99 ஆண்டுகளுக்கு ஒரு முறை இமய மலையில் பூக்கும் சிவலிங்கப் பூ இதுவா!

இந்தியா | India சமூக ஊடகம் | Social சமூகம்

இமயமலைப் பிரதேசத்தில் 99 ஆண்டுகளுக்கு ஒரு முறை பூக்கும் சிவலிங்கப்பூ என்று ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

Facebook LinkArchived Link

பெரிய அளவிலான மொக்கு (மொட்டு) போன்ற மலரின் படத்தைப் பகிர்ந்துள்ளனர். அதன் மீது, “சிவலிங்கப் பூ இமயமலைப் பிரதேசத்தில் 99 ஆண்டுகளுக்கு ஒரு முறை தான் பூக்குமாம்! இதைப் பார்ப்பதே புண்ணியம்! நன்றாகப் பார்த்து தரிசனம் செய்து கொள்ளுங்கள். மற்றவர்களுக்கு பகிரவும். ஓம் நமச்சிவாய போற்றி போற்றி” என போட்டோஷாப் முறையில் எழுதப்பட்டுள்ளது.

இந்த படத்தை அன்பால் இணைவோம் ANBAL INAIVOM என்ற ஃபேஸ்புக் பக்கத்தில் Linet Linet என்பவர் 2020 ஆகஸ்ட் 9ம் தேதி பகிர்ந்துள்ளார். பலரும் இதை ஷேர் செய்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

வழக்கமாக பூக்கும் வித்தியாசமான மலர்களின் படத்தை எடுத்து, 400 ஆண்டுக்கு ஒரு முறை பூக்கும் மலர், அதிசய மலர் என்று எல்லாம் தொடர்ந்து சமூக ஊடகங்களில் வதந்தி பரப்பப்பட்டு வருகிறது. அவற்றைப் பற்றி அவ்வப்போது நம்முடைய ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் பிரிவில் செய்தி வெளியிட்டு வருகிறோம். தற்போது 99 ஆண்டுகளுக்கு ஒரு முறை மட்டும் பூக்கும் சிவலிங்கப் பூ என்று பகிர்ந்துள்ளனர். சிவனுக்கு உகந்த மலராக நாகலிங்க மலர்களைச் சொல்வது வழக்கம். இது என்ன புதிதாக சிவலிங்கப் பூ என்று பகிர்கிறார்களே, இது உண்மையா என்று ஆய்வு செய்தோம்.

400 வருடங்களுக்கு ஒரு முறை பூக்கும் மகாமேரு
400 ஆண்டுகளுக்கு ஒரு முறை மலரும் பகோடா மலர்

படத்தை ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றித் தேடியபோது இந்த தாவரம் இனத்தின் பெயர் சைக்காஸ் (Cycas) என்று தெரிந்தது. இது டைனோசரஸ் காலத்தில் இருந்தே பூமியில் வாழும் தாவரம் என்றும், பல ஆயிரம் ஆண்டுகளாக மாற்றம் அடையாமல் உள்ளது என்றும் குறிப்பிட்டிருந்தனர்.

இந்த பிரிவில் 305 வித்தியாசமான செடிகள் உள்ளன. சீனா, வியட்நாம், ஆஸ்திரேலியா, தெற்கு ஆப்ரிக்கா, மெக்சிகோவை பூர்வீகமாகக் கொண்டது என்று குறிப்பிட்டிருந்தனர். இந்தச் செடியைப் பார்க்கும்போது பெரிய பெரிய வளாகங்கள், பூங்காக்களில் அழகுக்காக வளர்க்கப்படும் தென்னை மரம் போன்ற செடி வகை போல இருந்தது.

நாம் ஆய்வுக்கு எடுத்துக் கொண்ட கூம்பு போன்ற மலரைக் கொண்ட தாவரத்துக்கு குவின் சாகோ (அறிவியல் பெயர்: Cycas circinalis) என்று பெயர் எனத் தெரிந்தது.  குவின் சாகோ மரங்கள் தென் இந்தியாவிலும் இலங்கையிலும் அதிக அளவில் காணப்பட்டாலும், உலகம் முழுக்க உள்ளன என்று தெரிந்தது. பல வெளிநாடுகளில் இந்த ஆண் மலர் வளர்ச்சி தொடர்பான வீடியோக்களை பலரும் வெளியிட்டு வருவதைக் காண முடிந்தது.

சைக்காஸ் மலர்களைப் பற்றி தாவரவியல் உலகம் என்ன சொல்கிறது என்று படித்துப் பார்த்தோம். சைக்காஸ் மேல் (ஆண்) கோன் என்று குறிப்பிட்டிருந்தனர். சைக்காஸ் வகைகளில் ஆண், பெண் என இருவகை செடி உள்ளன. இரண்டும் வெவ்வேறு விதமான இனப்பெருக்க மண்டலத்தைக் கொண்டுள்ளன. ஆண் செடியின் இனப்பெருக்க மண்டலம் கூம்பு வடிவத்திலும், பெண் செடியின் இனப்பெருக்க மண்டலம் இலை வடிவத்திலும் இருக்கும் என்று தெரிந்தது.

இந்த மலர் 99 ஆண்டுகளுக்கு ஒரு முறை பூக்கக் கூடியதா என்று பார்த்தபோது அப்படி இல்லை என்பது தெரிந்தது. இந்த செடி 15 முதல் 20 ஆண்டுகளில் பூக்க ஆரம்பிக்கும் என்று குறிப்பிட்டிருந்தனர். இதன் மூலம் பல முறை பூக்கக் கூடியது என்பதும், 99 ஆண்டுகளுக்கு ஒரு முறை பூக்கும் என்ற தகவல் தவறானது என்பது உறுதியானது. 

gardeningknowhow.comArchived Link 1
flowersofindia.netArchived Link 2

நம்முடைய ஆய்வில், சிவனுக்கு உகந்த மலர் என்று நாகலிங்க மலரைச் சொல்லும் நிலையில், சைக்காஸ் வகை மலரை சிவலிங்கப் பூ என்று குறிப்பிட்டிருப்பது உறுதியாகிறது. இந்த மலருக்கு சிவலிங்கப் பூ என்று எந்த ஒரு பெயரும் இருப்பதாக எந்த ஒரு தகவலும் நமக்கு கிடைக்கவில்லை.

இது இமயமலைப் பகுதியில் மட்டும் வளரும் என்பது தவறான தகவல் என்பதும், 99 ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே பூக்கும் என்ற தகவல் தவறானது என்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில், நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட ஃபேஸ்புக் பதிவு தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில், மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு தவறானது என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

Avatar

Title:99 ஆண்டுகளுக்கு ஒரு முறை இமய மலையில் பூக்கும் சிவலிங்கப் பூ இதுவா!

Fact Check By: Chendur Pandian 

Result: False