
சொந்த ஊர் திரும்பிய வடஇந்தியர்கள் மோடியின் உருவ பொம்மையை செருப்பால் அடித்ததாக, ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:
மோடி உருவ பொம்மையை சுற்றி அமர்ந்து பெண்கள் செருப்பால் அடிக்கும் வீடியோவை பகிர்ந்துள்ளனர். நிலைத் தகவலில், “விழித்துகொண்ட ஊருக்கு போன வடக்கன் லடுக்கிகள்…” என்று குறிப்பிட்டுள்ளனர். இந்த வீடியோவை, Anbarasu Natarajan என்பவர் 2020 மே 25ம் தேதி வெளியிட்டுள்ளார். பலரும் இதை ஷேர் செய்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
பழைய வீடியோ, புகைப்படங்களை எடுத்து இப்போது நடந்தது போல் சமூக ஊடகங்களில் பகிர்வது அதிகமாக உள்ளது. ஊருக்கு சென்ற வடக்கன் என்று குறிப்பிட்டிருப்பதன் மூலம் சொந்த ஊர் திரும்பிய வட இந்தியப் புலம்பெயர் தொழிலாளர்கள் மோடி உருவ பொம்மையை அடித்ததாக இதில் குறிப்பிட்டுள்ளனர்.
வீடியோவில் என்ன பேசுகிறார்கள் என்று நம்முடைய ஃபேக்ட் கிரஸண்டோ இந்தி பிரிவிடம் கேட்டபோது, “இவர்கள் பேசுவது பஞ்சாபி. தங்களின் எல்லா பிரச்னைக்கும் காரணம் மோடி என்று கூறி போராட்டம் நடத்துகிறார்கள்” என்றனர். புலம்பெயர் தொழிலாளர்கள் என்று வீடியோவில் எங்கும் இல்லை என்றும் தெரிவித்தனர்.
இதைத் தொடர்ந்து வீடியோ காட்சிகளை புகைப்படங்களாக மாற்றி ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றித் தேடினோம். அப்போது, இந்த வீடியோ பல ஆண்டுகளாக சமூக ஊடகங்கள், யூடியூபில் பதிவேற்றம் செய்யப்பட்டு வந்திருப்பதைக் காண முடிந்தது. ஆனால் இது எங்கே எப்போது எடுக்கப்பட்டது என்று தெளிவான தகவல் நமக்கு கிடைக்கவில்லை.
பஞ்சாப் பெண்கள், மோடி உருவபொம்மை என கீ வார்த்தைகள் அடிப்படையில் தேடினோம். அப்போது 2018ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 3ம் தேதி யூடியூபில் வெளியிடப்பட்ட வீடியோ கிடைத்தது. அதில், கோபம் கொண்ட பஞ்சாபி பெண்கள் மோடியின் உருவபொம்மையை செருப்பால் அடித்தார்கள் என்று குறிப்பிட்டிருந்தனர்.
பஞ்சாபியில் போராட்டம் நடத்துவதாலும், பஞ்சாபி பெண்கள் என்று யூடியூப்பில் குறிப்பிட்டிருப்பதன் மூலம் இது 2018ல் பஞ்சாபில் நடந்திருக்கலாம் என்று தெரிகிறது.
நம்முடைய ஆய்வில்,
இந்த வீடியோ பல ஆண்டுகளாகவே யூடியூபில் பலராலும் பதிவேற்றம் செய்து பகிரப்பட்டு வருவது உறுதி செய்யப்பட்டுள்ளது.
2018ம் ஆண்டு ஏப்ரல் 3ம் தேதி யூடியூபில் பதிவேற்றம் செய்யப்பட்ட பழைய வீடியோ நமக்கு கிடைத்துள்ளது.
அந்த வீடியோவில் தங்கள் வாழ்வாதாரத்தை அழித்த மோடி என்று பெண்கள் கோஷம் எழுப்பியபடி போராட்டம் நடத்துவது தெரியவந்துள்ளது.
கொரோனா ஊரடங்கு, தொழிலாளர்கள் புலம்பெயர்தல் என்பது 2020ம் ஆண்டு கொரோனா காலத்தில் நடந்தது. எனவே, சொந்த ஊர் திரும்பிய வட இந்திய தொழிலாளர்கள் மோடி உருவ பொம்மையை தாக்கியதாக பரவும் தகவல் தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில், மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு உண்மையான வீடியோவுடன் தவறான தகவலை சேர்த்து வெளியிட்டிருப்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049044263) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

Title:புலம்பெயர் தொழிலாளர்கள் மோடி உருவபொம்மையை செருப்பால் அடித்தார்களா?
Fact Check By: Chendur PandianResult: Partly False
