குவைத்தில் சிக்கிய தமிழ் பெண்- மீட்கப்பட்ட பிறகும் பரவும் வீடியோ!

சமூக ஊடகம் சமூகம்

குவைத்தில் ஊதியம், உணவின்றி தவிப்பதாக தமிழகத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் கண்ணீர்விட்டபடி பேசும் வீடியோ  சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

Women 3.png
Facebook Link 1Archived Link 1Archived Link 2Facebook Link 2Archived Link 3

அழுதபடி பேசும் செவிலியர் போல ஆடை அணிந்த பெண் ஒருவரின் வீடியோ ஒன்றை அருண் குமார் என்பவர் 2019 செப்டம்பர் 15ம் தேதி ஷேர் செய்திருந்தார். அந்த வீடியோ ஃபேஸ்புக் பதிவை வனிதா ராஜ் என்பவர் 2019 ஏப்ரல்18ம் தேதி பதிவிட்டிருந்தார்.

அந்த பெண் தன்னுடைய பெயர் கலைவாணி என்றும், திருவண்ணாமலை மாவட்டத்தைச் சார்ந்தவர் என்றும், தற்போது குவைத்தில் இருப்பதாகவும் குறிப்பிடுகிறார். அங்கு சம்பளம் தர மறுப்பதுடன் பல்வேறு வகையில் தொந்தரவு செய்வதாகவும் தன்னை மீட்க உதவும்படியும் கேட்கிறார். 3.05 நிமிடங்கள் அந்த வீடியோ ஓடுகிது. 

பலரும் இந்த பதிவை ஷேர் செய்து வருகின்றனர். அந்த பெண்ணை மீட்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துவருகின்றனர்.

உண்மை அறிவோம்:

தமிழகத்தைச் சேர்ந்த இளம் பெண் ஒருவர் குவைத்தில் சிக்கி அவதியுறுவதாக ஏப்ரல் மாதம் இந்த வீடியோ சமூக ஊடகங்களில் வைரல் ஆனது. தொலைக்காட்சிகளிலும் செய்தியாக வெளியானது. அதைத் தொடர்ந்து அந்த பெண் மீட்கப்பட்டார் என்று செய்திகள் வெளியாகின. 

அந்த வீடியோ அகற்றப்படவில்லை அல்லது மீட்கப்பட்டது பற்றிய தகவல் அப்டேட் செய்யப்படாததால் தற்போது வரை அது பகிரப்பட்டு வருகிறது எனத் தெரிந்தது.

இந்த பெண் எப்போது மீட்கப்பட்டார் என்று தேடினோம். அப்போது, 2019 ஏப்ரல் 18ம் தேதி புதிய தலைமுறை வெளியிட்ட செய்தி கிடைத்தது. அதில், குவைத்தில் இளம் பெண் சிக்கியுள்ளார் என்று செய்தி வெளியிட்டிருந்தனர். அந்த பெண்ணை மீட்பதற்கான நடவடிக்கையில் அங்குள்ள குவைத் தமிழ் இஸ்லாமிய அமைப்பு  ஈடுபட்டுள்ளது என்றும் குறிப்பிட்டிருந்தனர். 

Archived Link

அதற்கு அடுத்த நாள், அதாவது ஏப்ரல் 19ம் தேதி மற்றொரு செய்தி வெளியாகி இருந்தது. அதில், புதிய தலைமுறை செய்தி எதிரொலியாக குவைத்தில் ஊதியம், உணவின்றி தவித்த தமிழக பெண் மீட்கப்பட்டார் என்று வீடியோவோடு செய்தி வெளியிட்டிருந்தனர். அதில், அந்த பெண் குவைத்தில் உள்ள இந்திய தூதரகத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்திருந்தனர். இது குறித்து அந்த பெண் கூறுகையில், “அதிக பிரச்னையோடு ஒரு வீட்டிலிருந்தேன். மதி, ஆல்வின் ஜோஸ் ஆகிய இருவர் என்னை மீட்டு குவைதில் இந்தியத் தூதரகத்துக்கு அழைத்து வந்தனர். தற்போது நான் மீட்கப்பட்டுவிட்டேன்” என்று கூறுகிறார். மேலும் அந்த பெண்ணை இந்தியாவுக்கு அனுப்புவதற்கான நடவடிக்கையில் இந்தியத் தூதரகம் ஈடுபட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

Archived Link

இது நடந்து ஒரு வாரம் கழித்து, இந்த வீடியோவை ஒருவர் அப்போது வெளியுறவுத் துறை அமைச்சராக இருந்த சுஷ்மா சுவராஜை டேக் செய்து அவரது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். அதைத் தொடர்ந்து அந்த பெண் மீட்கப்படுவார் என்று ஏப்ரல் 24ம் தேதி சுஷ்மா சுவராஜ் தெரிவித்து, குவைத்தில் உள்ள இந்திய தூதரகத்தை டேக் செய்திருந்தார்.

அதற்கு குவைத்தில் உள்ள இந்திய தூதரகம், அந்த பெண் எங்களை அணுகினார். தற்போது தூதரகத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளார். அவரை இந்தியாவுக்கு அனுப்புவதற்கான பணிகள் நடந்து வருகிறது” என்று குறிப்பிட்டிருந்தனர்.

Archived Link

அந்த பெண் மீட்கப்பட்டு பத்திரமாக இந்திய தூதரகத்தில் ஒப்படைக்கப்பட்டுவிட்டார்.

அவரை இந்தியாவுக்கு அனுப்புவதற்கான பணிகளை செய்து வருவதாக குவைத்தில் உள்ள இந்திய தூதரகம் அறிவித்துள்ளது.

உண்மை இப்படி இருக்க, தொடர்ந்து அந்த பெண் முதலில் வெளியிட்ட வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அந்த பெண் மீட்கப்பட்டுவிட்டதால், குவைத்தில் தமிழக பெண் சிக்கியுள்ளார் என்ற தகவல் தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில், மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு தவறானது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.

Avatar

Title:குவைத்தில் சிக்கிய தமிழ் பெண்- மீட்கப்பட்ட பிறகும் பரவும் வீடியோ!

Fact Check By: Chendur Pandian 

Result: False

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •