
அமேதி தொகுதியில் வெற்றிபெற காரணமாக இருந்த தன்னுடைய உதவியாளர் கொலைக்கு ஸ்மிருதி இரானியே காரணம் என்று ஒரு தகவல் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:
மார்ட்டின் உதவியாளர் இறந்தால் அது மார்ட்டின் கைவண்ணம்.
ஸ்மிருதி ராணி உதவியாளர் இறந்தால் அது யார் கைவண்ணம்??
மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தின் செட்டிங்கை வெளியிடுவேன் என்று மிரட்டியதால் ஸ்மிருதி இரானி உதவியாளர் சுட்டுக்கொலையா என்று உங்கள் நியூஸ் (Satire news) இணைய தளத்தில் செய்தி வெளியாகி உள்ளது. அதை அடிப்படையாக வைத்து, உதவியாளரின் உடலை ஸ்மிருதி இரானி தூக்கிச் செல்லும் புகைப்படத்தில், “சினிமாவில்தான் பார்த்திருக்கிறோம், வில்லனே கொலை செய்துவிட்டு பாடியை தானே சுமந்து செல்வது” என்று குறிப்பிட்டுள்ளனர்.
தன்னுடைய உதவியாளரை ஸ்மிருதி இரானிதான் கொலை செய்திருப்பார் என்ற அர்த்தத்தில் பதிவிடப்பட்டுள்ளது. இதனுடன், மார்டின் உதவியாளர் இறந்தால் அது மார்டின் கைவண்ணம், ஸ்மிருதி இரானி உதவியாளர் இறந்தால் அது யார் கைவண்ணம்?” என்று கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.
இந்த பதிவை, 2019 மே 28ம் தேதி Jesu Raj Jesu Raj என்பவர் வெளியிட்டுள்ளார். இது உண்மை என்று நம்பி இதை ஏராளமானோர் பகிர்ந்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
அமேதி நாடாளுமன்றத் தொகுதியில் மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி வெற்றிக்கு பெரிதும் பாடுபட்டவர், ஸ்மிருதி இரானியின் உதவியாளர் சுரேந்தி சிங். இவர் வாக்கு எண்ணிக்கை முடிந்த ஒரு சில நாட்களிலேயே சுட்டுக்கொல்லப்பட்டார்.
இந்த நிலையில், உதவியாளர் கொலைக்கு ஸ்மிருதி இரானிதான் காரணம் என்று ஒரு தகவல் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதற்கு ஆதாரமாக, உங்கள் செய்தி என்ற இணையதளத்தில் வெளியான செய்தியை ஆதாரமாக கொடுத்துள்ளனர். ‘உங்கள் செய்திகள்’ என்ற இணைய தளத்தின் பெயருக்குக் கீழ், Satire news (கற்பனை செய்தி) என்று இருப்பதை பார்க்கத் தவறிவிட்டனர்.
உங்கள் செய்தியில், ஸ்மிருதி இரானி உதவியாளர் கொலை தொடர்பான செய்தியைத் தேடிப்பிடித்து பார்த்தோம்.
அந்த பக்கத்தில் “உங்கள் நியூஸ்” என்பதற்குக் கீழே, “கற்பனை தவிர வேறில்லை” என்று இருந்தது. மேலும், எச்சரிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தனர். அதில், “இது ஒரு முழு கற்பனை செய்தி தளம். இங்கு நீங்கள் படிப்பது கற்பனை மற்றும் மிகைப்படுத்தப்பட்ட செய்திகள். உங்களை சிரிக்க (முடிந்தால் சிந்திக்க) வைப்பதுதான் எமது குறிக்கோள். யாரையும் புண்படுத்துவது எமது நோக்கமல்ல” என்று குறிப்பிட்டிருந்தனர்.

செய்தியில், ஸ்மிருதி இரானி உதவியாளர், ராகுல் காந்திக்கு எதிராக பொது மக்களுக்கு செருப்பு வாங்கிக்கொடுத்தார் என்று எல்லாம் சரியாக இருந்தது. கடைசி பத்தியில், இந்தியா முழுவதும் பா.ஜ.க வெற்றிக்கு வித்திட்ட இ.வி.எம் செட்டிங் முறையை வெளியிடுவேன் என்று மிரட்டியதால் பா.ஜ.க தரப்பே இவரைப் போட்டுத் தள்ளியதா என்ற கோணத்தில் விசாரிப்பதாக லக்னோ ‘டுபாக்கூர்’ போலீஸ் அதிகாரி தெரிவித்தார் என்று முடித்துள்ளனர்.
இதைப் படிக்கும்போது, எதில் எல்லாம் காமெடி செய்வது என்ற விவஸ்தையே இல்லையா? ஒருவர் மரணத்தில் கூடவா காமெடி செய்ய முயல்வீர்கள் என்று கேட்கத் தோன்றியது!
இதற்கிடையே, இந்த கொலை வழக்கு தொடர்பாக போலீசார் நடத்திய என்கவுண்டரில் ஒருவர் கொல்லப்பட்டுள்ளர். 7 பேரை கைது செய்துள்ளனர். இதில் ராமச்சந்திரா என்பவர் காங்கிரஸ் கட்சியை சார்ந்தவர். இது தொடர்பான செய்தியை படிக்க இங்கே கிளக் செய்யுங்கள்.

இந்த பதிவில், லாட்டரி சீட்டு நிறுவன அதிபர் மார்டினின் உதவியாளர் பழனிச்சாமி மர்ம மரணம் பற்றி குறிப்பிட்டுள்ளனர். இந்த மரணம் தொடர்பாக போலீசார் மீதே சந்தேகம் எழுப்பப்பட்டுள்ளது. இது தொடர்பாக சி.பி.சி.ஐ.டி விசாரணை நடத்த வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. ஆனால், இதற்கு அனுமதி மறுத்த உயர் நீதிமன்றம், மாஜிஸ்திரேட் விசாரணைக்கு உத்தரவிட்டது. அதில், திருப்தி ஏற்படாதபட்சத்தில், உயர் நீதிமன்றத்தை நாடலாம் என்றும் தெரிவித்துள்ளது. இந்த செய்தியைப் படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்.
நாம் மேற்கொண்ட ஆய்வில், உதவியாளர் கொலைக்கும் ஸ்மிருதி இரானிக்கும் தொடர்பு என்று கூறப்பட்ட பதிவு தவறானது. கற்பனை செய்திகளை வெளியிடும் ஒரு இணைய தளத்தின் செய்தியை உண்மை என்று நம்பி மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவை பகிர்ந்துள்ளனர். எனவே, இது தவறான உறுதி செய்யப்பட்டுள்ளது.
முடிவு:
தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில், மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு தவறானது என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.

Title:தன்னுடைய உதவியாளர் கொலை வழக்கில் ஸ்மிருதி இரானிக்கு தொடர்பா?
Fact Check By: Praveen KumarResult: False
