
அ.தி.மு.க ஆட்சியில் மணல் கொள்ளையில் மட்டும் ரூ.20 ஆயிரம் கோடி கொள்ளையடித்துள்ளனர் என அமித்ஷா கூறியதாக ஒரு ட்வீட் ஸ்கிரீன்ஷாட் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:

அசல் பதிவைக் காண: Facebook I Archive
தமிழ்நாடு பா.ஜ.க வெளியிட்ட ட்வீட் பதிவின் ஸ்கிரீன்ஷாட் பகிரப்பட்டுள்ளது. அதில், “அதிமுக ஆட்சியில் மணல் கொள்ளையில் மட்டும் ரூ.20 ஆயிரம் கோடி கொள்ளையடித்துள்ளனர் – அமித்ஷா” என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.
இந்த பதிவை விவாதிப்போம் வாங்க! 3.0 என்ற ஃபேஸ்புக் பக்கத்தில் Saravana Kumar என்பவர் 2021 மார்ச் 2 அன்று வெளியிட்டுள்ளார். பலரும் இதை ஷேர் செய்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
ஜெயலலிதா மறைவுக்கு முன்பு நடந்த 2016 சட்டமன்ற தேர்தலின் போது அ.தி.மு.க-வை மிகக் கடுமையாக பா.ஜ.க விமர்சித்து வந்தது. ஜெயலலிதாவை ஊழல்வாதி என்றும், நாட்டிலேயே ஊழல் மிகுந்தது ஜெயலலிதா ஆட்சி என்று எல்லாம் பேசி வந்தனர். ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அ.தி.மு.க – பா.ஜ.க கூட்டணி ஏற்பட்டது. அதன் பிறகு அ.தி.முக-வை ஊழல் கட்சி என்று பா.ஜ.க விமர்சிப்பதை நிறுத்திவிட்டது.

அசல் பதிவைக் காண: dinamalar.com I Archive
இந்த நிலையில், அதிமுக ஆட்சியில் மணல் கொள்ளையில் மட்டும் ரூ.20 ஆயிரம் கோடி கொள்ளையடித்துள்ளனர் என்று அமித்ஷா கூறியதாக தமிழ்நாடு பா.ஜ.க ட்வீட் ஒன்று சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இந்த ட்வீட் எப்போது வெளியிடப்பட்டது என்று குறிப்பிடப்படவில்லை. பலரும் இதை தற்போது தங்கள் சமூக ஊடக பக்கங்களில் ஷேர் செய்து வருகின்றனர். உண்மையில் அமித்ஷா இப்படி பேசினாரா, அல்லது அவரது பெயரால் போலியாக ட்வீட் ஸ்கிரீன்ஷாட் பகிரப்பட்டு வருகிறதா என்று அறிய ஆய்வு செய்தோம்.

பா.ஜ.க கூட்டணியில் அ.தி.மு.க ஒரு அங்கமாக உள்ளது. தேர்தல் தேதி எல்லாம் அறிவிக்கப்படுவதற்கு சில மாதங்களுக்கு முன்பாகவே அரசு விழாவிலேயே பா.ஜ.க-வுடன் கூட்டணி தொடர்வதாக முதல்வர் அறிவித்தார். தற்போதும் அமித்ஷாவுடன் தொகுதி பங்கீடு பற்றிப் பேசி வருகின்றனர். அப்படி இருக்கும்போது 2021ல் அ.தி.மு.க-வை விமர்சித்து அமித்ஷா பேசியிருக்க வாய்ப்பில்லை. முன்பு எப்போதாவது பேசினாரா என்று பார்த்தோம்.
ட்விட்டரில் இந்த பதிவை அப்படியே டைப் செய்து தேடினோம். அப்போது, 2016ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலையொட்டி அமித்ஷா பேசினார் என தமிழக பா.ஜ.க ட்விட்டர் பக்கத்தில் இந்த பதிவு வெளியாகி இருந்தது.
2016 சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க தனித்துப் போட்டியிட்டது. அந்த தேர்தலில் பா.ஜ.க தனியாக களம் கண்டது. ஜெயலலிதா மறைவுக்குப் பிறகுதான் அ.தி.மு.க கூட்டணியில் பா.ஜ.க இணைந்தது. அந்த தேர்தலில் ஜெயலலிதா மிகப்பெரிய அளவில் ஊழல் செய்துள்ளார், கழிப்பறை கட்டியதிலும் ஊழல் செய்துள்ளார் என்று எல்லாம் பா.ஜ.க விமர்சித்திருந்தது. இது பற்றி பலரும் தற்போது பதிவிட்டு வருவதைக் காண முடிகிறது. அந்த பதிவுகளில் இது 2016ம் ஆண்டு வெளியானது என்று தெளிவாகக் குறிப்பிட்டே பதிவிட்டுள்ளனர்.
ஆனால், நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பதிவில் இது 2016ம் ஆண்டு வெளியான பழைய ட்வீட் என்று குறிப்பிடாமல் தற்போது கூறியது போல பதிவிட்டுள்ளனர். இந்த ட்வீட் உண்மையானதுதான். ஆனால் இது 2016ல் வெளியானது என்று குறிப்பிட்டிருந்தால் குழப்பம் ஏற்படுவதைத் தவிர்த்திருக்க முடியும்.
முடிவு:
அ.தி.மு.க ஆட்சியில் மணல் கொள்ளை என்று அமித்ஷா கூறியதாக பகிரப்படும் ட்வீட் தற்போது வெளியானது இல்லை, 2016ல் வெளியிடப்பட்டது என்பதை ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

Title:FACT CHECK: அ.தி.மு.க ஆட்சியில் மணல் கொள்ளை மட்டும் ரூ.20 ஆயிரம் கோடி என்று அமித்ஷா கூறினாரா?
Fact Check By: Chendur PandianResult: Missing Context
