FACT CHECK: தமிழ்நாட்டில் தயாரிக்கப்படும் ஓலா இ-ஸ்கூட்டர்களுக்கு சீமான் பெயர் சூட்டப்பட்டதா?

அரசியல் சமூக ஊடகம் தமிழ்நாடு

தனியார் நிறுவனம் ஒன்று தயாரிக்கும் இ-ஸ்கூட்டர்களுக்கு சீமான் என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது என்று ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

அசல் பதிவைக் காண: Facebook I Facebook

நியூஸ் 7 தமிழ் நியூஸ் கார்டு ஒன்று பகிரப்பட்டுள்ளது. அதில், “ஓலா நிறுவனத்தின் அசத்தல் அறிவிப்பு. தமிழ்நாட்டில் தயாரிக்கப்படும் ஓலா இ-ஸ்கூட்டர்களுக்கு சீமான் என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. பவிஷ் அகர்வால் தகவல்” என்று இருந்தது.

இந்த பதிவை ஷாகுல் ஹமீத் என்ற ஃபேஸ்புக் ஐடியை கொண்ட நபர் 2021 செப்டம்பர் 13ம் தேதி பதிவிட்டுள்ளார். பலரும் இதை ஷேர் செய்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

தமிழ்நாட்டில் தயாரிக்கப்படும் இ-ஸ்கூட்டருக்கு சீமான் பெயர் வைக்கப்படும் என்று ஓலா நிறுவனம் கூறியதாக சமூக ஊடகங்களில் வதந்தி பரப்பப்பட்டு வருகிறது. இதற்கு வாய்ப்பே இல்லை என்று தெரிந்தும், நையாண்டி செய்யும் நோக்கில் இதையும் சிலர் பகிர்ந்து வருவதைக் காண முடிந்தது. எனவே, எது உண்மை என்பதை அறிய ஆய்வு செய்தோம்.

நியூஸ் 7 தமிழில் வெளியான உண்மையான நியூஸ் கார்டை அதன் ஃபேஸ்புக் பக்கத்தில் தேடிப் பார்த்தோம். 2021 செப்டம்பர் 13ம் தேதி ஓலா நிறுவனம் தொடர்பான நியூஸ் கார்டை நியூஸ் 7 வெளியிட்டிருந்தது. அதில், “தமிழ்நாட்டில் ஓலா இ-ஸ்கூட்டர் ஆலை வருங்காலத்தில் பெண்களால் முழுமையாக நிர்வகிக்கப்படும் – தலைமை நிர்வாகி பவிஷ் அகர்வால் தகவல்” என்று இருந்தது. இந்த நியூஸ் கார்டை எடுத்து எடிட் செய்திருப்பது தெரிந்தது.

மேலும், நியூஸ் 7 தமிழ் ட்விட்டர் பக்கத்தில், நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட நியூஸ் கார்டு போலியானது என்று குறிப்பிட்டு பதிவிட்டிருப்பதும் நமக்கு கிடைத்தது. அதில், இந்த செய்தியை நியூஸ் 7 தமிழ் வெளியிடவில்லை என்று குறிப்பிட்டிருந்தனர். 

Archive

இதன் அடிப்படையில் நியூஸ் 7 தமிழ் வெளியிட்ட நியூஸ் கார்டை எடிட் செய்து, தவறான தகவல் சேர்த்து சமூக ஊடகங்களில் பகிர்ந்து வருவது உறுதியாகிறது.

முடிவு:

ஓலா நிறுவனத்தின் இ-ஸ்கூட்டர்களுக்கு சீமான் பெயர் சூட்டப்பட்டது என்று  பரவும் நியூஸ் கார்டுகள் போலியானவை என்பதை  ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…

Facebook I Twitter I Google News Channel

Avatar

Title:தமிழ்நாட்டில் தயாரிக்கப்படும் ஓலா இ-ஸ்கூட்டர்களுக்கு சீமான் பெயர் சூட்டப்பட்டதா?

Fact Check By: Chendur Pandian 

Result: Satire

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

Leave a Reply