
“மாணவர் சேர்க்கை நடைபெறாத 1248 பள்ளிகள் மூடப்பட்டு அங்கு நூலகம் தொடங்கப்படும்… அதை ஆயாக்களே நிர்வகிப்பார்கள்” என்று பள்ளி கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறியதாக ஒரு நியூஸ் கார்டு வைரல் ஆகி வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:

தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி அளித்தது போன்று ஜெயா பிளஸ் தொலைக்காட்சியின் நியூஸ் கார்டு ஒன்று பகிரப்பட்டுள்ளது. அதில், “தமிழகத்தில் 1248 அரசுப் பள்ளிகள் மூடப்பட்டு நூலகங்களாக மாற்றப்படும். நூலகங்களில் பணியாற்ற ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்க வேண்டியதில்லை, அங்குள்ள ஆயாக்களே பணியாற்றுவார்கள் – அமைச்சர் செங்கோட்டையன்” என்று இருந்தது.
இந்த நியூஸ் கார்டை LR Jagadheesan என்பவர் ஜூலை 17, 2019 அன்று, தமிழகம் இதுவரை காணாத மிக மோசமான கல்வி அமைச்சர் என்று குறிப்பிட்டு பகிர்ந்துள்ளார். இதை பலரும் பகிர்ந்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
ஜெயா பிளஸ் தொலைக்காட்சியின் நியூஸ் கார்டு போல உள்ளதால் அதை உறுதி செய்ய ஜெயா பிளஸ் ஃபேஸ்புக் பக்கத்தில் தேடினோம். நமக்கு அந்த நியூஸ் கார்டு கிடைத்தது. ஆனால், அதை பதிவு செய்வதற்கு முன்பாக அது நீக்கப்பட்டுவிட்டது.

இதனால், ஜெயா பிளஸ் யூடியூப் சேனலில் இது தொடர்பாக வீடியோ உள்ளதா என்று ஆய்வு செய்தோம். அப்போது “நூலகத்திற்கு ஆசிரியர்கள் தேவையில்லை, ஆயாக்களே போதும்” என்று ஒரு வீடியோ 2019 ஜூலை 17ம் தேதி வெளியிடப்பட்டது நமக்கு கிடைத்தது.

