ஸ்டாலின் டீ குடித்ததால் கடையை மூடிய உரிமையாளர் என்று பரவும் வதந்தி!

அரசியல் சமூக ஊடகம் தமிழ்நாடு

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் டீ குடித்ததால் கடை விளங்கவில்லை என்று கடையை நிரந்தரமாக மூடிய டீ கடை உரிமையாளர் என்று ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive

மு.க.ஸ்டாலின் டீ குடிக்கும் புகைப்படத்துடன் கூடிய ஏபிபி நாடு வெளியிட்டது போன்று நியூஸ் கார்டு பகிரப்பட்டுள்ளது. அதில் “ஸ்டாலின் டீ குடித்ததில் இருந்து கடை விளங்கவில்லை என்று கடையை நிரந்தரமாக மூடிய டீ கடை முதலாளி” என்று இருந்தது. இந்த பதிவை Adalji Kalamji என்ற ஃபேஸ்புக் ஐடி கொண்ட நபர் 2022 பிப்ரவரி 16ம் தேதி பதிவிட்டுள்ளார். இவரைப் போல பலரும் இதை பகிர்ந்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியே செல்லும் போது பொது இடங்களில் டீ, உணவு உட்கொள்வதை வழக்கமாக வைத்துள்ளார். இந்த நிலையில் ஸ்டாலின் டீ குடித்ததால் கடை விளங்கவில்லை என்று கடை உரிமையாளர் கடையை மூடிக்கொண்டு சென்றுவிட்டார் என்று நியூஸ் கார்டு பகிரப்பட்டுள்ளது. ஆனால், இந்த கடை எங்கு உள்ளது, எப்போது நடந்தது என்று எதுவும் இல்லை. மிகவும் வன்மத்துடன் நியூஸ் கார்டு உருவாக்கப்பட்டிருப்பது போல இருந்தது. எனவே, இது தொடர்பாக ஆய்வு செய்தோம்.

முதலில் ஏபிபி நாடு இப்படி ஏதும் செய்தி வெளியிட்டதா என்று பார்த்தோம். ஆனால் அவர்கள் இந்த நியூஸ் கார்டை வெளியிடவில்லை. மேலும், இந்த நியூஸ் கார்டு போலியானது என்று அவர்கள் சமூக ஊடக பக்கங்களில் “FAKE” முத்திரையுடன் பதிவு வெளியிட்டிருந்தனர்.

இந்த புகைப்படம் எங்கு எடுக்கப்பட்டது என்று ஆய்வு செய்தோம். பல்வேறு கீ வார்த்தைகளைப் பயன்படுத்தி கூகுளில் தேடிய போது, மு.க.ஸ்டாலின் இந்த புகைப்படத்தை 2021 நவம்பர் 28ம் தேதி ட்வீட் செய்திருப்பது தெரிந்தது. அதில், “திருவள்ளூர் மாவட்டத்தில் கனமழையால் பாதிக்கப்பட்ட இடங்களை மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்கள் பார்வையிட்டு, ஆவடி மாநகராட்சி மூர்த்தி நகர் பூவிருந்தவல்லி நெடுஞ்சாலையில் சாலையோர கடையில் தேநீர் அருந்தினார்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

Archive

இந்த புகைப்படம் ஆவடி பகுதியில் எடுக்கப்பட்டது என்பதால், ஆவடியில் பணியாற்றி வரும் ஊடகத் துறை நண்பர்களிடம் இது பற்றிக் கேட்டோம். இப்படி ஏதும் செய்தி உள்ளதா என்று விசாரித்த போது, அப்படி எதுவும் இல்லை. இது வெறும் வதந்தி என்று உறுதி செய்தனர்.

இந்த ஆதாரங்கள் அடிப்படையில் மு.க.ஸ்டாலின் மீது உள்ள வன்மம் காரணமாக, ஸ்டாலின் டீ குடித்ததால் கடை விளங்காமல் போனது என்று போலியான நியூஸ் கார்டை உருவாக்கிப் பகிர்ந்து வருவது உறுதியாகிறது. இதன் அடிப்படையில் இந்த நியூஸ் கார்டு போலியானது என்று உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

ஸ்டாலின் டீ குடித்ததால் கடை விளங்காமல் போனது என்று கடையை மூடிய டீக்கடை உரிமையாளர் என்று பரவும் நியூஸ் கார்டு விஷமத்தனமானது உண்மையற்றது என்பதை ஃபேக்ட் கிரஸண்டோ உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…

Facebook I Twitter I Google News Channel

Avatar

Title:ஸ்டாலின் டீ குடித்ததால் கடையை மூடிய உரிமையாளர் என்று பரவும் வதந்தி!

Fact Check By: Chendur Pandian 

Result: False