இந்த புகைப்படத்தில் இருப்பவர் ஃபேஷன் டிசைனர் கிர்சாய்தா ரோட்ரிகஸ் இல்லை!

சமூக ஊடகம் மருத்துவம் I Medical

‘’இந்த புகைப்படத்தில் இருப்பவர் பிரபல ஃபேஷன் டிசைனர், புற்றுநோயில் பாதிக்கப்பட்டவர்,’’ என்று கூறி ஒரு தகவல் ஃபேஸ்புக், வாட்ஸ்ஆப்பில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்: 

Facebook Claim LinkArchived Link

செப்டம்பர் 25, 2020 அன்று பகிரப்பட்டுள்ள இந்த பதிவில், பெண் ஒருவர் புற்றுநோய் சிகிச்சையில் உள்ளதைப் போன்ற புகைப்படத்தை இணைத்து, அதன் மேலே, ‘’அவர் பிரபல ஃபேஷன் டிசைனர். நிறைய வசதிகள் இருந்தும் புற்றுநோய் பாதித்து மருத்துவமனையில் தனிமையில் வாடி, இறந்து போனார்,’’ என்று விரிவாக எழுதியுள்ளனர்.

உண்மை அறிவோம்:
இந்த ஃபேஸ்புக் பதிவில் கூறியுள்ள தகவல் உண்மையானதா என்ற சந்தேகத்தில் விவரம் தேட தொடங்கினோம். முதலில், இந்த புகைப்படத்தில் இருப்பவர் யார் என தேடியபோது, நீண்ட நேரம் முயற்சித்தும் இவர் யாரென்ற விவரம் கிடைக்கவில்லை. ஆனால், இந்த புகைப்படத்தை வைத்து பல்வேறு மொழிகளிலும் இதே கதையை பலரும் பகிர்ந்து வருவதைக் காண முடிந்தது.

இதில் ஒரு இணையதளத்தில், Kirjeda Rodriguez என்ற பெயரை குறிப்பிட்டு, இதே தகவல் மற்றும் புகைப்படத்தை ஆங்கிலத்தில் பகிர்ந்திருந்தனர். 

இதன்பேரில், அப்படி யாரேனும் இருந்தாரா என விவரம் தேடியதில், அவரது முழு பெயர் Kyrzayda Rodriguez என அறிந்தோம். மேலும், அவரது தோற்றம் நாம் பார்த்த ஃபேஸ்புக் பதிவில் இருந்த புகைப்படத்தோடு ஒத்துப் போகவில்லை. அது வேறு ஒன்றாக உள்ளது.

டொமினிகன் ரிபப்ளிக் நாட்டைச் சேர்ந்த கிர்சாய்தா ரோட்ரிகஸ், ஒரு இன்ஸ்டாகிராம் பிரபலம் ஆவார். மாடலிங் மற்றும் ஃபேஷன் டிசைன் தொழிலில் ஈடுபட்டிருந்தார். அவர், கடந்த ஆகஸ்ட் மாதம் புற்றுநோய் பாதித்து, சிகிச்சை எடுத்துக் கொண்டார். அப்போது நேர்ந்த அனுபவத்தை, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்திருந்தார் என்று கூறி, பல்வேறு மொழிகளில் செய்தி பகிரப்பட்டு வருகிறது. அதேசமயம், அவர் செப்டம்பர் மாதம் உயிரிழந்துவிட்டார்.

Standardmedia.co.ke Link

ஆனால், இப்படி அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தகவல் பகிர்ந்துள்ளாரா என விவரம் தேடியபோது, இல்லை என்றே பதில் கிடைத்தது.

Kyrzayda Instagram Link

எனவே, கிர்சாய்தா புகைப்படம் என்று கூறி வேறொருவரின் புகைப்படத்தை இணைத்து, அவரது பெயரில் சிலர் வேண்டுமென்றே ஒரு தகவலை உருவாக்கி பகிர்ந்து வருவதாக, தெரியவருகிறது.

இது மட்டுமின்றி, குறிப்பிட்ட ஃபேஸ்புக் பதிவில் உள்ள புகைப்படத்தில் இருக்கும் நபர் பற்றியும் நமக்கு விவரம் கிடைத்துள்ளது. அவர், வேறு ஒருவர் என்பதோடு, மார்பக புற்றுநோயால் பாதிக்கப்பட்டு, அதில் இருந்து மீண்டு வந்தவர் ஆவார். அவரே தனது வாழ்க்கைப் போராட்டம் பற்றி பிளாக்கில் எழுதியுள்ளார்.

Blog Link 1 I Blog Link 2

எனவே, டிசைனர் கிர்சாய்தா கூறாத ஒன்றை அவரது பெயரில் சிலர் தன்னிச்சையாக உருவாக்கி பகிர்ந்து வருகின்றனர். அத்துடன், அவரது உண்மை புகைப்படத்தை பயன்படுத்தாமல், புற்றுநோய் பாதித்த வேறு ஒரு பெண்ணின் புகைப்படத்தை மேற்கோள் காட்டுவதாகவும், நமக்கு சந்தேகமின்றி தெளிவாகிறது. 

முடிவு:
உரிய ஆதாரங்களின்படி நாம் ஆய்வு செய்த ஃபேஸ்புக் பதிவில் உள்ள புகைப்படம் தவறானது என நிரூபித்துள்ளோம். நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், +91 9049044263 என்ற வாட்ஸ்ஆப் எண்ணில் தகவல் தெரிவியுங்கள்.

Avatar

Title:இந்த புகைப்படத்தில் இருப்பவர் ஃபேஷன் டிசைனர் கிர்சாய்தா ரோட்ரிகஸ் இல்லை!

Fact Check By: Pankaj Iyer 

Result: Misleading

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •