
‘’திருமாவளவன் ஆர்எஸ்எஸ் ஆதரவாகப் பேசும் காட்சி,’’என்ற தலைப்பில் ஃபேஸ்புக்கில் வைரலாகப் பகிரப்படும் ஒரு வீடியோவின் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம்.
தகவலின் விவரம்:
Facebook Link | Archived Link |
உலக பிராமணர் ஒற்றுமை எனும் ஃபேஸ்புக் ஐடி மே 26, 2019 அன்று இந்த பதிவை பகிர்ந்துள்ளது. இதில், திருமாவளவன் பொதுக்கூட்டம் ஒன்றில் பேசும் காட்சி இடம்பெற்றுள்ளது. வெளிச்சம் டிவியின் அதிகாரப்பூர்வ லோகோவும் அதில் உள்ளது. ஆர்எஸ்எஸ் இயக்கத்தில் உறுப்பினர்களாக உள்ளவர்கள் எவ்விதம் செயல்படுகிறார்கள் என்பது திருமாவளவன் இந்த வீடியோவில் பேசுகிறார். இதனை உண்மையிலேயே ஆர்எஸ்எஸ் இயக்கத்தை திருமாவளவன் பாராட்டிப் பேசுவது போல நினைத்து பலரும் வைரலாக ஷேர் செய்கின்றனர்.
உண்மை அறிவோம்:
குறிப்பிட்ட வீடியோ சுமார் 1.32 நிமிடங்கள் ஓடுகிறது. திருமாவளவனின் அரசியல் நிலைப்பாட்டிற்கும் இதில் பேசுவதற்கும் முரண்பாடாக உள்ளது. இந்த வீடியோவின் முழு வீடியோ ஆதாரம் கிடைக்குமா என தகவல் தேடினோம். விடுதலை சிறுத்தைகள் கட்சியின் அதிகாரப்பூர்வ ஊடகமான வெளிச்சம் தொலைக்காட்சியின் ஃபேஸ்புக் பக்கத்தில் எதுவும் கிடைக்கவில்லை. இதையடுத்து, அந்த தொலைக்காட்சியின் யூ டியுப் பக்கத்தில் விவரம் தேடினோம். அப்போது இதுதொடர்பான வீடியோ ஆதாரம் ஒன்று கிடைத்தது. அதனை கீழே இணைத்துள்ளோம்.
இதன்படி, அக்டோபர் 15, 2018 அன்று பதிவிடப்பட்டுள்ள இந்த வீடியோவில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தொண்டர்களிடையே தொல்.திருமாவளவன் பேசுகிறார்.
அதில், ‘’ஆர்.எஸ்.எஸ் இயக்கத்துடைய மாநில தலைவர் யார் என்று உங்களுக்கு தெரியுமா? மதுரை மாவட்ட தலைவர் யார் என்று உங்களுக்கு தெரியுமா? ஏன் அதன் தேசியத் தலைவர் பெயர் உங்களுக்கு தெரியுமா? அவர்கள் தங்களுடைய பெயரை போஸ்டர்களில், துண்டு அறிக்கையில் அச்சிட்டது உண்டதா? என்றைக்காவது மேடையேறி பேசியது உண்டா? தன் தலைவர் பின்னால் நின்றால் தான் தன்னுடைய முகம் தொலைக்காட்சியில் தெரியும் என மேடையில் முண்டியடித்து ஏறியதுண்டா? நான் ஏன் பின்னால் உட்கார வேண்டும், நானும் முன்னால் தான் உட்காருவேன் என அவர்களில் யாராவது முண்டியடித்து முன் வரிசையில் உட்கார்ந்ததை பார்த்ததுண்டா? ஆனால், அர்ப்பணிப்போடு பணியாற்றுகிறார்கள்…
இன்றொன்றையும் சொல்கிறேன், அவர்கள் இந்தியா முழுவதும் 13,000 பேர்கள் இருக்கிறார்கள் ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தில் இன்றைய புள்ளி விவரத்தின்படி, அந்த 13,000 பேரும் திருமணம் செய்து கொள்ளாமல் இருக்கிறார்கள். முழு நேர பணியாளர்களாக இருக்கிறார்கள். அவர்களுக்கு எம்.எல்.ஏ ஆசை கிடையாது, எம்பி ஆசை கிடையாது, மந்திரி ஆசை கிடையாது, அவர்களுக்கு விளம்பர ஆசை கிடையாது, ஆனால் தம் வாழ்வை முழுமையாக ஒப்படைத்துக் கொண்டு பணியாற்றுகிறார்கள். அந்த தியாகத்தை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். எதற்காக? அவர்களுக்கு ஒரு நோக்கம் இருக்கிறது. ஒரு கடமை உணர்ச்சி இருக்கிறது. அவர்கள் உள்வாங்கிக் கொண்ட கொள்கையின் மீது மிகப்பெரிய பிடிப்பு இருக்கிறது. இன்னும் சொல்லப் போனால் வெறி இருக்கிறது. அப்படிப்பட்ட வெறியர்களில் ஒருவன்தான் காந்தியை கொன்ற நாதுராம் கோட்சே என்பவன்,’’ என திருமாவளவன் பேசுகிறார். இதில் கோட்சே பற்றி பேசுவதை மட்டும் தனியாக எடிட் செய்துவிட்டு, மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவில் பகிர்ந்துள்ளனர்.
முழு வீடியோவையும் பார்க்கும்போது, திருமாவளவன் ஆர்எஸ்எஸ் இயக்கம் பற்றி வஞ்சப் புகழ்ச்சி செய்வதைக் காண முடிகிறது. தேசநலன் என்ற பெயரில் ஆர்எஸ்எஸ் அரசியல் படுகொலைகள் செய்வதாக அவர் அதில் குற்றம்சாட்டுகிறார்.
இதனை முழுதாக வெளியிடாமல் எடிட் செய்து, தங்களது அரசியல் தேவைக்கேற்ப சிலர் பகிர்ந்து வருவதாக, இதன்மூலம் உறுதியாகிறது. எனவே, மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவில் பாதி உண்மை மற்றும் பாதி தவறான தகவல் உள்ளதாக உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
உரிய ஆதாரங்களின்படி நாம் ஆய்வு மேற்கொண்ட வீடியோவில் பாதி உண்மை, பாதி தவறான தகவல் உள்ளதாக, நிரூபிக்கப்பட்டுள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை உறுதிப்படுத்தாமல் மற்றவர்களுக்கு பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.

அவரு வஞ்ச புகழ்ச்சி செஞ்சாறா இல்லியா, எதுக்கு சொன்னார் இந்த கஜவை எல்லாம் எனக்கில்லை. அவர் எப்படி சொன்னாலும் உண்மை இதுதான். சொந்த விருப்பதினால் வருவதால் தான் ஸ்வயம்சேவக் என்று அழைக்கிறோம். யாரும் பேருக்காக புகழுக்காக அலைவதில்லை. ஏனெனில் குவாட்டரும் பிரியாணியும் கொடுத்து அழைத்த வரபடுபவர்கள் இல்ல ஆர்எஸ்எஸின் ஸ்வயம்சேவக்