
சாத்தான்குளம் தலைமைக் காவலர் ரேவதியின் வீடு, பெற்றோர் படம் என்று ஒரு பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:

பெண் ஒருவருக்கு அவரது பெற்றோர் இனிப்பு ஊட்டுவது போன்ற படம் பகிரப்பட்டுள்ளது. ஏதோ தேர்வில் சாதனை படைத்த பெண் போல தெரிகிறது.
நிலைத் தகவலில், “படத்தில் இருக்கும் பெண் தான் சாத்தான் குளம் வியாபாரிகள் தந்தை, மகன், இரட்டை கொலை சம்பவத்தில், அந்த சைக்கோ காவலர்களுக்கு எதிராக, நடந்த சம்பவத்தை சாட்சியாக மாஜிஸ்திரேட் இடம் சொன்ன தலைமை பெண் காவலாளி ரேவதி இவர்தான். அவர் மாஜிஸ்திரேட்டிடம் கூறுகையில், “தந்தை மகன் இருவரையும் இரவு முழுவதும் அடித்தார்கள், லத்திகள் எல்லாம் ரத்த கறையாக இருந்தது, முதல் மாடியில் இருக்கும் டேபிள் முழுவதும், இரத்த கறையாக இருந்தது”.
ரேவதி பேசியதை மாஜிஸ்திரேட் வீடியோ சாட்சியாக பதிவு செய்துகொண்டார். ரேவதி: “நான் சாட்சி சொன்னால் என்னைக் கொன்றுவிடுவார்கள் என்று எனக்கு பயமாக தான் உள்ளது.. இருந்தாலும் என் மனசாட்சியை மீற முடியவில்லை… அன்று காவல் நிலையத்தில் நடந்ததை நீதிபதி முன் சொல்லிவிட்டேன்.”
படம்: ரேவதிக்கு போலீசில் வேலை கிடைத்த பொழுது தன் வீட்டின் முன், தன் தாய் தந்தை அளிக்கும் இனிப்பைப் பெற்றுக்கொண்ட பொழுது. ரேவதிக்கும் அவரது குடும்பத்திற்கும் தகுந்த பாதுகாப்பு அளிக்க மதுரை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது…” எனக் குறிப்பிட்டுள்ளனர்.
இந்த பதிவை Haja Ali Settu என்பவர் 2020 ஜூலை 1ம் தேதி பகிர்ந்துள்ளார். பலரும் இதை ஷேர் செய்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை விவகாரத்தில் தைரியமாக சாட்சியம் அளித்ததன் மூலம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தவர் சாத்தான்குளம் தலைமைக் காவலர் ரேவதி. இதனால், தன்னுடைய உயிருக்கு ஆபத்து உள்ளதாக கூறியுள்ளார். அதனால் அவருக்கு சம்பளத்துடன் கூடிய விடுப்பு அளித்து, பாதுகாப்புக்கு காவலர்களை நியமிக்க உத்தரவிட்டுள்ளது சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை. இந்த நிலையில் படத்தில் இருப்பவர்தான் ரேவதியா என்று ஆய்வு நடத்தி, ரேவதியின் அசல் படத்தை வெளியிட்டு அவரது பாதுகாப்புக்கு ஆபத்தை ஏற்படுத்த விரும்பவில்லை.
அதே நேரத்தில் இந்த புகைப்படம் ரேவதி போலீஸ் வேலைக்கு தேர்வானபோது எடுத்ததா என்று மட்டுமே ஆய்வு செய்தோம்.
படத்தை ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றித் தேடியபோது, சிவில் சர்வீஸ் தேர்வில் இந்திய அளவில் மூன்றாவது இடத்தைப் பிடித்த கர்நாடகாவைச் சேர்ந்த ஏழை மாணவி ரேவதி என்று சமூக ஊடகங்களில் பலரும் வதந்தி பரப்பி வந்திருப்பதும், அது தொடர்பாக உண்மை கண்டறியும் ஆய்வுகள் நடத்தப்பட்டிருப்பதும் தெரிந்தது.
‘கர்நாடகாவின் ஐ.ஏ.எஸ் மாணவி’ என்று பகிரப்பட்ட புகைப்படத்தை ‘தமிழகத்தில் சாத்தான்குளம் காவலர் ரேவதி’ என்று ஊருக்கு ஏற்ப, டிரெண்டுக்கு ஏற்ப மாற்றிப் பகிர்ந்திருப்பது தெரிந்தது.

உண்மையில் இந்த புகைப்படம் எங்கு, எப்போது எடுக்கப்பட்டது என்று ஆய்வு செய்தோம். அப்போது journalismpower.com என்ற இணையதளத்தில் 2017 மார்ச் 26ம் தேதி வெளியான செய்தி கிடைத்தது. அதில், இந்த பெண் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தேர்வில் வெற்றி பெற்றுள்ளார் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இவருடைய பெயரும் ரேவதி என்பதைத் தவிர இவருக்கும் சாத்தான்குளம் ரேவதிக்கும் எந்த தொடர்பும் இல்லை என்பது உறுதியானது.

இதன் அடிப்படையில், சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை தொடர்பாக சாட்சியம் அளித்த தலைமைக் காவலர் ரேவதியின் படம் என்று பகிரப்படும் இது ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த காவல் உதவி ஆய்வாளருடையது என்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் உண்மையும் தவறான தகவலும் கலந்த பதிவு என்று இது உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில், மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு தவறானது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049044263) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

Title:சாத்தான்குளம் தலைமைக் காவலர் ரேவதியின் புகைப்படம் இதுவா?
Fact Check By: Chendur PandianResult: Partly False
