மதீனாவில் பனிப்பொழிவு- வீடியோ உண்மையா?

சமூக ஊடகம் சமூகம் சர்வதேசம்

மதீனாவில் பனிப் பொழிவு என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

Facebook LinkArchived Link 1Archived link 2

35 விநாடி வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளனர். அதில் பிரம்மாண்டமான மசூதிப் பகுதியில் பனிப் பொழிவு காட்சிகள் இடம் பெற்றுள்ளது. அரபி மொழியில்  ஏதோ சொல்கிறார்கள். நிலைத் தகவலில், “மதீனாவில் பனி பொழியும் அற்புதமான காட்சிகள். மாஷா அல்லாஹ்” என்று குறிப்பிட்டுள்ளனர். 

இந்த பதிவை, Nellai Sheik என்பவர் ஜனவரி 14, 2020 அன்று வெளியிட்டுள்ளார். பலரும் இதை ஷேர் செய்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

சௌதி அரேபியாவின் வடக்கு பாலைவனப் பகுதியில் இந்த ஆண்டு பனிப்பொழிவு நிகழ்ந்துள்ளது என்று செய்திகள் வெளியாகி உள்ளன. இந்த சூழ்நிலையில், மசூதி பின்னணியில் பனிப்பொழிவு வீடியோவை பகிர்ந்துள்ளனர். மிக பிரம்மாண்டமான மசூதி என்பதால் இதை மதீனா என்று குறிப்பிட்டுள்ளனர். பலரும் இது மதீனா இல்லை என்றும் கமெண்ட் செய்து வருகின்றனர். 

உண்மையில் இது மதீனாவில் எடுக்கப்பட்டதா, மதீனாவில் பனிப்பொழிவு நிகழ்ந்துள்ளதா என்று தேடினோம். முதலில், கூகுளில் இந்த ஆண்டு மதீனாவில் பனிப்பொழிவு நடந்ததா என்று தேடினோம். ஆனால், அப்படி எந்த ஒரு செய்தியும் கிடைக்கவில்லை. மதீனாவில் இருந்து 800 கி.மீ வடக்கே உள்ள தபுக் பகுதியில் பனிப்பொழிவு பதிவானதாக செய்திகள் கிடைத்தது. மதீனாவில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக குறிப்பிட்டிருந்தனர்.

arabnews.comArchived Link

மதீனாவில் இதற்கு முன்பு எப்போதாவது பனிப்பொழிவு பதிவாகி உள்ளதா என்று தேடினோம். விக்கிப்பீடியாவில் மதினாவின் சராசரி குறைந்தபட்ச வெப்பநிலை ஜனவரியில் 11.6 என்று குறிப்பிட்டிருந்தனர். மதீனாவின் வரலாற்றில் மிகக் குறைந்தபட்ச வெப்பநிலை பதிவு 1 டிகிரி செல்ஷியஸ் என்று குறிப்பிட்டிருந்தனர். அதாவது நிறைநிலைக்கு ஒரு டிகிரி மேல். மதீனாவில் பனிப் பொழிவு நிகழ்ந்ததாக எந்த செய்தியும் கிடைக்கவில்லை.

இந்த வீடியோவில் உள்ள காட்சிகளை புகைப்படமாக மாற்றி ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றித் தேடினோம். அப்போது, மதீனாவில் பனிப்பொழிவு என்று இந்த வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருவது தெரிந்தது. இது மதீனா இல்லை, ஈரான் நாட்டில் உள்ள The shrine of Imam al-Rida என்று குறிப்பிட்டிருந்தனர். 

இது உண்மையா என்று ஆய்வு செய்தோம்.  ஈரான் மசூதி அமைந்துள்ள Mashhad என்ற நகரத்தில் பனிப்பொழிவு சாத்தியமா என்று ஆய்வு செய்தோம். அப்போது, அங்கு ஜனவரி, பிப்ரவரி மாதத்தில் குறைந்தபட்ச வெப்பநிலை மைனஸ் 27 வரை செல்லும் என்று குறிப்பிட்டிருந்தனர். அதுவும் குறைந்தபட்ச மழைப் பொழிவு உள்ள பகுதி, அதுவும் பனிப் பொழிவாக கிடைக்கிறது என்று குறிப்பிட்டிருந்தனர். 

Search Link

யூடியூபில் shrine of Imam al-Rida-வில் பனிப்பொழிவு தொடர்பாக ஏதாவது வீடியோ கிடைக்கிறதா என்று பார்த்தோம். அப்போது நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட வீடியோ கூட ஈரானில் எடுக்கப்பட்டது என்று பதிவிடப்பட்டு இருந்தது. மேலும், குறிப்பிட்ட அந்த மசூதியில் பனிப்பொழிவு நிகழ்வு தொடர்பாக பல வீடியோக்கள் கிடைத்தன. அனைத்திலும், நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட வீடியோவில் உள்ளது போன்ற மிக உயர்ந்த கோபுரங்கள், அலங்கார மின் விளக்குகள் இருப்பதைக் காண முடிந்தது.

Youtube LinkSearch linkAFP FactCheck

நம்முடைய ஆய்வின்போது, ஏ.எஃப்.பி நிறுவனம் சில தினங்களுக்கு முன்பு மதீனாவில் பனிப்பொழிவு என்று பகிரப்பட்ட இந்த வீடியோ உண்மையில் மதீனாவில் எடுக்கப்பட்டதா என்று அரபு மொழியில் ஆய்வு மேற்கொண்டிருந்த கட்டுரையும் கிடைத்தது. அதில் கூட இந்த வழிபாட்டுத்தலம் ஈரானில் உள்ள shrine of Imam al-Rida என்று குறிப்பிட்டிருந்தனர்.

இந்த ஆதாரங்கள் அடிப்படையில், மதீனாவில் பனிப்பொழிவு நிகழ்ந்தது என்று பகிரப்படும் வீடியோ தகவல் தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில், மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு தவறானது என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.

Avatar

Title:மதீனாவில் பனிப்பொழிவு- வீடியோ உண்மையா?

Fact Check By: Chendur Pandian 

Result: False