
தமிழக பா.ஜ.க தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் மகனுக்கு நக்சல் இயக்கங்களுடன் தொடர்பு இருக்கலாம். எனவே, இது தொடர்பாக சி.பி.ஐ விசாரணை தேவை என்று சமூக ஊடகங்களில் ஒரு பதிவு அதிக அளவில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:
தமிழிசை சவுந்திரராஜனின் படத்தை பகிர்ந்துள்ளனர். நிலைத் தகவலில், “தமிழிசையின் மகன் சுகநாதனுக்கு தீவிரவாத நக்சல் இயக்கங்களுடன் தொடர்பு இருக்கலாம். சிபிஐ விசாரணை தேவை. நீ பற்ற வைத்த நெருப்பொன்று!” என்று குறிப்பிட்டுள்ளனர்.
சமீபத்தில் விமானநிலையத்தில் பா.ஜ.க-வுக்கு எதிராக கோஷம் எழுப்பியவர் தமிழிசையின் மகன் சுகநாதன். இதனால் தமிழிசைக்கு எதிராக இந்த பதிவிடப்பட்டுள்ளது. இந்த பதிவை, Sadik Sadik என்பவர் 2019 ஜூன் 10ம் தேதி வெளியிட்டுள்ளார். தமிழிசை மற்றும் பா.ஜ.க-வுக்கு எதிரான பதிவு என்பதால் பலரும் இதைப் பகிர்ந்துள்ளனர்.
உண்மை அறிவோம்:
தமிழக பா.ஜ.க தலைவர் தமிழிசை சவுந்திரராஜனின் மகன் டாக்டர் சுகநாதன். தமிழிசை அவருடைய கணவர் டாக்டர் சவுந்திரராஜன், மகன் சுகநாதன் ஆகிய மூவரும் கடந்த ஞாயிற்றுக் கிழமை (9 ஜூன் 2019) அன்று திருச்சி செல்வதற்காக சென்னை விமானநிலையம் வந்தனர். அப்போது, தமிழக பா.ஜ.க தலைவர் தமிழிசை, நிருபர்களுக்கு பேட்டி அளித்துக்கொண்டிருந்தார். அந்த நேரத்தில், டாக்டர் சுகநாதன் பா.ஜ.க மற்றும் தமிழிசைக்கு எதிராக கோஷங்களை எழுப்பினார். உடனடியாக அவரை தமிழிசையின் பாதுகாவலர்கள் தடுத்து இழுத்துச் சென்றனர்.
“கடந்த வருடத்தில் ஸ்டெர்லைட் விவகாரத்தின்போது சென்னையிலிருந்து தூத்துக்குடிக்குத் தமிழிசை விமானத்தில் சென்றார். விமானத்தில், ‘பாசிச பாரதிய ஜனதா ஒழிக’ என்று சோபியா என்ற மாணவி கோஷம் எழுப்பினார். தூத்துக்குடி விமான நிலையத்தில் வைத்து தமிழிசை சோபியாவிடம் தகராறில் ஈடுபட்டதோடு, மாணவி மீது போலீஸில் புகார் அளித்து கைது செய்யவும் வைத்தார். தற்போது, தமிழிசை மகனே விமான நிலையத்தில் அவரின் முன்னிலையிலேயே பாரதிய ஜனதாவுக்கு எதிராக கோஷம் எழுப்பியுள்ளார். இப்போது, என்ன செய்யப்போகிறார்?” என்று விகடனில் செய்தி வெளியானது. அந்த செய்தியைப் படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்.
இதேபோல், பலரும் சுகநாதன் மீது நடவடிக்கை எடுப்பீர்களா என்று சமூக ஊடகங்களில் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
பா.ஜ.க-வுக்கு எதிராக தன்னுடைய மகன் கோஷம் எழுப்பியதை தமிழிசை மறுத்துள்ளார். இது தொடர்பாக தன்னுடைய ஃபேஸ்புக் பக்கத்தில் அவர் ஒரு விளக்கம் அளித்திருந்தார். அதில், “குடும்ப விழா ஒன்றில் பங்கேற்க திருச்சி சென்றுகொண்டிருந்தோம். ஆனால், கட்சி வேலை காரணமாக என்னால் குடும்பத்தினருடன் செல்ல முடியாத சூழ்நிலை. அதனால், ‘நீங்கள் இந்த விமானத்தில் செல்லுங்கள்… அடுத்த விமானத்தில் நான் வருகிறேன்’ என்று கூறியிருந்தேன். குடும்பத்தைக் காட்டிலும் கட்சிதான் முக்கியமா என்று மகன் கோபப்பட்டார். இந்த குடும்ப சூழலை அரசியல் ஆக்குவது கீழ்த்தரமானது” என்று கூறப்பட்டு இருந்தது.
