தமிழை தேசிய மொழியாக அறிவித்த ஆஸ்திரேலியா? – ஃபேஸ்புக் வதந்தி

சர்வதேசம் | International தமிழகம்

தமிழை தேசிய மொழியாக ஆஸ்திரேலியா அறிவித்துள்ளதாக ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

Facebook LinkArchived Link

ஆஸ்திரேலியா வரைபடத்துடன் பதிவிடப்பட்டுள்ளது. அதில், “தமிழ் மொழியை தேசிய மொழியாக அறிவித்தது ஆஸ்திரேலியா! இச்செய்தியை பெருமையுடன் அனைவருக்கும் பகிர்வோம்” என்று போட்டோஷாப்பில் எழுதப்பட்டுள்ளது.

இந்த பதிவை, Dinesh Babu என்பவர் 100% சிரிப்பு இலவசம் என்ற ஃபேஸ்புக் பக்கத்தில் 2019 டிசம்பர் 2ம் தேதி வெளியிட்டுள்ளார். 

உண்மை அறிவோம்:

தமிழ் நாடு, சிங்கப்பூர், இலங்கையில் தமிழ் ஆட்சி மொழியாக உள்ளது. இது தவிர, மலேசியா, மொரீஷியஸ், தென்னாப்பிரிக்கா உள்ளிட்ட நாடுகளில் பண்பாட்டு மொழியாக உள்ளது. வேறு எந்த நாட்டிலும் அதற்கு தேசிய மொழி என்ற அங்கீகாரம் இல்லை. ஆனால், அமெரிக்காவில் அறிவிக்கப்பட்டது, கனடாவில் அறிவிக்கப்பட்டது என்று மட்டும் தொடர்ந்து சமூக ஊடகங்களில் வதந்தி பரவி வருகின்றன. 

ஆஸ்திரேலியாவின் தேசிய மொழியாக தமிழ் அறிவிக்கப்பட்டுள்ளது என்று நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட ஃபேஸ்புக் பதிவில் குறிப்பிட்டுள்ளனர். அது உண்மையா என்று ஆய்வு நடத்தினோம். முதலில் ஆஸ்திரேலியாவின் தேசிய மொழி என்ன என்று கூகுளில் டைப் செய்து தேடினோம். அப்போது, ஆஸ்திரேலியாவின் தேசிய மொழியாக தமிழ் அறிவிக்கப்பட்டது என்று பல வதந்தி பரவி வரும் செய்தி நமக்கு கிடைத்தது.

Search Linkbangaloremirror.indiatimes.comArchived Link

இந்தியா டைம்ஸின் பெங்களூரூ மிரர் வெளியிட்டிருந்த செய்தி ஒன்று நமக்கு கிடைத்தது. அதில், சமூக ஊடகங்களில் பகிரப்படும் தகவல் தவறு என்று குறிப்பிட்டிருந்தனர். அதில் ஆஸ்திரேலிய நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் ஸ்டேட் மெம்பர் (State Member for Prospect) ஹக் மெக்டோர்மோட் தேசிய பாடத்திட்டத்தில் தமிழை சேர்க்க வேண்டும் என்று கூறியிருந்தார். அதனால் இவ்வாறு வதந்தி பரவியது என்று குறிப்பிட்டிருந்தனர். ஆனால், இந்த நிகழ்வு எப்போது நடந்தது, அதற்கான ஆதாரம் எதையும் அளிக்கவில்லை.

நம்முடைய தேடலில், worldatlas.com என்ற இணையதளத்தில் ஆஸ்திரேலியாவில் பேசப்படும் மொழிகள் என்ன என்ற ஒரு கட்டரை வெளியிட்டிருந்தனர். அதில், ஆஸ்திரேலியாவில் தேசிய மொழி என்று ஒன்று அதிகாரப்பூர்வமாக இல்லை. ஆனால், ஆங்கிலம்தான் தேசிய மொழிபோல உள்ளது. ஆஸ்திரேலியாவில் பல நாடுகளைச் சேர்ந்தவர்கள் குடியேறி வாழ்ந்து வருகின்றனர். கிட்டத்தட்ட 200 மொழிகள் பேசப்படுகின்றன. 2011 கணக்கெடுப்பின் படி 78.8 சதவிகிதம் பேர் தங்கள் வீடுகளில் ஆங்கிலம் பேசுகின்றனர். ஆங்கிலத்துக்கு அடுத்தபடியாக சீனம் அதிகம் பேசப்படுகிறது. பஞ்சாபி, ஃபிலிப்பினோ, அரபிக் ஆகியவையும் அதிகம் பேசப்படுகிறது என்று குறிப்பிட்டிருந்தனர். அதில் தமிழ் பற்றி குறிப்பிடவே இல்லை.

