ஃபோர்டு நிறுவனம் இந்தியாவில் உற்பத்தியை நிறுத்த தி.மு.க அரசு காரணமா?
ஃபோர்டு இந்தியா நிறுவனம் தன்னுடைய செயல்பாட்டை நிறுத்திக் கொள்வதற்கு தி.மு.க அரசு தான் காரணம் என்பது போன்று பதிவுகள் சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகின்றன. இது பற்றி ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:
உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive
சென்னை மறைமலைநகரில் உள்ள ஃபோர்டு தொழிற்சாலையில் வெளியான கடைசி காருக்கு ஊழியர்கள் கண்ணீர் மல்க விடை கொடுத்தது தொடர்பாக புதிய தலைமுறை வெளியிட்ட நியூஸ் கார்டு பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், "இந்த விடியல் ஆட்சியில் இது போன்ற இன்னும் எத்தனை தொழிற்சாலைகளுக்கு மூடு விழா நடத்த போரார்களா தெரியவில்லை... #விடியல்_பரிதாபங்கள்" என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த பதிவை Bjp Gunalan என்ற ஃபேஸ்புக் ஐடி கொண்ட நபர் 2022 ஜூலை 21ம் தேதி பதிவிட்டுள்ளார். இவரைப் போல பலரும் இந்த பதிவை தங்கள் ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டு வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
ஃபோர்டு இந்தியா நிறுவனம் சென்னை அருகே மறைமலைநகரில் கார் உற்பத்தி தொழிற்சாலையை அமைத்தது. அதன் பிறகு குஜராத் மாநிலத்தில் ஒரு தொழிற்சாலையை அமைத்தது. தமிழ்நாட்டில் அமைக்கப்பட்ட தொழிற்சாலையை விட அது மிகவும் நவீனமானது என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் இந்தியாவில் தன்னுடைய கார் உற்பத்தியை நிறுத்திக்கொள்வதாக ஃபோர்டு இந்தியா கடந்த ஆண்டு செப்டம்பர் அறிவிப்பை வெளியிட்டது.
அதன் அடிப்படையில் சென்னையில் உள்ள ஃபோர்டு தொழிற்சாலை 2022 ஜூலை 31ம் தேதி மூடப்படும் என்று செய்திகள் வெளியாகின. அதே நேரத்தில் குஜராத்தில் உள்ள ஃபோர்டு தொழிற்சாலையும் மூடப்படுகிறது. ஃபோர்டு நிறுவனம் இந்தியாவை விட்டு வெளியேறவில்லை. உற்பத்தியை மட்டும் நிறுத்தியுள்ளது. வெளிநாட்டில் உற்பத்தியாகும் ஃபோர்டு கார்களை இந்தியாவில் இறக்குமதி செய்து விற்பனை செய்யப்போவதாக ஃபோர்டு நிறுவனம் அறிவித்துள்ளது. இதனால் வாடிக்கையாளர்களுக்கு கவலையில்லை என்று அந்த நிறுவனம் கூறியிருந்தது. ஆனால், 4000க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பாதிக்கப்படுவார்கள் என்றும், ஃபோர்டு நிறுவனத்தை நம்பி செயல்பட்டு வந்த பல சிறு நிறுவனங்கள் பாதிக்கப்படும் என்றும் செய்திகள் கூறுகின்றன.
இந்த நிலையில் தி.மு.க ஆட்சி அமைந்ததால்தான் ஃபோர்டு நிறுவனம் தன்னுடைய உற்பத்தியை நிறுத்தியது போன்று பா.ஜ.க மற்றும் அதிமுக தொண்டர்கள் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர். இந்த ஆலை மூடப்பட்டது ஸ்டாலின் அரசின் சாதனை என்று திட்டி வருகின்றனர்.
தி.மு.க ஆட்சிதான் காரணம் என்றால் மறைமலை நகரில் செயல்படும் ஆலையில் மட்டும்தான் உற்பத்தியை நிறுத்த வேண்டும். ஏன் குஜராத்தில் உற்பத்தியை நிறுத்தியது என்ற கேள்வி எழுந்தது. குஜராத் ஆலை மூடப்படுவதற்கு ஸ்டாலின் அரசு காரணமாக இருக்க முடியாது. அதற்கு குஜராத் அரசு காரணம் என்று பா.ஜ.க-வினர் கூறுகிறார்களா, அல்லது இரண்டு இடங்களிலும் மூடப்படுவதற்கு மத்திய அரசு காரணம் என்கிறார்களா என்று பல்வேறு சந்தேகங்களை இந்த பதிவு ஏற்படுத்தியது. எனவே, இது தி.மு.க ஆட்சி அமைந்ததால் தான் மூடப்பட்டதா என்று பார்த்தோம்.
