ஆந்திர போலீசா? தெலுங்கானா போலீசா?- குழப்பத்தில் தி இந்து தமிழ்!

இந்தியா சமூக ஊடகம்

‘’ஆந்திர போலீசார், பொதுமக்களிடம் அபராதம் வசூலிக்காமல் ஹெல்மெட் மற்றும் லைசென்ஸ், இன்சூரன்ஸ் ஆவணங்களை எடுத்து தருகிறார்கள்,’’ என்ற தலைப்பில் ஒரு வைரல் செய்தியை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம்.

தகவலின் விவரம்:

Facebook LinkArchived Link 1News LinkArchived Link 2

Tamil The Hindu எனும் ஃபேஸ்புக் ஐடி இந்த பதிவை செப்டம்பர் 14, 2019 அன்று வெளியிட்டுள்ளது. இதில், இந்து தமிழ் இணையதளத்தில் வெளியான செய்தியின் லிங்கை இணைத்துள்ளனர். அந்த செய்தியில், ‘’ அபராதம் அல்ல… ஹெல்மெட், ஆவணங்களை அளிக்கும் ஆந்திர போலீஸார்: குவியும் பாராட்டு – கிரேட்டர் ஐதராபாத்தின் ரச்சகொண்டா போலீஸ் ஆணையர் அலுவலகம், போக்குவரத்து விதிமுறைகளை மீறும் பொதுமக்களுக்கு அபராதம் விதிக்காமல், அவர்களுக்கு அந்த இடத்திலேயே தொடர்புடைய ஹெல்மெட், லைசென்ஸ் மற்றும் இன்சூரன்ஸ் ஆவணங்களை வாங்குவதற்கு உதவி செய்கிறது. இதற்கு ஆந்திர மக்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்,’’ என எழுதப்பட்டுள்ளது. இதனை பலரும் உண்மை என நம்பி வைரலாக பகிர்ந்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:
மேற்கண்ட செய்தியின் தலைப்பு மற்றும் தொடக்க பத்திகளில் ஆந்திர மக்கள் பாராட்டுகிறார்கள், ஆந்திர போலீசார் புது நடவடிக்கை, என்றெல்லாம் எழுதிவிட்டு, செய்தியின் முடிவாக, தெலுங்கானா மாநில அமைச்சர் கே.டி.ராமா ராவ் பாராட்டு தெரிவித்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளனர். இந்த இடத்தில்தான் செய்தின் உண்மைத்தன்மையில் முரண்பாடு ஏற்படுகிறது.

ஐதராபாத் இருப்பது தெலுங்கானா மாநிலத்தில் ஆகும். ஆந்திராவில் இருந்து தெலுங்கானா பிரிக்கப்பட்ட போது, ஐதராபாத் இரு மாநிலங்களுக்கும் பொதுவான தலைநகராக அடுத்த 10 ஆண்டுகளுக்கு இருக்கும், அதற்குள்ளாக ஆந்திரா புதிய தலைநகரை அமைத்துக் கொள்வது என்றும், ஐதராபாத் தெலுங்கானா மாநில அரசின் நிர்வாகத்திற்கு உள்பட்டது என்றும் ஆந்திர பிரதேசம் மறுசீரமைப்பு சட்டம் 2014ன் படி, விதிமுறைகள் வகுக்கப்பட்டன.

இதன்படி, தற்போது அமராவதி என்ற புதிய தலைநகரை அமைக்கும் பணியில் ஆந்திர அரசு ஈடுபட்டுள்ளது. அதேசமயம், ஐதராபாத்தில் ஆந்திர அரசின் அலுவலகங்கள், நீதிமன்றங்கள் இருந்தபோதிலும், அந்நகரை முழுமையாக நிர்வகிப்பது, பாதுகாப்பது என அனைத்துமே தெலுங்கானா மாநில அரசின் பொறுப்பில் உள்ளது.