worldatlas.comArchived Link

migrationtranslators.com.au என்ற இணையதளத்தில் தமிழ் ஆஸ்திரேலியாவின் தேசிய மொழி பற்றி நிலவும் தவறான கருத்து என்று கட்டுரை வெளியாகி இருந்தது. அதில், கூட அதிகாரப்பூர்வமாக எந்த ஒரு மொழியும் தேசிய மொழியாக அறிவிக்கப்படவில்லை. ஆனால், ஆங்கிலமே தேசிய மொழியாக உள்ளது என்று குறிப்பிட்டிருந்தனர். அந்த செய்தியிலும் கூட ஆஸ்திரேலிய நாடாளுமன்ற உறுப்பினர் ஹக் மெக்டோர்மோட் பேசியதைக் குறிப்பிட்டிருந்தனர். மேலும், ஆஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் பகுதியில் தான் அதிகபட்சமாக 21,527 தமிழர்கள் வசிப்பதாகவும் அதில் குறிப்பிட்டிருந்தனர். இந்த கட்டுரையிலும் கூட ஹக் மெக்டோர்மோட் எப்போது கூறினார் என்று குறிப்பிடவில்லை.

migrationtranslators.com.auArchived Link

இது தொடர்பாக கூகுளில் தேடியபோது 2016ம் ஆண்டு செய்தி வெளியானது தெரியவந்தது. அந்த செய்தியில், “ஆஸ்திரேலிய கல்வி அமைச்சர், செனடர் சிம்மன் பர்மீங்ஹாமிடம் எழுத்துப் பூர்வ கோரிக்கைகளை ஹக் மெக்டோர்மோட் முன் வைத்துள்ளார்” என்று இருந்தது. ஆஸ்திரேலியாவில் தமிழ் தேசிய மொழியாக அறிவிக்கப்பட்டது என்று எந்த செய்தியும் கிடைக்கவில்லை.

tamil.oneindia.comArchived Link 1
kalaignarseithigal.comArchived Link 2

தொடர்ந்து தேடியபோது சவுத் வேல்ஸ் மாகாண அரசு அடுத்த கல்வியாண்டு முதல் தமிழை இரண்டாவது மொழியாக கற்றுக்கொடுக்க அனுமதி அளித்துள்ளது என்ற செய்தி நமக்கு கிடைத்தது. தமிழ் மட்டுமின்றி இந்தி, பஞ்சாபி, பெர்ஷியன், மெக்டோனியன் ஆகிய ஐந்து மொழிகளை சேர்க்க முடிவெடுக்கப்பட்டுள்ளது என்று அதில் குறிப்பிட்டிருந்தனர்.

நம்முடைய ஆய்வில்

ஆஸ்திரேலியாவின் அதிகாரப்பூர்வ தேசிய மொழி என்று எதுவும் இல்லை. ஆனால், ஆங்கிலமே தேசிய மொழியாக இருந்து வருகிறது என்ற தகவல் கிடைத்துள்ளது.

தமிழை தேசிய பாடத்திட்டத்தில் சேர்க்க வேண்டும் என்று ஆஸ்திரேலிய எம்.பி கோரிக்கைவிடுத்துள்ளார்.

ஐந்து மொழிகளுள் ஒன்றாக நியூ சவுத் வேல்ஸ் மாகாணத்தில் தமிழ் இரண்டாவது மொழியாக பயிற்றவிக்கப்பட உள்ளது என்று கலைஞர் செய்திகள் செய்தி வெளியிட்டுள்ளது.

இந்த ஆதாரங்கள் அடிப்படையில், தமிழை தேசிய மொழியாக ஆஸ்திரேலியா அறிவித்தது என்ற தகவல் தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில், மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு தவறானது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.

Avatar

Title:தமிழை தேசிய மொழியாக அறிவித்த ஆஸ்திரேலியா? – ஃபேஸ்புக் வதந்தி

Fact Check By: Chendur Pandian 

Result: False