இதன் மூலம் ஜெயா பிளஸ் வெளியிட்ட நியூஸ் கார்டை LR Jagadheesan பகிர்ந்திருப்பது உறுதியானது. இருப்பினும் உண்மையில் அமைச்சர் செங்கோட்டையன் அவ்வாறு கூறினாரா என்று ஆய்வு செய்தோம்.
நம்முடைய தேடலில் நியூஸ்7 தமிழ் வெளியிட்ட ஒரு நியூஸ் கார்டு கிடைத்தது. அதில், “பள்ளிகளை மூடும் நோக்கம் அரசிற்கு இல்லை: அமைச்சர் செங்கோட்டையன்
பள்ளிகளை மூடும் நோக்கம் அரசிற்கு இல்லை. மூடப்போவதும் இல்லை. மாணவர்களே இல்லாத பள்ளிகள் நூலகமாக செயல்படும். அங்கே ஒரு ஆசிரியர் இருப்பார் – செங்கோட்டையன்” என்று இருந்தது. இதுவும் ஜூலை 17ம் தேதிதான் வெளியாகி இருந்தது.
தொடர்ந்து தேடியபோது, தினமணி வெளியிட்ட செய்தி நமக்கு கிடைத்தது. அதில், “தற்போது தமிழகத்தில் 1248 அரசு பள்ளிகளில் ஒரு மாணவர் கூட படிப்பது இல்லை. ஆனால் அதற்காக அந்தப் பள்ளிகளை மூடும் திட்டம் இல்லை. அவற்றை நூலகங்களாக மாற்றும் முயற்சியில் இருக்கிறோம். அங்குள்ள ஆசிரியர்களே நூலகர்களாக செயல்படுவார்கள். அதற்கு ஏற்றவாறு அவர்களுக்கு பயிற்சி அளிக்கப்படும்” என்று இருந்தது. அந்த செய்தியைப் படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்.
தினகரன், தினமலர் என எல்லா செய்தி நாளிதழ்களிலும் பள்ளிகள் மூடப்படாது என்ற தகவலைத் தெரிவித்திருந்தனர்.
அமைச்சர் பேசிய வீடியோவை ஆய்வு செய்தோம். அதில், தந்தி டிவி, பாலிமர், நியூஸ்7 எனப் பல தொலைக்காட்சிகளும் அமைச்சர் பேட்டியை வெளியிட்டுள்ளன. ஆனால், சர்ச்சைக்குரிய பகுதி மட்டும் இல்லை. இதனால், ஜெயா பிளஸ் வீடியோவை ஆய்வு செய்தோம்.
அமைச்சர் பேசியது அதிலிருந்தது. அதில் அவர், “1248 அரசு பள்ளிகளில் ஒன்பதுக்கு கீழே மாணவர்கள் இருக்கிறார்கள். ஒரு ஆசிரியருக்கு குறைந்தபட்ச சம்பளம் ரூ.50,௦௦௦ வழங்கப்படுகிறது. ஆண்டுக்கு கணக்குப்போட்டால் எவ்வளவு வரும்… ஒருவருமே இல்லாத பள்ளியில் இரண்டு ஆசிரியர்களை நியமித்து என்ன செய்வது என்பதை நீங்கள் மக்களுக்கு சொல்ல வேண்டும். அந்த பள்ளிகளை நூலகமாக தொடர்ந்து திறந்து வைப்போம்” என்கிறார். அவர் பேசி முடிப்பதற்கு முன்னதாக நூலகத்தை எப்போது திறப்பீர்கள் என்று ஒரு நிருபர் கேட்கிறார்.
அதற்கு அமைச்சர், “எங்களிடம் ஒரு லட்சம் புத்தகம் உள்ளன. எந்த பள்ளியில் மாணவர் எண்ணிக்கை ஸீரோவாக உள்ளதோ முதல்கட்டமாக அந்த பள்ளிகளுக்கு 100 புத்தகங்கள் அனுப்பிவைக்கப்படும். இந்த நூலகங்களில் பெரியவர்களும் படிக்கலாம், மாணவர்களும் படிக்கலாம். படித்துவிட்டுச் செல்லும்போது பள்ளியை பத்திரமாக பார்த்துக்கொள்வது மட்டுமல்ல… தங்கள் குழந்தைகளை அந்த பள்ளியில் சேர்க்க ஆர்வம் உருவாக்கப்படும்” என்கிறார்.
அப்போது நிருபர் ஒருவர் ஆசிரியர்கள் எப்படி நூலகர்களாக பணியாற்றுவார்கள் என்று கேட்கிறார். அதற்கு அமைச்சர், “நூலகர்களாக ஆசிரியர் பணியாற்றுவது அல்ல… அங்கு ஆயாக்கள் இருக்கிறார்கள். அவர்கள் புத்தகத்தை எடுத்து அடுக்கிவைப்பார்கள். இதற்கு ஆசிரியர்களுக்கு தனியாக பயிற்சியா தேவைப்படும்” என்கிறார்…. இத்துடன் அந்த வீடியோவும் முடிகிறது.
அமைச்சர் தன்னுடைய பேட்டியில் எந்த இடத்திலும் பள்ளிகள் மூடப்படும் என்று கூறவில்லை. அமைச்சர் பதில் சொல்லி முடிப்பதற்கு முன்னதாக கேள்வி கேட்கப்படுகிறது. அதேபோல், நூலகத்தில் ஆயாக்களே பணியாற்றுவார்கள் என்றும் கூறவில்லை.
மேலும் இது தொடர்பாக தேடியபோது, இந்த பிரச்னை குறித்து தி.மு.க சட்டமன்ற உறுப்பினர் தங்கம் தென்னரசு சட்டமன்றத்தில் கேள்வி ஒன்றை எழுப்பியது தெரிந்தது. அதற்கு பதில் அளித்த அமைச்சர் செங்கோட்டையன், “1248 பள்ளிகளை தமிழக அரசு மூடப்போவதாக வெளியான தகவல் தவறானது. தமிழகத்தில் 45 பள்ளிகளில் மட்டுமே ஒரு மாணவர் கூட சேராமல் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இந்த பள்ளிகளில் மீண்டும் 6 மாதங்களுக்குப் பின்னர் மாணவர் சேர்க்கைப் பணிகள் நடைபெறும். மாணவர் சேர்க்கைக்குப் பிறகு அந்த பள்ளிகள் வழக்கம்போல செயல்படும். அதுவரை தற்காலிகமாக நூலகங்கள் அமைக்க அரசு திட்டமிட்டுள்ளது” என்று கூறிய தகவல் நமக்கு கிடைத்தது.
இந்த ஆதாரங்கள் அடிப்படையில், 1248 அரசு பள்ளிகள் மூடப்படும் என்று அமைச்சர் செங்கோட்டையன் கூறியதாக பகிரப்படும் நியூஸ் கார்டு தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில், மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு தவறானது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.

Title:தமிழகத்தில் 1248 அரசு பள்ளிகள் மூடப்படும்: செங்கோட்டையன் கூறியதாக பரவும் தகவல் உண்மையா?
Fact Check By: Chendur PandianResult: False