கடந்த 2018ம் ஆண்டு செப்டம்பர் மாதம், தமிழிசை சவுந்திரராஜன் சென்னையிலிருந்து தூத்துக்குடிக்கு விமானத்தில் சென்றுகொண்டிருந்தார். அப்போது, வெளிநாட்டில் ஆராய்ச்சி படிப்பு படித்துவந்த மாணவி சோபியா, பா.ஜ.க-வுக்கு எதிராக கோஷம் எழுப்பினார். விமானம் தூத்துக்குடியில் தரை இறங்கியதும் இது குறித்து தமிழிசை புகார் செய்தார். அந்த பெண்ணுக்கு எதிராக பா.ஜ.க-வினர் போராடினர். போலீசார் சமாதானம் செய்ய முயன்றும், தமிழிசை சமாதானம் ஆக மறுத்தார். புகார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழிசை போராடினார். இதைத் தொடர்ந்து அந்த மாணவி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். ஆனால், அடுத்தநாளே அந்த பெண்ணுக்கு ஜாமீன் வழங்கப்பட்டது.
அப்போது இது குறித்து பேட்டி அளித்த தமிழிசை, “அவரது பின்னணி, இயக்கம் குறித்து சந்தேகம் உள்ளது. சோபியாவின் பின்னணி குறித்து விசாரிக்க வேண்டும். சோபியா தவறு செய்யவில்லை என்றால், அவர் விடுதலையாகட்டும். தவறு செய்திருந்தால், போலீசார் நடவடிக்கை எடுக்கட்டும். நான் புகாரை திரும்பப் பெற மாட்டேன்” என்றார். இது தொடர்பான செய்தியைப் படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்.
“தீவிரவாத பின்னணி கொண்டவர் சோபியா என்று சித்தரிக்க தமிழகத்தில் முயற்சிகள் நடக்கின்றன. ஒரு குற்றவாளியைப் போல எட்டரை மணி நேரம் காவல் நிலையத்தில் வைத்து விசாரித்துள்ளனர். சோபியாவின் பாஸ்போர்ட்டை முடக்க முயல்கின்றனர். அப்படி செய்தால் வழக்கறிஞர் மூலம் உரிய நடவடிக்கை எடுப்போம்” என்றார் சோபியாவின் தந்தை. பி.பி.சி தமிழில் வெளியான வீடியோ கீழே…
பா.ஜ.க வழக்கறிஞர் சண்முக சுந்தரம் கூறுகையில், “இந்த சம்பவத்துக்கு இவ்வளவு சிறிய செக்ஷனில் வழக்கு தாக்கல் செய்து தவறான முன்னுதாரணத்தைத் தமிழக காவல்துறை உருவாக்கிவிட்டது” என்றார்.
பொது இடத்தில் கோஷமிட்டதற்காக சோபியாவின் பின்னணியை விசாரிக்க வேண்டும் என்று சந்தேகம் எழுப்பியவர் தமிழிசை.
ஜாமீனில் வெளிவரக்கூடிய செக்ஷனில் வழக்கு தொடர்ந்ததற்கு கண்டனம் தெரிவித்தார் பா.ஜ.க வழக்கறிஞர்.
அப்படி இருக்கும்போது, தமிழிசை மகனும் பொது இடத்தில், விமான நிலையத்தில் பா.ஜ.க-வுக்கு எதிராக கோஷமிட்டுள்ளார். விகடன் செய்தியில் கூறப்பட்டது போல, அவர் மீது மட்டும் புகார் அளிக்காதது, வழக்கு தொடராதது ஏன் என்று பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
அந்த வகையில், தமிழிசையின் மகனின் பின்னணியை விசாரிக்க வேண்டும் என்று கேட்டிருக்கலாம். அல்லது, சோபியாவை கைது செய்து தண்டனை வழங்க வேண்டும் என்று கடுமையான பேட்டிகளை அளித்தீர்களே, இப்போது என்ன செய்யப் போகின்றீர்கள் என்ற விதத்தில் இந்த பதிவிட்டிருக்கலாம். அதற்காக டாக்டர் சுகநாதனுக்கு தீவிரவாத நக்சல் இயக்கங்களுடன் தொடர்பு இருக்கலாம், சி.பி.ஐ விசாரணை தேவை என்று எல்லாம் பதிவிட்டிருப்பது கொஞ்சம் எல்லை மீறல்தான்!
நாம் மேற்கொண்ட ஆய்வில், தமிழிசையின் மகன் கோஷம் எழுப்பியது உண்மைதான். ஆனால், குடும்ப பிரச்னை காரணமாக சுகநாதன் கோபப்பட்டார் என்று தமிழிசை விளக்கம் அளித்துள்ளார். இதன் மூலம், மேற்கண்ட பதிவு தவறானது என்று உறுதியாகிறது.
முடிவு:
தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில், மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு தவறானது என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.

Title:தமிழக பா.ஜ.க தலைவர் தமிழிசை மகனுக்கு நக்சல்களுடன் தொடர்பு? – ஃபேஸ்புக் பதிவால் பரபரப்பு
Fact Check By: Praveen KumarResult: False
