவலின் விவரம்:

Facebook Claim LinkArchived Link 

இந்த பதிவில் பாம்பு மற்றும் செடி ஒன்றின் புகைப்படத்தை இணைத்து, அதன் மேலே, ‘’ஒருவருக்கு பாம்பு கடித்து அவர் இறந்துவிட்டதாக, மருத்துவர் சொன்னால், உடனடியாக ஒரு காதில் எண்ணெய் ஊற்றி மறு காது வழியாக வரவைக்க வேண்டும், கரு ஊமத்த இலையை அரைத்து மூக்கில் சில சொட்டுகள் விட்டால் அவருக்கு உயிர் வந்துவிடும்,’’ என்று எழுதியுள்ளனர்.

இதனை பலரும் உண்மை என நம்பி வைரலாக ஷேர் செய்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:
மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவில் கூறியுள்ள தகவல் உண்மையா என்ற சந்தேகத்தில் உரிய மருத்துவர்களிடம் பேசி பார்க்க தீர்மானித்தோம். இதன்படி, முதலில் மூலிகை ஆராய்ச்சியாளர் மரிய பெல்சின் அவர்களை தொடர்புகொண்டு பேசினோம்.

அவர், ‘’இது தவறான தகவல், இப்படி தவறான தகவலை பரப்புவதன் மூலம் இயற்கை, சித்த மருத்துவம் மீது மக்களுக்கு நம்பிக்கையின்மையை ஏற்படுத்த முயற்சிக்கிறார்கள். உரிய வழிகாட்டுதல் இல்லாமல் பகிரப்படும் இத்தகைய சித்த மருத்துவக் குறிப்புகளை நம்பிச் செயல்படுவது ஆபத்தையே விளைவிக்கும்,’’ என்று குறிப்பிட்டார். 

இதற்கடுத்தப்படியாக, சென்னை அரும்பாக்கத்தில் உள்ள இந்திய மருத்துவத்திற்கான அறிஞர் அண்ணா அரசு மருத்துவமனையில் பணிபுரியும் சித்த மருத்துவர் மல்லிகா அவர்களை தொடர்புகொண்டு விளக்கம் கேட்டோம்.

சம்பந்தப்பட்ட ஃபேஸ்புக் பதிவை படித்து பார்த்த அவர், ‘’இதுபோல வாட்ஸ்ஆப் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் பரப்பப்படும் வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம். பாம்பு கடித்தால் அதன் விஷம் நமது ரத்தத்தில் கலந்துவிடும். விஷம் மேலும் பரவாமல் இருக்க, பாம்பு கடித்த இடத்தை கத்தியால் லேசாக கீறிவிட்டு ரத்தத்தை வெளியே எடுப்பார்கள் அல்லது அந்த இடத்தைச் சுற்றி துணி, கயிறால் இறுக்கிக் கட்டுவார்கள். இவைதான் பாம்பு கடித்தால் பொதுவாக செய்யக்கூடிய, அங்கீகரிக்கப்பட்ட முதலுதவி முறைகள். இப்படி செய்த பிறகும் மருத்துவரை சந்தித்து விஷமுறிவு மருந்தை எடுத்துக் கொண்டால் மட்டுமே பாம்பு விஷத்தை நமது உடலில் இருந்து அகற்ற முடியும். இல்லை எனில் மூளை, இதயத்திற்கு விஷம் பரவி உயிரிழப்பு ஏற்படுவதை தவிர்க்க முடியாது. இறந்த பிறகு கரு ஊமத்த இலையை அரைத்து மூக்கில் ஊற்றுவது எல்லாம் வெட்டித்தனமான செயல். மூக்கில் அந்த சாறு விடுவதாதல், ரத்தத்தில் உள்ள விஷம் எப்படி நீங்கும்?

லாஜிக் இல்லாமல் பகிரப்படும் இத்தகைய வதந்திகளை நம்பினால் உயிர்தான் போகும். பாம்பு கடித்தால் நேரத்தை வீணாக்காமல் உடனடியாக மருத்துவரிடம் சென்று விஷமுறிவு மருந்து எடுத்துக் கொள்வதே நலம். சித்த மருத்துவம், ஆங்கில மருத்துவம் அனைத்திலுமே பாம்புக்கடிக்கு விஷ முறிவு மருந்துதான் தருவார்கள். இதுபோல இலை அரைத்து மூக்கில் விட்டு நேரத்தை வீணடிக்க மாட்டார்கள்.

மேலும், பாம்பு கடித்து இறந்த பிறகு இப்படி கருஊமத்த சாறு கொடுத்து யாரையும் காப்பாற்றியதாக நான் இதுவரை கேள்விப்பட்டதில்லை. அப்படி நடந்திருந்தால், நாங்கள் சித்த மருத்துவம் படித்தபோது எங்களுக்கு பேராசிரியர்கள் இந்த சிகிச்சை முறையை சொல்லிக் கொடுத்திருப்பார்கள்,’’ எனக் குறிப்பிட்டார்.

இதுவரை கிடைத்த ஆதாரங்களின் அடிப்படையில் மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவில் நம்பகத்தன்மை இல்லை என உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:
உரிய ஆதாரங்களின்படி நாம் ஆய்வு செய்த ஃபேஸ்புக் பதிவில் தவறான தகவல் உள்ளதாக நிரூபித்துள்ளோம். நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை உறுதிப்படுத்தாமல் மற்றவர்களுக்கு பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். 

Avatar

Title:பாம்புக் கடியில் இருந்து காப்பாற்ற உதவும் சித்த வைத்தியக் குறிப்பு நம்பகமானதா?

Fact Check By: Pankaj Iyer 

Result: False

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

1 thought on “பாம்புக் கடியில் இருந்து காப்பாற்ற உதவும் சித்த வைத்தியக் குறிப்பு நம்பகமானதா?

Comments are closed.