ஓடாத பேருந்தை முன்புறமாக தள்ளிய அன்புமணி: பழைய புகைப்படத்தால் வந்த சர்ச்சை
‘’உலகத்துலயே ஓடாத வண்டியை ஓடவைக்க முன்னாடி நின்னு தள்ளுன ஒரே குரூப் நம்ம மாற்றம் முன்னேற்றம் குரூப் தான்,’’ என்ற தலைப்பில் ஒரு ஃபேஸ்புக் பதிவை காண நேரிட்டது. இதன்பேரில் உண்மை கண்டறியும் சோதனை செய்ய தீர்மானித்தோம்.
தகவலின் விவரம்:
மாற்றம் முன்னேற்றம் அன்புமணி என இந்த புகைப்படத்தின் மேலே எழுதியுள்ளனர். Troll Mafia என்ற ஃபேஸ்புக் குழு இந்த பதிவை வெளியிட்டுள்ளது. இது பார்ப்பதற்கு தற்போது நடந்துள்ள சம்பவம் என்பது போல உள்ளது. இதனை பலரும் வைரலாக ஷேர் செய்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
குறிப்பிட்ட புகைப்படம் உண்மையான ஒன்றா, என கூகுள் உள்ளிட்டவற்றில் ரிவர்ஸ் இமேஜ் தேடல் செய்தோம். ஆனால், எந்த தகவலும் கிடைக்கவில்லை. இதன்பிறகு, ‘’பேருந்தை தள்ளி விட்ட அன்புமணி’’ என்ற கீவேர்ட் பயன்படுத்தி, கூகுளில் தேடினோம். அப்போது, இந்த புகைப்படம் தொடர்பான சில செய்தி ஆதாரங்கள் கிடைத்தன.
இதன்படி, இது 2015ல் நடந்த சம்பவம் என்றும், தர்மபுரியில் தாசரள்ளிக்குச் சென்ற பேருந்து நடுவழியில் நின்றதால் அன்புமணி உள்ளிட்டோர் தள்ளிவிட்டனர் என்றும் தெரியவருகிறது. இதுபற்றி ஒன் இந்தியா வெளியிட்ட செய்தியை படிக்க இங்கே கிளிக் செய்யவும். ஆனால், அந்த செய்தியில் புகைப்படம் சற்று தெளிவாக இல்லை.
எனவே, மீண்டும் வேறு ஏதேனும் தெளிவான புகைப்படம் உள்ள செய்தியை தேடினோம். இதன்படி, newstamil இணையதளம் வெளியிட்ட செய்தி விவரம் கிடைத்தது. இதனை படிக்க இங்கே கிளிக் செய்யவும்.
2015, ஜூன் மாதம் நிகழ்ந்த சம்பவத்தை, தற்போது நடந்தது போல தவறாக சித்தரித்துள்ளனர். அத்துடன், பேருந்தை முன்புறமாக தள்ளிவிட்ட மாற்றம் முன்னேற்றம் குரூப் என்றும் விமர்சித்துள்ளனர். முன்புறத்தில் எதோ பிரச்னை இருக்கவே, அவர்கள் பின்னோக்கி தள்ளிவிட்டு, ஸ்டார்ட் செய்துள்ளனர். இதனை அன்புமணி மட்டும் தள்ளவில்லை. பேருந்து பயணிகள் உள்பட அனைவரும்தான் தள்ளியுள்ளனர். எனவே, அன்புமணியை அரசியல் உள்நோக்கத்துடன் தவறாக சித்தரிக்க வெளியிடப்பட்ட பதிவுதான் இது என உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
உரிய ஆதாரங்களின்படி, பழைய புகைப்படத்தை தற்போது நிகழ்ந்ததுபோல தவறாக சித்தரித்துள்ளனர் என நிரூபிக்கப்பட்டுள்ளது. நமது வாசகர்கள் யாரும் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோ பதிவை மற்றவர்களுக்கு பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.
Title:ஓடாத பேருந்தை முன்புறமாக தள்ளிய அன்புமணி: பழைய புகைப்படத்தால் வந்த சர்ச்சை
Fact Check By: Parthiban SResult: False