FACT CHECK: இஸ்லாமியரும் கிறிஸ்தவரும் தமிழர்கள் இல்லை என்று சீமான் கூறியதாகப் பரவும் வதந்தி!

அரசியல் சமூக ஊடகம் தமிழ்நாடு

இஸ்லாமியனும், கிறிஸ்தவனும் தமிழனே இல்லை என்று சீமான் கூறியதாக ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

அசல் பதிவைக் காண: Facebook I Archive

இணையதள ஊடகம் ஒன்று வெளியிட்ட நியூஸ் கார்டு பகிரப்பட்டுள்ளது. அதில், “முஸ்லிம், கிறிஸ்தவர்கள் மதம் மாறுங்கள். இஸ்லாமியனும், கிறிஸ்தவனும் தமிழனே இல்லையே… ஒன்று அரேபிய மதம், இன்னொன்று ஐரோப்பிய மதம். தமிழனின் சமயம் சைவம், மாலியம், சிவ சமயம். திரும்பி வா! – சீமான்” என்று இருந்தது. இந்த பதிவை குமரி செல்வராஜ் என்ற நபர் ஃபேஸ்புக்கில் வெளியிட்டிருந்தார். இவரைப் போல ஏராளமானவர்கள் இந்த நியூஸ் கார்டை பகிர்ந்து ஷேர் செய்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

தமிழர் தாய் சமயங்களுக்குத் திரும்ப வேண்டும் என்று சமீபத்தில் சீமான் கூறியதாக சர்ச்சை எழுந்தது. தமிழன் இந்துவே இல்லை. தங்கள் சமயத்தின் மீது இந்து சாயம் பூசப்பட்டுள்ளது. கிறிஸ்தவமும் இஸ்லாமும் தமிழனின் சமயமே இல்லையே என்று கூறினார் என்று செய்தி மற்றும் சமூக ஊடகங்களில் பரபரப்பாக விவாதிக்கப்பட்டது. சைவம், மாலியம் (வைணவம்) ஆகியவைதான் தமிழனின் தாய் மதம். அந்த மதத்துக்கு திரும்ப வேண்டும் என்று சீமான் கூறியிருந்தார். அதன் பிறகு அனைவரையும் தாய் மதம் திரும்புங்கள் என்று நான் கூறவில்லை என்று விளக்கமும் அளித்திருந்தார். 

நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட நியூஸ் கார்டில் “இஸ்லாமியனும், கிறிஸ்தவனும் தமிழனே இல்லை” என்று இருந்தது. சீமான் அப்படிப் பேசினாரா என்று மட்டும் ஆய்வு செய்தோம். இது தொடர்பாக வெளியான செய்திகளைத் தேடி எடுத்தோம். விகடன் இணையதளத்தில் சீமான் பேச்சு தொடர்பான செய்தி வெளியாகி இருந்தது. 

அசல் பதிவைக் காண: vikatan.com I Archive

அதில், “சமீபத்தில் சென்னையில் நடைபெற்ற பனைச்சந்தைத் திருவிழாவில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்துகொண்டார். அப்போது செய்தியாளர்களைச் சந்தித்த சீமான், “நாங்கள் தமிழர்கள், எங்களின் வழிபாட்டு முறை வேறு, எங்களின் சமயம் வேறு, எங்களின் தெய்வங்கள் வேறு. இதில் நான் உறுதியாக இருக்கிறேன். சட்டப்படி இன்று இந்து என்கிறீர்கள். முன்பு சிவசமயம் என்றுதான் எழுதியிருக்கிறது. சிவனை வழிபடுவதால் எங்கள் சமயம் சிவசமயம். முருகனை வழிபடுவதால் சைவம். கண்ணனை வழிபடுவதால் வைணவம். வைணவம் என்பதைத் தமிழில் `மாலியம்’ என்கிறோம்.

வில்லியம் ஜோன்ஸ் போட்ட கையெழுத்தால் சீக்கியன், பார்சி, பௌத்தன், சைவன் என்று எல்லோரும் இந்துக்களாகக் கருதப்படுகிறோம். இதை நாங்கள் ஏற்கவில்லை. எதிர்க்கிறோம். சரித்திரப்படி நாங்கள் இந்துக்களே கிடையாது. ஆங்கிலேயர்கள் போட்ட சட்டப்படி நாங்கள் இந்து. தமிழர்கள் தங்களின் சமயங்களின் மீது இந்து பூசப்பட்ட அடையாளத்தை விட்டுவிட்டு, சைவம், மாலியம் என்று மீண்டு வர வேண்டும்” என்றார்.