இது தொடர்பாக தேடிய போது கடந்த 2021ம் ஆண்டு செப்டம்பர் ஃபோர்டு இந்தியா வெளியிட்ட அறிவிப்பு நமக்கு கிடைத்தது. அதில், "ஃபோர்டு தன்னுடைய இந்திய செயல்பாடுகளை மறுகட்டமைப்பு செய்கிறது: சென்னை மற்றும் சனாந்தில் செயல்பட்டு வரும் வாகன உற்பத்தியை நிறுத்துகிறது. ஏற்றுமதி செய்வதற்காக சனாந்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் கார் உற்பத்தி 2021 நான்காவது காலாண்டில் நிறுத்தப்படுகிறது. சென்னையில் உள்ள இன்ஜின் மற்றும் வாகன அசெம்பிளி பிளான்ட் 2022 இரண்டாவது காலாண்டில் நிறுத்தப்படுகிறது. ஏற்றுமதிக்கான இன்ஜின் உற்பத்தி தொடரும்" என்று குறிப்பிட்டிருந்தது. இதன் மூலம் ஃபோர்டு இந்தியா நிறுவனம் தன்னுடைய உற்பத்தியைச் சென்னையில் மட்டும் நிறுத்தவில்லை, குஜராத்திலும் நிறுத்தியுள்ளது என்பது தெளிவாகிறது.
உண்மைப் பதிவைக் காண: dnaindia.com I Archive 1 I vikatan.com I Archive 2
தொடர்ந்து பார்த்த போது, இந்தியாவில் 200 கோடி டாலர் அளவுக்கு இந்தியாவில் இழப்பு ஏற்பட்டுள்ளதால் இந்த முடிவை எடுத்ததாக ஃபோர்டு இந்தியா நிறுவனத்தின் தலைவர் ஜிம் ஃபோர்லி கூறியதாக தி எக்கனாமிக் டைம்ஸ் உள்ளிட்ட இதழ்களில் வெளியான செய்திகள் நமக்கு கிடைத்தன.
மேலும், ஃபோர்டு இந்தியா நிறுவனத்தின் கார்கள் விற்பனை குறைவு, கொரோனா காலம் காரணமாக பாதிப்பு என்று பல்வேறு காரணங்களால் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக ஃபோர்டு நிறுவனம் தரப்பில் கூறப்படுவதாக அந்த செய்திகளில் குறிப்பிட்டிருந்தனர். மேலும், குஜராத்தில் ஆலை மூடப்பட நிலையில் அதை டாடா நிறுவனம் வாங்க அம்மாநில அரசு ஒப்புதல் அளித்திருப்பதாகவும் செய்திகள் கிடைத்தன.
உண்மைப் பதிவைக் காண: economictimes I Archive
இதே போன்று சென்னை ஆலையை விற்பனை செய்ய அல்லது வேறு நடவடிக்கை எடுக்க முயற்சி செய்யப்பட்டது. இது தொடர்பாக தமிழ்நாடு அரசும் ஆலோசனை மேற்கொண்டது தொடர்பான செய்திகள் நமக்கு கிடைத்தன. இங்கு ஃபோர்டு நிறுவனம் மின்சார கார் தயாரிக்க நடவடிக்கை எடுக்கப்போவதாக பேச்சு வார்த்தை நடந்தது. ஆனால், அதுவும் தோல்வி அடைந்தது என்று கூறப்படுகிறது. அதனால் சென்னை ஆலை என்ன ஆகப்போகிறது என்ற கேள்வி எழுந்துள்ளது.
நம்முடைய ஆய்வில், ஃபோர்டு இந்தியா தன்னுடைய உற்பத்தியை தமிழ்நாடு, குஜராத் என இரண்டு மாநிலங்களிலும் நிறுத்தியிருப்பது தெளிவாகிறது. இந்த அறிவிப்பை 2021 செப்டம்பர் 9ம் தேதி அது வெளியிட்டிருப்பதும் உறுதியாகியுள்ளது. 200 கோடி டாலர் அளவுக்கு நஷ்டம் ஏற்பட்டதால் இந்த முடிவெடுக்கப்பட்டதாக ஃபோர்டு அறிவித்துள்ளது. இதன் அடிப்படையில் ஃபோர்டு இந்தியா நிறுவனம் தன்னுடைய உற்பத்தியை நிறுத்த தி.மு.க அரசு காரணம் என்று கூறப்படும் தகவல் தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
தமிழ்நாட்டில் ஃபோர்டு ஆலை மூடப்படுவதற்கு தி.மு.க அரசுதான் காரணம் என்ற வகையில் பகிரப்படும் தகவல் தவறானது என்றும், குஜராத்திலும் ஃபோர்டு தொழிற்சாலை மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது என்பதையும் தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…
Facebook I Twitter I Google News Channel
Title:ஃபோர்டு நிறுவனம் இந்தியாவில் உற்பத்தியை நிறுத்த தி.மு.க அரசு காரணமா?
Fact Check By: Chendur PandianResult: Missing Context