
‘’சிதம்பரத்தில் திமுக வன்னியர்களின் ஓட்டு எனக்குத் தேவையில்லை என்று திருமாவளவன் பேசியதால் பரபரப்பு,’’ எனும் தலைப்பில் ஒரு ஃபேஸ்புக் பதிவை காண நேரிட்டது. இதன் உண்மைத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம். அதன் விவரம் இங்கே தொகுத்து தரப்பட்டுள்ளது.
தகவலின் விவரம்:
வன்னியர்கள் ஓட்டு எனக்கு தேவையில்லை திருமாவளவன் திட்டவட்டம்.பிரச்சாரம் செய்ய ஊருக்குள் அனுமதிக்காததால் திருமாவளவன் ஆத்திரம்.
ஏப்ரல் 11ம் தேதியன்று, இந்த பதிவை கோபிநாத் தமிழன் என்பவர் பகிர்ந்துள்ளார். இதில், திருமாவளவனின் புகைப்படத்தை பகிர்ந்து,’’வன்னியர்கள் ஜாதி வெறியர்கள்; சிதம்பரத்தில் திமுக வன்னியர்களின் ஓட்டு எனக்குத் தேவையில்லை என்று திருமாவளவன் பேசியதால் பரபரப்பு,’’ என்று கூறி, அதற்கு மேலே, ‘’பிரச்சாரம் செய்ய ஊருக்குள் அனுமதிக்காததால் திருமாவளவன் ஆத்திரம்,’’ எனவும் குறிப்பிட்டுள்ளனர். இது அரசியல் ரீதியாக, முக்கியத்துவம் வாய்ந்த செய்தியாக உள்ளதால், பலரும் உண்மை என நம்பி அதிகளவில் ஷேர் செய்துள்ளனர்.
உண்மை அறிவோம்:
சிதம்பரம் மக்களவைத் தொகுதியில், திமுக கூட்டணி சார்பாக, திருமாவளவன் போட்டியிடுகிறார். எனினும், அவருக்கும், அவரது விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகளுக்கும் திமுக கூட்டணியில் முக்கியத்துவம் தரப்படுவதில்லை என்றும், இரு தரப்பினருக்கும் இடையே கருத்து முரண்பாடு உள்ளது என்றும் பரபரப்பாக வதந்திகள் பரவி வந்தன.
இந்நிலையில்தான், சிதம்பரம் தொகுதியில் பிரசாரம் செய்ய சென்ற திருமாவளவனை வன்னியர்கள் ஊருக்குள் அனுமதிக்காததால், அவர் ஆத்திரமடைந்தார் என்றும், தனக்கு திமுக வன்னியர்களின் ஓட்டு தேவையில்லை என்றும் அவர் பேசியதாக, மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு பகிரப்பட்டுள்ளது.
எனவே, குறிப்பிட்ட ஃபேஸ்புக் பதிவு உண்மையா என்ற நோக்கில், கூகுள் சென்று ஆதாரம் எதுவும் உள்ளதா என தேடிப் பார்த்தோம். அப்போது, இதுதொடர்பாக, திருமாவளவன் வெளியிட்ட மறுப்பு வீடியோ ஆதாரம் கிடைத்தது. சரியாக, ஏப்ரல் 12ம் தேதி இந்த பதிவை அவர் வெளியிட்டிருக்கிறார்.

தன் மீது தொடர்ச்சியாக இவ்வாறு வதந்தி பரப்பப்படுவதாகக் கூறி, அதுபற்றி விரிவாக விளக்கம் அளித்து திருமாவளவன் பேசும் வீடியோ காட்சியை, அவரது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டிருந்தனர். அந்த வீடியோவில், ‘’நான் மட்டுமல்ல; எந்த அரசியல் கட்சியின் தலைவரும் ஒரு குறிப்பிட்ட சமூகத்தினரின் ஓட்டு எனக்குத் தேவையில்லை என்று கூற முடியாது. அரசியல் கட்சியினருக்கு அனைவரின் ஓட்டுகளும் முக்கியம். வேண்டுமென்றே என் மீது சிலர் வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் வதந்தி பரப்பி வருகிறார்கள். வன்னியர்களின் ஓட்டு தேவையில்லை என்று எங்கேயும் நான் சொன்னதில்லை,’’ என்று திருமாவளவன் விரிவாகப் பேசியுள்ளார். வீடியோ ஆதாரம் கீழே தரப்பட்டுள்ளது.
இந்த வீடியோவின் 12வது விநாடியில் இருந்து, தன் மீது பரப்பப்படும் வதந்தி பற்றி திருமாவளவன் பேசும் காட்சியை காணலாம்.

வன்னியர் சமூகத்தினர் வாக்கு தேவையில்லை என்று பேசியதாகக் கூறி தன்மீது பரப்பப்படும் வதந்தியை திருமாவளவனே மறுத்துள்ளார். இதுபற்றி அவரே விளக்கம் அளித்து, வீடியோவும் வெளியிட்டிருக்கிறார். மேலும், இவை எல்லாம், மக்களவை தேர்தல் பிரசாரத்தின்போது, நடைபெற்ற சம்பவம் என தெரியவருகிறது. இந்நிலையில், திருமாவளவன், திமுக வன்னியர் வாக்குகள் தேவையில்லை என்று கூறியதாக, பதிவிட்டுள்ள மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவும் தவறான ஒன்றுதான் என உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
உரிய ஆதாரங்களின்படி, நாம் ஆய்வுக்கு எடுத்துக் கொண்ட ஃபேஸ்புக் பதிவு தவறான ஒன்று என நிரூபிக்கப்பட்டுள்ளது. நமது வாசகர்கள் யாரும் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோ போன்றவற்றை சமூக ஊடகங்களில் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.

Title:சிதம்பரத்தில் திமுக வன்னியர்கள் எனக்கு ஓட்டுப் போட வேண்டாம் என்று திருமாவளவன் சொன்னாரா?
Fact Check By: Parthiban SResult: False
