
ஹரியானாவில் பா.ஜ.க எம்.எல்.ஏ முகத்தில் சாணி அடித்த விவசாயிகள் என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:
ஒருவர் முகத்தில் மை போல ஏதோ பூசப்படும் வீடியோ பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில் “தீ பரவட்டும்… நெற்றியில் சந்தனம் வைப்பது போல் கிட்ட போய் ஹரியானா பிஜேபி எம்.எல்.ஏ முகத்தில் சாணியை பூசி செருப்பால் அடித்த விவசாயிகள்….!! மகிழ்ச்சியுடன் – வாழ்த்துக்கள்!” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த வீடியோவை Sezhian Puthuvai என்பவர் 2020 செப்டம்பர் 25 அன்று பகிர்ந்துள்ளார். பலரும் இதை ஷேர் செய்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
சமீபத்தில் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட விவசாயிகள் சட்டம் தொடர்பாக பஞ்சாப், ஹரியானா மாநிலங்களில் விவசாயிகள் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், ஹரியானா மாநில பா.ஜ.க எம்.எல்.ஏ முகத்தில் விவசாயிகள் சாணி பூசினார்கள் என்று வீடியோ பகிரப்பட்டுள்ளது.
இதன் மூலம் இந்த நிகழ்வு தற்போது நடந்தது போன்ற கருத்து பகிரப்பட்டு வருகிறது. இது உண்மையா என்று ஆய்வு செய்தோம்.
வீடியோ காட்சியைப் புகைப்படமாக மாற்றி ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றித் தேடினோம். கூகுள் தேடலில் நமக்கு எந்த முடிவும் கிடைக்கவில்லை. அதே நேரத்தில் yandex.com ரிவர்ஸ் இமேஜ் தேடலில் யூடியூபில் வெளியிடப்பட்ட இந்த வீடியோ நமக்குக் கிடைத்தது.
2016 நவம்பர் 7ம் தேதி அந்த வீடியோ பதிவேற்றம் செய்யப்பட்டு இருந்தது. இந்தியிலிருந்த தகவலை மொழிமாற்றம் செய்து பார்த்தோம். அப்போது ஹரியானா மாநில பா.ஜ.க நாடாளுமன்ற உறுப்பினர் ராஜ்குமார் ஷைனி மீது இங்க் பூசி அவரைத் தாக்கிய வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.
கடந்த 2016ம் ஆண்டு இந்த வீடியோ பதிவேற்றம் செய்யப்பட்டதன் மூலம் தற்போது நடந்து வரும் விவசாயிகள் போராட்டத்துக்கும் இதற்கும் தொடர்பு இல்லை என்பது உறுதியானது.
முகத்தில் இங்க் பூசித் தாக்குதல் நடத்தியவர்கள் விவசாயிகளா என்று ஆய்வு செய்தோம். இது தொடர்பாக 2016ம் ஆண்டு வெளியான செய்திகளைப் பார்த்தபோது இவர்கள் விவசாயிகள் என்பதற்கான எந்த ஒரு தகவலும் நமக்குக் கிடைக்கவில்லை.
ஜாட் இன மக்கள் இட ஒதுக்கீடு கேட்டு போராடியதை எதிர்த்து கருத்து தெரிவித்த பா.ஜ.க எம்.பி ராஜ் குமார் ஷைனியை ஐந்து பேர் இங்க் பூசி, கன்னத்தில் அறைந்து தாக்கினர் என்று இந்தியா டுடே வெளியிட்டிருந்த செய்தி கிடைத்தது.
டைம்ஸ் ஆஃப் இந்தியா வெளியிட்டிருந்த செய்தியில் “பா.ஜ.க எம்.பி-யை தாக்கிய ஐந்து பேர் மீது கொலை முயற்சி வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இவர்கள் அனைவரும் ஹைசர் என்ற கிராமத்தைச் சேர்ந்தவர்கள். அதில் தாக்குதலைத் திட்டமிட்ட சந்தீப் என்பவர் வழக்கறிஞராக தொழில் செய்து வருகிறார். மற்றவர்கள் அனைவரும் மாணவர்கள். இவர்கள் அனைவரும் ஆசாத் கிசான் மிஷன் மற்றும் பாரதிய கிசான் பிரிகேட் அமைப்பைச் சார்ந்தவர்கள் என்று போலீசார் கூறியதாக” எனக் குறிப்பிடப்பட்டு இருந்தது.
இதன் மூலம், இவர்கள் யாரும் விவசாயிகள் இல்லை என்பதும் விவசாயிகளுக்கு ஆதரவான அமைப்பைச் சேர்ந்தவர்கள் மட்டுமே என்பதும் உறுதி செய்யப்படுகிறது.
நம்முடைய ஆய்வில்,
ஹரியானா பா.ஜ.க எம்.எல்.ஏ முகத்தில் சாணி பூசப்படவில்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்த வீடியோ 2016ம் ஆண்டு சாதி இட ஒதுக்கீடு தொடர்பான பிரச்னை காரணமாக பா.ஜ.க எம்.பி முகத்தில் இங்க் பூசப்பட்ட போது எடுக்கப்பட்டது என்பது உறுதியாகி உள்ளது.
இந்த வீடியோவுக்கும் தற்போது ஹரியானாவில் நடந்து வரும் விவசாயிகள் போராட்டத்துக்கும் எந்த தொடர்பும் இல்லை என்பது உறுதியாகி உள்ளது.
2016ம் ஆண்டு எம்.பி மீது நடந்த தாக்குதலை திட்டமிட்டவர் வழக்கறிஞர் என்பதும் மற்ற நான்கு பேரும் மாணவர்கள் என்பதும் தெரியவந்துள்ளது.
அதே நேரத்தில் இவர்கள் விவசாயிகள் அமைப்பைச் சேர்ந்தவர்கள் என்பதும் உறுதியாகி உள்ளது.
இதன் அடிப்படையில் 2016ம் ஆண்டு வீடியோவை தற்போது நடந்தது போன்று சிறிது உண்மையுடன் பல பொய்யான தகவல் சேர்த்து பகிர்ந்திருப்பது உறுதியாகிறது.
முடிவு:
தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில், மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவில் இடம் பெற்றிருப்பது நான்கு ஆண்டுகள் பழைய வீடியோ என்பதும் அந்த பதிவில் உள்ள தகவல்கள் பெரும்பாலும் தவறானது என்றும் நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

Title:ஹரியானாவில் பா.ஜ.க எம்.எல்.ஏ முகத்தில் சாணி அடித்த விவசாயிகள்; உண்மை என்ன?
Fact Check By: Chendur PandianResult: Partly False
