
‘’பாலியல் வன்முறை, துன்புறுத்தல் காரணமாக கோபி மீது அதிரடி நடவடிக்கை,’’ என்ற தலைப்பில் வைரலாகி வரும் ஒரு செய்தியை ஃபேஸ்புக்கில் காண நேரிட்டது. இதுபற்றி உண்மை கண்டறியும் சோதனை செய்ய தீர்மானித்தோம்.
தகவலின் விவரம்:

Facebook Link | Archived Link 1 | News Link |
Sathiyam TV எனும் ஃபேஸ்புக் ஐடி இந்த செய்தியை வெளியிட்டுள்ளது. இது, சத்தியம் டிவி இணையதளத்தில் வெளியான செய்தியின் லிங்க் ஆகும். அந்த செய்தியின் தலைப்பில், ‘’என்ன ஆச்சு இந்த கோபிக்கு..! பாலியல் வன்முறை..! துன்புறுத்தல்..! கோபி மீது அதிரடி நடவடிக்கை..!,’’ என எழுதியுள்ளனர்.
செய்தியின் உள்ளே, ‘’கல்யாண வீடு சீரியலில் சமீபத்தில், பாலியல் வன்முறை மற்றும் பெண்களின் மீதான துன்புறுத்தல்கள் நடைபெறுவது போன்ற காட்சிகள் இடம்பெற்றிருந்தது. இதனைப்பார்த்து முகம் சுளித்த பார்வையாளர்கள், பிசிசிஐ-ல் புகார் தெரிவித்திருந்தனர்.இதற்கு விளக்கம் கேட்டு அந்த தொலைக்காட்சிக்கும், திரு பிக்சர்ஸிற்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இந்த நோட்டீசிற்கு அவர்கள் கடந்த மாதம் விளக்கம் அளித்துள்ள நிலையில், அதனை பிசிசிஐ ஏற்க மறுத்துள்ளது. மேலும், ரூ.2.5 லட்சம் அபராதம் விதித்த பிசிசிஐ, இந்த காட்சிகளை ஒளிபரப்பியதற்கு வருந்துகிறோம் என்று 30 விநாடிகளுக்கு ஒளிபரப்புமாறு உத்தரவிட்டுள்ளது,’’ என்று எழுதியுள்ளனர்.
இந்த செய்தியை உண்மை என நம்பி பலரும் வைரலாக ஷேர் செய்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
மேற்கண்ட செய்தியின் தலைப்பை பார்க்கும்போது, எதோ கோபி கதாபாத்திரத்தில் நடிக்கும் திருமுருகன் பாலியல் குற்றம் செய்துவிட்டதைப் போல தோன்றுகிறது. ஆனால், செய்தியின் உள்ளே கவனம் செலுத்தி படிக்கும்போது, ‘அவரது சீரியலில் முகம் சுழிக்கக்கூடிய காட்சிகள் இடம்பெற்றிருந்ததாக, பார்வையாளர்கள் அளித்த புகாரை தொடர்ந்து, அந்த சீரியலை ஒளிபரப்பும் சன் டிவிக்கு பிசிசிசி ரூ.2.50 லட்சம் அபராதம் விதித்துள்ளதாக,’ தெரியவருகிறது.
ஆனாலும், இதனை சத்தியம் டிவி தெளிவாகக் குறிப்பிடவில்லை. எதோ கோபி (எ) திருமுருகனுக்கும் சேர்த்து அபராதம் விதித்து, கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டதை போலவே செய்தியின் உள்ளேயும் பொத்தாம் பொதுவாகக் குறிப்பிடுகின்றனர்.

இந்த செய்தியின் முழு உண்மை விவரத்தை தேடினோம். அப்போது ஆங்கில ஊடகங்களிலும் இதுகுறித்த செய்தி வெளியாகியிருந்ததை காண நேரிட்டது.
இதுபற்றி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் வெளியிட்டிருந்த செய்தி விவரம் ஆதாரத்திற்காக கீழே இணைக்கப்பட்டுள்ளது.

இதேபோல, தி நியூஸ் மினிட் வெளியிட்ட செய்தி விவரம் கீழே இணைக்கப்பட்டுள்ளது.

The New Indian Express News Link | The News Minute Link |
இதன்படி, சன் டிவிக்குத்தான் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. அதேசமயம், திரு பிக்சர்ஸ்க்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. ஆனால், சத்தியம் டிவி செய்தியில் தலைப்பு, கோபி (எ) திருமுருகன் பாலியல் குற்றம் செய்ததைப் போலவும், செய்தியின் உள்ளே, யாருக்கு அபராதம் விதிக்கப்பட்டது என தெளிவின்றியும் உள்ளது.
இதுதவிர, டிவி சேனல்களில் ஒளிபரப்பாகும் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளின் விதிமீறல் பற்றி விசாரித்து நடவடிக்கை எடுக்கும் அமைப்பிற்கு, Broadcasting Content Complaints Council (BCCC) எனப் பெயராகும். ஆனால், சத்தியம் டிவி செய்தியில், BCCI எனக் குறிப்பிட்டுள்ளனர். அப்படிச் சொல்வது இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தை குறிப்பதாக உள்ளது.

இதுவரை கிடைத்த ஆதாரங்களின் அடிப்படையில், மேற்கண்ட சத்தியம் டிவி செய்தியின் தலைப்பு மற்றும் கன்டென்ட் உள்ளிட்டவற்றில், வாசகர்களை குழப்பும் வகையிலான தவறான தகவல் கலந்துள்ளதாக, உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
உரிய ஆதாரங்களின்படி, நாம் ஆய்வு மேற்கொண்ட ஃபேஸ்புக் செய்தியில் பாதி உண்மை, பாதி தவறான தகவல் கலந்துள்ளதாக, நிரூபிக்கப்பட்டுள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய குழப்பமான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை உறுதிப்படுத்தாமல் மற்றவர்களுக்கு பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.

Title:பாலியல் வன்முறை, துன்புறுத்தல் காரணமாக கோபி மீது அதிரடி நடவடிக்கையா?
Fact Check By: Pankaj IyerResult: Mixture