அப்போது பத்திரிகையாளர் ஒருவர், `கிறிஸ்தவ, இஸ்லாமியச் சமயங்களைப் பற்றி நீங்கள் பேசுவதில்லையே’ என்று கேள்வி எழுப்பினர். அந்தக் கேள்விக்கு, “கிறிஸ்தவமும் இஸ்லாமும் தமிழர்களின் சமயமே இல்லை. அவை வெளியிலிருந்து வந்த சமயங்கள். ஒன்று ஐரோப்பியச் சமயம். மற்றொன்று அரேபியச் சமயம். என்னுடைய சமயம் சைவம். என்னுடைய சமயம் மாலியம். என்னுடைய சமயம் சிவசமயம். மரச்செக்கு எண்ணெய்க்கும், கருப்பட்டிக்கும் திரும்பியதுபோல, தமிழர்கள் மீண்டும் தாய் சமயத்துக்குத் திரும்ப வேண்டும்” என்று பேசியதாக குறிப்பிட்டிருந்தனர்.

எந்த இடத்திலும் கிறிஸ்தவர்களும் இஸ்லாமியர்களும் தமிழர்கள் இல்லை என்று சீமான் கூறியதாக குறிப்பிடப்படவில்லை. எனவே, சீமான் என்ன பேசினார் என்பதை அறிய அந்த வீடியோவை தேடி எடுத்தோம். சன் நியூஸ் தொலைக்காட்சி சீமானின் பேட்டி வீடியோவை வெளியிட்டிருந்தது.  அந்த வீடியோவை பார்த்தோம். 

அதில் அவர், “தமிழன் இந்துவே இல்லையே. கிறிஸ்தவமும் இஸ்லாமும் தமிழனின் சமயமே இல்லையே. ஒன்று ஐரோப்பிய மதம், இன்னொன்று அரேபிய மதம். இது தெரியாமல் மீண்டும் வா என்கின்றனர் ” என்கிறார். எந்த இடத்திலும் கிறிஸ்தவம், இஸ்லாம் மதத்தை பின்பற்றும் தமிழர்களை, தமிழர்களே இல்லை என்று சீமான் கூறவில்லை என்பது உறுதியாகிறது.

இதன் பிறகு மற்றொரு நிகழ்வில் பேசிய சீமான், “எச்.ராஜா இந்துக்கள்தான் தமிழர்கள். தமிழர் என்றாலே இந்துதான் என்று பேசிய போது யாரும் எதிர்க்கவில்லை. அதற்கு எதிர்வினையாக தமிழர்கள் நாங்கள் இந்துக்கள் இல்லை என்று நான் கூறினேன்” என்று விளக்கம் அளித்திருந்தார். தமிழர்களின் தொடக்க கால மதம் என்ன என்ற விவாதத்துக்குள் நாம் செல்லவில்லை.

கிறிஸ்தவமும் இஸ்லாமும் தமிழனின் சமயமே இல்லை. ஒன்று ஐரோப்பாவில் இருந்து வந்தது, மற்றொன்று அரேபியாவிலிருந்து வந்தது என்று சீமான் பேசினார். இவை தமிழகத்தில் தோன்றிய மதம் இல்லை என்ற அர்த்தத்தில் அவர் கூறுகிறார். ஆனால் தவறான அர்த்தம் கற்பிக்கும் வகையில் இஸ்லாமியனும் கிறிஸ்தவனும் தமிழர்களே இல்லை என்று சீமான் கூறியதாக தவறான தகவல் பகிரப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பதிவு குழப்பம் ஏற்படுத்தும் வகையில் உள்ளது, உண்மையுடன் தவறான தகவலும் சேர்த்து பகிரப்பட்டுள்ளது என்று உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

இஸ்லாமியரும் கிறிஸ்தவரும் தமிழர்கள் இல்லை என்று சீமான் கூறியதாக பரவும் நியூஸ் கார்டு தவறானது என்பதை தகுந்த ஆதாரங்களுடன்  ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…

Facebook I Twitter I Google News Channel

Avatar

Title:இஸ்லாமியரும் கிறிஸ்தவரும் தமிழர்கள் இல்லை என்று சீமான் கூறியதாகப் பரவும் வதந்தி!

Fact Check By: Chendur Pandian 

Result: Misleading