இதற்கிடையே, கிரேட்டர் ஐதராபாத் பகுதியின் ஆட்சி, சட்டம் ஒழுங்கு, நீதி நிர்வாகம் 3 பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது. அதாவது, ஐதராபாத், சைதராபாத் மற்றும் ரச்சகொண்டா என 3 பிரிவுகளின் கீழ் கிரேட்டர் ஐதராபாத் நிர்வாகம் நடைபெறுகிறது. இந்த 3 பகுதிகளுக்கும் தனித்தனி போலீஸ் ஆணையரகம் உள்ளது. இதில் ரச்சகொண்டா என்பது முழுக்க முழுக்க ஐதராபாத்தின் புறநகர்ப்பகுதிகளை உள்ளடக்கியதாகும். அத்துடன், இந்த 3 காவல் கோட்டங்களும் தெலுங்கானா மாநில எல்லைக்கு உள்பட்டு, தெலுங்கானா மாநில அரசின் கீழ்தான் இயங்குகின்றன.

இதன்படி, ரச்சகொண்டா போலீஸ் ஆணையரகம் சார்பாக, புதிய மோட்டார் வாகனச் சட்டத்தின்கீழ் பொதுமக்களுக்கு அதிக பாதிப்பு ஏற்படாமல் தடுத்து, அவர்களுக்கு உதவும் வகையில், சம்பந்தப்பட்ட இடத்திலேயே உரிய ஹெல்மெட், லைசென்ஸ் அல்லது இன்சூரன்ஸ் தொடர்பான ஆவணங்களை பெற்று தர டிராபிக் போலீசார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். இதனை கடந்த சனிக்கிழமை டிராஃபிக் போலீஸ் துணை ஆணையர் திவ்யா சரண் ராவ் தொடங்கி வைத்தார். இந்த நடவடிக்கைக்கு தெலுங்கானா மக்களிடையே பாராட்டு கிடைத்துள்ளது. அம்மாநில அமைச்சர் கே.டி.ராமா ராவும் பாராட்டு தெரிவித்துள்ளார்.

இதுபற்றி ஆங்கில ஊடகங்கள் பலவும் சரியாக செய்தி வெளியிட்ட நிலையில், தி இந்து மட்டும் இதில் ஆந்திராவை தொடர்புபடுத்தி செய்தி வெளியிட்டு வாசகர்களை குழப்பியுள்ளது.

இதுதொடர்பாக Live Mint வெளியிட்ட செய்தியை படிக்க இங்கே கிளிக் செய்யவும்.

சந்தேகத்திற்கு ரச்சகொண்டா போலீஸ் மற்றும் டிராபிக் பிரிவு இணையதள இணைப்புகளை இங்கே இணைத்துள்ளோம்.

Rachakonda Police CommissionerateRachakonda Traffic Police

இதுவரை கிடைத்த ஆதாரங்களின் அடிப்படையில் மேற்கண்ட செய்தியின் தலைப்பு தவறு. அத்துடன் செய்தியின் உள்ளேயும் தெலுங்கானா எனக் குறிப்பிடுவதற்கு, ஆந்திரா போலீஸ், ஆந்திரா மக்கள் என்றே குறிப்பிட்டுள்ளளனர்.

ஒரு முன்னணி ஊடகம் இவ்வாறு செய்தி வெளியிடுவது வாசகர்களை குழப்பும் செயலாகவே அமையும். எனவே, இந்த செய்தியில் பாதி உண்மை பாதி தவறான தகவல் உள்ளதாக, முடிவு செய்யப்படுகிறது.

முடிவு:
உரிய ஆதாரங்களின்படி நாம் ஆய்வு செய்த ஃபேஸ்புக் செய்தியில் பாதி உண்மை, பாதி தவறான தகவல் உள்ளதாக நிரூபிக்கப்பட்டுள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய குழப்பமான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை உறுதிப்படுத்தாமல் மற்றவர்களுக்கு பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.

Avatar

Title:ஆந்திர போலீசா? தெலுங்கானா போலீசா?- குழப்பத்தில் தி இந்து தமிழ்!

Fact Check By: Pankaj Iyer 

Result: Mixture

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •